ஆ.மாதவன் சிறுகதைகள்
‘மாதவனின் படைப்புலகில் அறம் பற்றிய எந்த அலட்டலும் இல்லாமலேயே மனிதனின் சுபாவம் சித்தரிக்கப்படுகிறது.


‘மாதவனின் படைப்புலகில் அறம் பற்றிய எந்த அலட்டலும் இல்லாமலேயே மனிதனின் சுபாவம் சித்தரிக்கப்படுகிறது. அது தீமை எனில் இயற்கை; நன்மை எனில் அதுவும் இயற்கை என்ற பாரபட்சமற்ற பின்னணியிலேயே உருவாகிறது அந்த உலகம்.’
ஒரே வாக்கியத்தில் சொல்வதானால் ஆ. மாதவனின் படைப்புலகை தீமையின் அழகியல் என்று சொல்லலாம். தீமையின் அழகியலை இதுவரை தமிழில் எழுதியவர்கள் எனக் கருதப்படுபவர்கள் ஜி. நாகராஜனும் ஜெயகாந்தனும். ஆனால் அவர்களிடம் உள்ள romanticism மாதவனிடம் இல்லை. மட்டுமல்லாமல் உலக இலக்கியத்தில் தீமையின் அழகியலை எழுதியவர்கள் என மூன்று பேரைச் சொல்லலாம். ஆங்கிலத்தில் சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி, அரபியில் முகம்மது ஷுக்ரி, ஃப்ரெஞ்சில் ஜான் ஜெனே. இந்த மூவரை விடவும் ஆ. மாதவன் முக்கியமானவர் என்று கருதுகிறேன்.’ – சாரு நிவேதிதா (பழுப்பு நிற பக்கங்கள்)
ஒரு எழுத்தாளரின் ஒட்டுமொத்த படைப்பு ஒரே புத்தகத்தில் படிக்கக் கிடைப்பது ஒரு பேரானுபவம். வெவ்வேறான காலகட்டத்தில் வெவ்வேறு மனநிலையில் ஒரு எழுத்தாளரின் மன உலகை தரிசனம் செய்ய அது உதவும். ஆ.மாதவன் அனைவரும் அறிந்த எழுத்தாளரா என்றால் நிச்சயம் சமீபத்தில் அனைவரும் அறிந்த எழுத்தாளர் தான். காரணம் ’இலக்கிய சுவடுகள்’ என்ற அவருடைய நூலுக்கு 2015-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்த பின் யார் ஆ.மாதவன் என்று தேடிப் பிடித்துப் படித்த இலக்கிய ஆர்வலர்களை நானறிவேன். உண்மையில் ஜெயமோகன் தவிர்த்து ஆ.மாதவன் பற்றிய சரியான அறிமுகம் யாரும் செய்ய வில்லை என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் சாரு நிவேதிதா தினமணி இணையதளத்தில் பழுப்பு நிற பக்கங்களில் ஆ.மாதவன் குறித்து விரிவான கட்டுரை எழுதிய பின்னரே சம காலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் ஆ.மாதவன் படைப்புலகம் பற்றி பலருக்குக் கவனம் கிடைத்தது.
ஆ.மாதவன் சிறுகதைகளை வாசிக்கையில் சொல்ல முடியாத ஒரு துயரமும் இயலாமையும் ஒருவித கையறு நிலையும் ஏற்படும். மனித மனங்களின் இருட்டடைந்த பகுதியை நேரடியாகப் பார்ப்பது போல அப்பட்டமான எழுத்துக்கள் அவருடையது. எல்லோரும் நல்லவரே என்ற ஃபீல் குட் விஷயங்கள் எல்லாம் அவருடைய கதைகளில் எங்குமே காணக் கிடைக்காது. ராஜா மகள் என்ற ஒரு கதையில் ஒரு அறிவார்ந்த ஒரு பெண்ணின் மனநிலை பற்றி அலசும் ஒரு கதாபாத்திரத்தைச் சித்தரித்திருப்பார். ஜானகி என்ற அந்தப் பெண்ணின் மீது ஒரு இனம் தெரியாத ஈடுபாடும் அவள் அறிவின் மீது ஈர்ப்பும் உடைய கதை நாயகன் அவள் மூன்றாவதாக ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ்வதைக் கண்கூடாகக் கண்டபின் அவளிடமிருந்து ஒரேடியாக விலக நினைத்து ஓட்டம் பிடிப்பான்.
தமிழ் இலக்கியத்தில் முக்கியமான சிறுகதைகளை யாரேனும் தொகுத்தால் அதில் நிச்சயம் ஆ.மாதவனின் பல கதைகள் இடம்பெற வேண்டும். அவருடைய கதாபாத்திரங்கள் யாவரும் அன்றாட வாழ்வில் நாம் சந்திப்பவர்கள் தான். வாழ்க்கையின் பாடுகளைச் சந்தித்து திக்கித் திணறும் சராசரி மனிதர்களும், விளிம்பு நிலை மாந்தர்களுமே அவருடைய கதாபாத்திரங்கள். அவர்களுடைய சுபாவங்களை உள்ளது உள்ளபடி எழுதிச் செல்வதுதான் அவரது எழுத்தின் சாரம். அறம், நீதி, மனிதன் உயர்ந்தவன் போன்ற பொதுமையிலிருந்து மாறி அதற்கு நேர் எதிராக அவர் சுட்டிக் காட்டிய மனிதர்கள் சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்பவர்கள் தான். குணக்கேடுகளும், சிறுமைகளும் சேர்ந்துதான் அவன் மனிதன், அவனுடைய மனசாட்சியைக் குடைந்து பார்த்தால் சிக்கும் உணர்வுகளே பெரும்பான்மையான அவருடைய புனைவுகள்.
பிச்சைக்காரன், திருடன், சந்தர்ப்பவாதி, துரோகி, பெண் பித்தன், சுயநலம் மிக்கவன், கொலைக்காரன், விபத்தில் சிக்கி உயிர் இழந்தவன் என சமூகத்தின் குறுக்கு வெட்டாக மனிதர்கள் அனைவரையும் உன்னதமான எழுத்தில் காட்சிபடுத்தியிருப்பார். சுய விளம்பரம், தம்பட்டம், ஆர்ப்பாட்டங்கள் என எதுவும் இல்லாமல் எழுதுவது ஒன்றையே எழுத்துக்காகவே தன்னை அர்ப்பணித்தவர் என்பதை அவரை வாசிப்பவர்கள் அறிவார்கள். அவரைப் பற்றி சுருக்கமாகச் சொல்வதென்றால், அவர் திருவனந்தபுரத்திலுள்ள சாலைத் தெருவில் ஒரு சிறிய கடையை வாழ்வாதாரமாகக் கொண்டு நடத்தி வருகிறார். தமிழ் நவீன சிறுகதை இலக்கியங்களில் குறிப்பிடத்தகுந்த இடம் பெற்றுள்ள ஆ,மாதவன், சாலைத் தெரு என்ற அக்கடைத்தெருவில் தன் கண்ணுக்கு எதிரே நிகழும் சம்பவங்களைத் தான் அவதானித்து எழுதிச் செல்கிறார்.
Every Dog has its day என்ற சொலவடையைப் மெய்ப்பிக்கும விதமாக ஆ.மாதவனின் கதைகள் நம்மை நீண்ட இருள் வெளிகளுக்கு இட்டுச் சென்றாலும் வாசிக்கும் போது மனம் பதறி சமன்நிலைத் தவறினாலும் இறுதியில் இது இப்படித்தான் இவர்கள் இப்படியாக சபிக்கப்பட்டவர்கள் என்ற தெளிவும் வாசகருக்குள் ஏற்படுத்த அவர் தவறுவதில்லை. ஒரு இலக்கிய பிரதியை எப்படி அணுக வேண்டும் என்பதை அறிந்தவன் வாழ்க்கையை எளிதில் கடக்க முடியும். அதற்கு இந்த நூல் நிச்சயம் எளிய கையேடாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஆ.மாதவன் சிறுகதைகள் கிடைக்குமிடம் –
நற்றிணை பதிப்பகம்
6/84. மல்லன் பொன்னப்பன் தெரு
திருவல்லிக்கேணி
சென்னை – 6000005
தொலைபேசி – 9486177208, 044 2842818
தத்துவ சிந்தனையாளர்களை முற்போக்காளர்களை நோக்கி உறுமுகிறான். ”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...