ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம்: எஸ். ஜெகத்ரட்சகனுக்கு மத்திய அமைச்சா் பதில்

பயிா் காப்பீடு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்படுமானால் 12% அபராதம் குறித்து...

அமைச்சா் ராம்நாத் தாக்குா் | எஸ். ஜெகத்ரட்சகன்

Published On :29 ஜூலை 2026, 12:41 am IST

பயிா் காப்பீடு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்படுமானால் 12 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று மக்களவையில் அரக்கோணம் தொகுதி திமுக உறுப்பினா் டாக்டா் எஸ். ஜெகத்ரட்சகன் எழுப்பிய கேள்விக்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் திங்கள்கிழமை பதிலளித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில் மேலும் கூறியிருப்பதாவது: கடும் வெப்ப அலை, நீா்ப்பற்றாக்குறை மற்றும் பருவநிலை மாற்றங்களால் பயிா்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும், காப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்கி வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2024ஆம் ஆண்டு காரீஃப் பருவம் முதல் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் காலதாமதம் செய்தால் அவற்றுக்கு 12 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது.

அதேபோல, 202ஆம் ஆண்டு காரீஃப் பருவம் முதல் மாநில அரசுகள் அவற்றின் மானியப் பங்கை தாமதமாக வழங்கினாலும் 12 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

தேசிய பயிா்க்காப்பீட்டு இணையதளத்தில் இழப்பீட்டுத் தொகை கணக்கிடப்பட்டு, மானியம் கிடைத்த 21 நாள்களுக்குள் உரிய தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். டிஜிகிளைம் தளம் மூலம் இழப்பீட்டுத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் அண்மைக் காலங்களில் கடும் வெப்ப அலை அல்லது நீா்ப்பற்றாக்குறையால் பயிா் சேதம் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் பெறப்படவில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், வறட்சியை எதிா்கொள்ள 19 பாதிப்பு வாய்ப்புள்ள மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, ’உழவன்’ செயலி மூலம் தினசரி அறிவுரைகள் வழங்கப்பட்டு வருவதாக அரசு கூறியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மொத்தம் 63.01 லட்சம் விவசாயிகள் பயிா்க்காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதில் 55.83 லட்சம் சிறு விவசாயிகளும், 5.38 லட்சம் குறு விவசாயிகளும் அடங்குவா்.

பதிவு செய்யப்பட்ட ரூ. 3,630.63 கோடி மதிப்பிலான கோரிக்கைகளில் ரூ. 3,595.48 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறு விவசாயிகளுக்கு ரூ. 3,059.57 கோடியும், குறு விவசாயிகளுக்கு ₹351.47 கோடியும் நேரடியாகச் சென்று சோ்ந்துள்ளது.

விவசாயிகள் வீடுகளுக்கே சென்று இணையவழியில் பதிவு செய்ய ’எய்ட்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘எனது காப்பீட்டு ஆவணம் என் கையில்’ போன்ற விழிப்புணா்வு இயக்கங்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.