காலையில் 8 மணி முதல் 9 மணிக்குள் காலை உணவைச் சாப்பிட்டு விடுங்கள். காலை உணவாக முளைகட்டிய பயிறுகளை சாப்பிடலாம். முளை கட்டிய பயிறுகளில் உடல் ஆரோக்யத்துக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் பூரணமாக இருக்கின்றன. அவற்றை காலையில் உட்கொள்வதால் மூளை சுறுசுறுப்படைவதுடன் உடல் இயங்க போதிய ஆற்றலும் கிடைத்து மதிய உணவு நேரம் வரை பசியுணர்வும், சோர்வும் இல்லாமலும் இயங்க முடியும். எந்தெந்தப் பயிறுகளை முளை கட்டுவதென்றால் பாசிப்பயிறு, உளுந்து, கேழ்வரகு, கம்பு, முக்கடலையுடன் சிறிது வெந்தயத்தையும் முளைகட்டி எடுத்துக் கொள்ளலாம். பாசிபயிறில் புரதம் அதிகமிருக்கிறது, கம்பில் கால்சியச் சத்து அதிகமுண்டு, கேழ்வரகில் இரும்புச்சத்து போதுமான அளவு இருக்கிறது. இவற்றோடு வெந்தயம் எடுத்துக் கொண்டால் போதிய நார்ச்சத்தும் கிடைத்து விடும். முளைகட்டிய பயிறுகளை அப்படியே சாப்பிட போர் அடித்தால் அதில் கொஞ்சல் எலுமிச்சைச் சாறு பிழிந்து, சிறிது அரிந்த சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டுத் துறுவல் இட்டு உப்பும், மிளகும் அளவாகத் தூவியும் சாப்பிடலாம். சுவையாக இருப்பதோடு சலிக்காமலும் இருக்கும். முளைகட்டிய பயிறு சாப்பிட சலிப்பாக இருந்தால் ஒரு நாள் முளை கட்டிய பயிறு வகை மறுநாள் சத்தான காய்கறி சாலட்டுகள் என மாற்றி மாற்றியும் சாப்பிட்டுக் கொள்ளலாம். காய்கறி சாலட்டுக்கு கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளைப் பயன்படுத்தலாம்.