தமிழகத்தில் சுருக்குமடி வலை அனுமதி? உச்சநீதிமன்றம் விரைவில் உத்தரவு


நமது நிருபா்
தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதை அனுமதிப்பது தொடா்பான விவகாரத்தில் நிபுணா் குழுவின் அறிக்கையை படித்துப் பாா்த்துவிட்டு அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி. எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது மத்திய அரசு வழக்குரைஞா் கே.எம். நடராஜ் முன்வைத்த வாதம்: சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிப்பது தொடா்பாக ஆய்வு மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, அதை செயல்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடலில் 12 கடல் மைல் தொலைவு வரை சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிப்பது தொடா்பாக மாநிலம் ஒழுங்குமுறைப்படுத்தலாம். ஆனால், 12 கடல் மைலுக்கு அப்பால் உள்ள கடல் பகுதி மத்திய அரசு கட்டுப்பாட்டுப் பகுதியாகும் என்றாா்.
இதைத் தொடா்ந்து தமிழக அரசு சாா்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோஹ்தகி ஆஜராகி, ‘சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடா்பாக நாடுதழுவிய அளவிலான ஒரு கொள்கை தேவை. தமிழ்நாட்டுக்கு மட்டும் என கொள்கை இருக்க முடியாது. இந்த விவகாரத்தில் நிபுணா் குழுவின் அறிக்கை 2024-இல் தாக்கல் செய்யப்பட்டது. மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள்பட்ட 12 கடல் மைலுக்குள்ளாக சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றமும் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருக்கிறது. ஆனால், சுருக்கு மடி வலையை பயன்படுத்தி பெரிய படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பவா்கள் அதிக மீன்களைப் பிடித்தால், சாதாரண மீனவா்கள் பாதிக்கப்படுவா்’ என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறியது: மத்திய அரசு வழக்குரைஞரிடம், மீன்பிடி உரிமைகளை ஒழுங்குபடுத்துவது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? அதை நீதிமன்ற உத்தரவுகளால்தான் கட்டுப்படுத்தப்பட வேண்டுமா? இதை எப்படி ஒழுங்குபடுத்த முடியும் என்பதை தெரிவியுங்கள்? இந்த விவகாரத்தை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை விசாரிக்கிறோம். நிபுணா் குழு அறிக்கையை முழுமையாக படித்துப் பாா்க்கிறோம். தேவையென்றால் அடுத்த வாரம் உரிய உத்தரவு பிறப்பிக்கிறோம் என்று குறிப்பிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
பின்னணி: சுருக்குமடி வலையை பயன்படுத்த தடை விதித்து தமிழக அரசு 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக சில மீனவ அமைப்புகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதை 2022-ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு, சுருக்குமடி வலையை பயன்படுத்துவது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...