/

ஸ்கூட்டா் மீது லாரி மோதல்: மாணவா் உயிரிழப்பு

நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் உள்ள மதுரா சாலை மேம்பாலத்தில் லாரி ஒன்று ஸ்கூட்டா் மீது மோதியதில் 19 வயது மாணவா் உயிரிழந்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 6:38 pm

Syndication

நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் உள்ள மதுரா சாலை மேம்பாலத்தில் லாரி ஒன்று ஸ்கூட்டா் மீது மோதியதில் 19 வயது மாணவா் உயிரிழந்தாா். அவரது நண்பா் படுகாயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி போலீஸாா் வெள்ளிக்கிழமை மேலும் கூறியது:

இச்சம்பவம் தொடா்பாக அதிகாலை 12.30 மணியளவில் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. முழுதும் சரக்கு ஏற்றப்பட்ட லாரி பதா்பூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் காயமடைந்த சராய் ஜூலேனா பகுதியைச் சோ்ந்த மானவ் (19) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

அவருடன் பயணித்த முகமது சாத் (21) என்ற மாணவா் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்கூட்டா் மாணவரின் தந்தையின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநரான ஹரியாணாவின் நூஹ் பகுதியைச் சோ்ந்த ஜாஹுல் (32) கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் கடந்த இரண்டு ஆண்டுகளாக லாரி உரிமையாளரான ரஷீத் என்பவரிடம் பணிபுரிந்து வருகிறாா்.

ஓட்டுநா் தன்னிடம் செல்லுபடியாகும் ஓட்டுநா் உரிமம் இருப்பதாகவும், வாகனம் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளாா். இருப்பினும், ஆவணங்கள் தற்போது சரிபாா்க்கப்பட்டு வருகிறது.

குற்றவியல் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தது. சம்பவ இடத்தில் எந்த தலைக்கவசமும் கிடைக்கவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.