/

புத்திரபாக்கியம் கிடைக்க, திருமணத் தடை நீங்க பதஞ்சலி மனோகரர் கோயில், திருவிளமர்

சிவபெருமானின் ஆடலை தினமும் கண்டு அவரது திருவடியிலேயே இருப்பவர் பதஞ்சலி முனிவர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:35 pm

என்.எஸ். நாராயணசாமி

இறைவன் பெயர்: பதஞ்சலி மனோகரர்
இறைவி பெயர்: யாழினும் மென்மொழியம்மை, மதுரபாஷினி

எப்படிப் போவது

திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. விளமர் பேருந்து நிறுத்தத்துக்கு அருகிலேயே கோவில் உள்ளது. இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு பதஞ்சலி மனோகரர் திருக்கோயில்,
விளமர், விளமர் அஞ்சல்,
திருவாரூர் (வடக்கு),
திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610 002.

இவ்வாலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Story image

சிவபெருமானின் ஆடலை தினமும் கண்டு அவரது திருவடியிலேயே இருப்பவர் பதஞ்சலி முனிவர். அவர் தினமும் நடராஜப் பெருமானின் நடனத்தைக் கண்டபின்தான் உணவு உட்கொள்வார். இறைவனுக்கு தினமும் மரத்தில் ஏறிப் பூ பறிப்பதற்காக புலியின் கால்களை வேண்டி வரமாகப் பெற்றவர். வியாகர பாதர், இவரும் பதஞ்சலி முனிவரும் இறைவனின் அஜபா நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண வேண்டி வழிபட்டனர்.

Story image

மேலும், திருவடி தரிசனத்தை காண்பித்து அருள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இவர்கள் இருவருக்கும் இத்தலத்தில் சிவபெருமான் தனது திருப்பாதம் காட்டி நடனம் ஆடியருளினார். இந்த தரிசனத்தை விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்கள் கண்டுகளித்தனர். சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்துக்கு இன்றளவும் தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே, இத்தலம் திருவடிக்ஷேத்திரம் என்றும், சிவபாதஸ்தலம் என்றும் போற்றப்படுகிறது.

Story image

ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோயில் எதிரில் உள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. முகப்பு வாயிலின் இருபுறமும் விநாயகரும் முருகனும் வீற்றிருக்கின்றனர். உள்ளே நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். கோவில் முன் மண்டபத்தில் பதஞ்சலி முனிவரின் திருஉருவம் உள்ளது. வியாக்ரபாத முனிவர், சூரியன் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். அவர்களின் சந்நிதியும் இக்கோவிலில் உள்ளது.

Story image

இறைவன் கிழக்கு நோக்கி மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும்போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது தீபஜோதியாக தெரிவதைக் காணலாம். கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. இத்தலத்திலுள்ள ராஜதுர்க்கை, எட்டு கைகளுடன் சூலமும் கிளியும் தாங்கி சிம்ம வாகனத்துடன் காட்சி அளிக்கிறாள். ராகு, கேது, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இவளை வழிபடுகின்றனர்.

Story image

பைரவருக்கு தனி சந்நிதி இருப்பது இக்கோவிலின் மற்றொரு சிறப்பம்சமாகும். பைரவரை தேய்பிறை, அஷ்டமி நாட்களில் வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். பைரவர் இத்தலத்தில் நவகோள்களின் அதிபதியாக க்ஷேத்ரபாலகராக இருப்பதால், இங்கு நவகிரக சன்னதி கிடையாது. விநாயகர் கையில் மத்தக மணியுடன் அருள்பாலிக்கிறார். விஷ்ணுவின் தலையில் சிவனின் திருவடி இருப்பதும், எம சண்டிகேஸ்வரர் வித்தியாசமாக அமர்ந்திருப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

புத்திரபாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள், கல்வியில் மேன்மையடைய விரும்புவர்கள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு அன்னம் சாத்தி வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தொழில் சிறக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. சக்தி பீடங்களில் இத்தலம் வித்யாபீடமாக இருப்பதால், குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் முன்பு இங்குள்ள அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறை இங்கு உள்ளது.

Story image

வாய் பேச முடியாதவர்கள், திக்குவாய் உள்ளவர்கள், இறைவி மதுரபாஷினி அம்மனை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம். மேலும், புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை நாளில் முன்னோர்க்குத் தர்ப்பணம் செய்து, விளம்பல் பதஞ்சலி, மனோகரரை வழிபடுவது மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது.

திருஞானசம்பந்தர், இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள இப்பதிகம்  3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

மத்தக மணிபெற மலர்வதோர் மதிபுரை நுதல்கரம்
ஒத்தக நகமணி மிளிர்வதோர் அரவினர் ஒளிகிளர்
அத்தக வடிதொழ அருள்பெறு கண்ணொடும் உமையவள்
வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே.  

பட்டில கியமுலை அரிவையர் உலகினில் இடுபலி
ஒட்டில கிணைமர வடியினர் உமையுறு வடிவினர்
சிட்டில கழகிய பொடியினர் விடைமிசை சேர்வதோர்
விட்டில கழகொளி பெயரவர் உறைவது விளமரே.  
 
அங்கதிர் ஒளியினர் அரையிடை மிளிர்வதோர் அரவொடு
செங்கதி ரெனநிற மனையதோர் செழுமணி மார்பினர்
சங்கதிர் பறைகுழல் முழவினொ டிசைதரு சரிதையர்
வெங்கதி ருறுமழு வுடையவ ரிடமெனில் விளமரே.  
 
மாடம தெனவளர் மதிலவை யெரிசெய்வர் விரவுசீர்ப்
பீடென வருமறை யுரைசெய்வர் பெரியபல் சரிதைகள்
பாடலர் ஆடிய சுடலையில் இடமுற நடம்நவில்
வேடம துடையவர் வியன்நக ரதுசொலில் விளமரே.
 
பண்டலை மழலைசெய் யாழென மொழியுமை பாகமாக்
கொண்டலை குரைகழ லடிதொழு மவர்வினை குறுகிலர்
விண்டலை யமரர்கள் துதிசெய அருள்புரி விறலினர்
வெண்டலை பலிகொளும் விமலர்தம் வளநகர் விளமரே.  

மனைகள்தோ றிடுபலி யதுகொள்வர் மதிபொதி சடையினர்
கனைகடல் அடுவிடம் அமுதுசெய் கறையணி மிடறினர்
முனைகெட வருமதில் எரிசெய்த அவர்கழல் பரவுவார்
வினைகெட அருள்புரி தொழிலினர் செழுநகர் விளமரே.  
 
நெறிகமழ் தருமுரை யுணர்வினர் புணர்வுறு மடவரல்
செறிகமழ் தருமுரு வுடையவர் படைபல பயில்பவர்
பொறிகமழ் தருபட அரவினர் விரவிய சடைமிசை
வெறிகமழ் தருமலர் அடைபவர் இடமெனில் விளமரே.

தெண்கடல் புடையணி நெடுமதில் இலங்கையர் தலைவனைப்
பண்பட வரைதனில் அடர்செய்த பைங்கழல் வடிவினர்
திண்கட லடைபுனல் திகழ்சடை புகுவதோர் சேர்வினார்
விண்கடல் விடமலி யடிகள்தம் வளநகர் விளமரே.

தொண்டசை யுறவரு துயருறு காலனை மாள்வுற
அண்டல்செய் திருவரை வெருவுற ஆரழ லாயினார்
கொண்டல்செய் தருதிரு மிடறின ரிடமெனில் அளியினம்
விண்டிசை யுறுமலர் நறுமது விரிபொழில் விளமரே.
 
ஒள்ளியர் தொழுதெழ வுலகினில் உரைசெயு மொழிபல
கொள்ளிய களவினர் குண்டிகை யவர்தவம் அறிகிலார்
பள்ளியை மெய்யெனக் கருதன்மின் பரிவொடு பேணுவீர்
வெள்ளிய பிறையணி சடையினர் வளநகர் விளமரே.  

வெந்தவெண் பொடியணி யடிகளை விளமருள் விகிர்தரைச்
சிந்தையுள் இடைபெற வுரைசெய்த தமிழிவை செழுவிய
அந்தணர் புகலியுள் அழகமர் அருமறை ஞானசம்
பந்தன மொழியிவை உரைசெயு மவர்வினை பறையுமே.  

இத்தலம் பற்றி சம்பந்தர் அருளிய தேவாரம் - பாடியவர்கள் சண்முக சிவவிஷ்ணு மற்றும் மோ.தமிழரசு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.