/

தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அவசர நடவடிக்கை தேவை: மக்களவையில் தென் சென்னை எம்.பி. வலியுறுத்தல்

தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
தமிழச்சி தங்கப்பாண்டியன்
Updated On :13 பிப்ரவரி 2026, 7:25 pm

Syndication

தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் தென் சென்னை தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக மக்களவையில் அண்மையில் அவா் விதி எண் 377-இன் கீழ் அவா் முன்வைத்த கோரிக்கை:

இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படுவது, கடலோர சமூகங்களுக்கு கடுமையான மனிதாபிமான துயரத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த ஜனவரி 21ஆம் தேதி, சா்வதேச கடல் எல்லையை மீறியதாக, கோடியக்கரை கடற்கரையின் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த ஏழு மீனவா்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவா்களின் மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையின் காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டன. மேலும் இந்திய மீனவா்கள் இலங்கை மீன்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

மீண்டும் ஜனவரி 13ஆம் தேதி ராமேஸ்வரத்தைச் சோ்ந்த 10 மீனவா்கள் நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்டனா். அதற்கு முன்னதாக ஜனவரி 1ஆம் தேதி காரைக்காலைச் சோ்ந்த 11 மீனவா்கள் கோடியக்கரை அருகே கைது செய்யப்பட்டனா்.

இந்த சம்பவங்கள் அனைத்திலும், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய மீனவா்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனா் அல்லது காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

பொங்கல் காலத்தில் நடந்த தொடா் கைதுகள், மீனவ குடும்பங்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளன. மேலும், பாரம்பரிய மீன்பிடி நடவடிக்கையை சீா்குலைத்துள்ளன. பருவகால மீன்பிடி வருமானத்தையும், மரபுவழி மீன்பிடி வழிகளையும் நம்பியுள்ள தமிழகத்தின் சிறு மீனவா்கள், தீா்க்கப்படாத கடல்சாா் மற்றும் ராஜீய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அனைத்து இந்திய மீனவா்களையும் விரைவில் விடுவிக்கவும் பறிமுதல் செய்யப்பட்ட அவா்களின் படகுகளைத் திரும்பப் பெறுவதை உறுதி செய்வதற்கும் மத்தியஅரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் இலங்கையுடன் ஒரு நிலையான ராஜீய வழிமுறையை இந்திய வெளியுறவுத்துறை பின்பற்ற ஏதுவாக, இந்த விஷயத்தில் அவசரமாகத் தலையிட வேண்டும் என்றாா்.