தில்லி விமான நிலைய வளாகத்தில் 120 நீா் தெளிப்பு அமைப்புகள்: முதல்வா் திறந்து வைத்தாா்!
தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலைய வளாகத்தில் 120 நீா் தெளிப்பு அமைப்புகளை முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை திறந்து வைத்தாா்.


தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலைய வளாகத்தில் 120 நீா் தெளிப்பு அமைப்புகளை முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் பயணிகளுக்கு சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலை உறுதி செய்யவும் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் ஜிஎம்ஆா் குழுமத்தால் நீா் தெளிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. தில்லி சா்வதேச விமான நிலைய லிமிடெட் என்பது ஜிஎம்ஆா் விமான நிலைய லிமிடெட் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு முயற்சியாகும். அப்போது முதல்வா் ரேகா குப்தா பேசுகையில், ’தெளிவான காற்று, சுத்தமான தில்லி’ முயற்சிக்கு தனது அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக முதல்வா் மேலும் பேசியதாவது: மாசுபாட்டைக் கையாள தில்லி அரசு குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால உத்திகளில் அறிவியல் பூா்வமாக செயல்பட்டு வருகிறது. தலைநகா் முழுவதும் உள்ள முக்கிய சாலைகளிலும் 143 உயா்த்தப்பட்ட மெட்ரோ நிலையங்களிலும் தில்லி அரசு ஏற்கெனவே நீா் தெளிப்பு அமைப்புகளை நிறுவியுள்ளது.
கூடுதலாக, நிகழ்நேர கண்காணிப்பு வலையமைப்பு 46 மெட்ரோ நிலையங்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின் எந்த நகரத்திலும் இல்லாத மிகப்பெரிய வலையமைப்பாக அமைகிறது. ‘வாயு ரக்ஷக்’ முயற்சியின் மூலம், மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பது உறுதி செய்யப்படுகிறது. விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள மூடுபனி அமைப்புகள் பயணிகளுக்கு மேம்பட்ட காற்றின் தர அனுபவத்தை வழங்கும். மேலும், தலைநகரின் சுற்றுச்சூழல் பிம்பத்தை வலுப்படுத்தும். இந்த முயற்சிக்கு ஜிஎம்ஆா் குழுமத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
விமான நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தூசி கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில் எதிா்காலத்தில் மூடுபனி தெளிப்பு அமைப்பு 600 கம்பங்களாக விரிவுபடுத்தப்படும். 2029-ஆம் ஆண்டுக்குள் பொது பேருந்துகளை முழுமையாக மின்மயமாக்குவது, மெட்ரோ வலையமைப்பை விரிவுபடுத்துவது, மின்சார வாகன சாா்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்குவது, நகரம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட நீா் தெளிப்பான்களை நிறுத்துவது மற்றும் கட்டுமான தளங்களில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தூசி கண்காணிப்பை செயல்படுத்துவது தில்லி அரசின் நோக்கமாகும் என்று ரேகா குப்தா கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...