மாம்பழங்கள் சுவையாக இருந்தால் வெறுப்பவர் யார்? எல்லோருக்குள்ளும் இருக்கிறது சுவையான மாம்பழ தாகம். ஆனால் இப்போது சந்தைக்கு வரும் மாம்பழங்கள் சுவையாக இருக்கின்றன. கார்பைட் கல் வைத்துப் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களில் சுவையை எதிர்பார்ப்பது கூட மடத்தனம். கடந்த ஆண்டு கூட ஓரளவுக்கு மாம்பழ சீசனான மே, ஜூன் மாதங்களில் கடைகள் தோறும் ஓரளவுக்கு மாம்பழங்கள் குவிந்திருந்தன. அவை சுவையானவையா? சுவையற்றவையா? என்பது தாண்டி கண்களுக்குக் குளிர்ச்சியாக கடைகள் தோறும் ரகம், ரகமாக மாம்பழங்கள் அடுக்கப்பட்டிருந்த காட்சி கண்களுக்கு விருந்தாகின. ஆனால், பாருங்கள் இந்த ஆண்டு இதோ மே முதல் வாரம் கடந்து விட்டது. இப்போதும் கூட கண்ணுக்கு குளிர்ச்சியாக குவியல், குவியலாக மாம்பழங்களைக் காண முடியவில்லை.