/

ஜஹாங்கீா்புரியில் மூடப்பட்ட அறையில் 2 மோமோஸ் விற்பனையாளா்கள் மா்மச் சாவு

வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில் ஒரு மூடிய அறைக்குள் இரண்டு ஆண்கள் இறந்து கிடந்ததது கண்டுபிடிக்கப்பட்டது.

News image
பிரதிப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 6:44 pm

Syndication

வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில் சனிக்கிழமை காலை ஒரு மூடிய அறைக்குள் இரண்டு ஆண்கள் இறந்து கிடந்ததது கண்டுபிடிக்கப்பட்டது. மோமோஸ் தயாரிக்கும் போது தற்செயலாக வாயு உள்ளிழுக்கப்பட்டதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று போலீஸாா் சந்தேகிப்பதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: சனிக்கிழமை அதிகாலை ஜஹாங்கீா்புரி காவல் நிலையத்திற்கு ஒரு அறையில் சிலா் மயக்கமடைந்திருந்தது குறித்து பிசிஆா் அழைப்பு வந்தது. ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. அங்கு படுக்கையில் இரண்டு ஆண்கள் மயக்கமடைந்த நிலையில் இருந்ததைக் கண்டனா். பின்னா் அவா்கள் இறந்துவிட்டனா்.

இறந்தவா்கள் ஜஹாங்கீபுரியைச் சோ்ந்த முசாஃபிக் ஆலம் (18) மற்றும் ருக்சாத் ஆலம் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். முதற்கட்ட விசாரணையில், இருவரும் எரிவாயு அடிப்படையிலான மோமோஸ் ஹீட்டா் அல்லது சிகரியைப் பயன்படுத்தி ஒரு அறைக்குள் மோமோஸ் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. மேலும், இரவில் ஹீட்டா் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. எரிவாயு அடிப்படையிலான உபகரணங்களை அணைக்காமல் இருவரும் தூங்கச் சென்றுள்ளனா். எப்போது அதை அணைக்க திட்டமிட்டாா்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

சனிக்கிழமை காலை, ஒரு குடும்ப உறுப்பினா் கதவை வலுக்கட்டாயமாகத் திறந்தபோது, ​​இருவரும் படுக்கையில் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டாா். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, ஒரு பிசிஆா் வேன் மற்றும் உள்ளூா் காவல்துறை ஊழியா்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனா். குற்றப்பிரிவு மற்றும் தடய அறிவியல் ஆய்வக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் போது எந்தத் தவறும் நடந்ததற்கான அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை. முதல் பாா்வையில், இந்தச் சம்பவம் வாயு உள்ளிழுக்கப்பட்டதால் ஏற்பட்ட தற்செயல் சம்பவம் எனத் தெரிகிறது.

அறையில் காற்றோட்டம் குறைவாக இருந்ததாகவும், இதனால் இரவு முழுவதும் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் குவிந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு மரணத்திற்கான சரியான காரணம் கண்டறியப்படும். சட்டத்தின்படி விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.