உச்சியிலிருந்து தொடங்கு - 6
சில பணிகள் தற்கொலையைத் தூண்டும்படி இருக்கின்றன. மருத்துவத்துறை, மனவியல் போன்றவற்றில் ஈடுபடுகிறவர்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. யாரெல்லாம் பிரச்னைகளை இரும்புச் சுவர்களாக


உச்சியிலிருந்து தொடங்கு - 6
கவலை அளிக்கக் கூடிய நிகழ்வுகள் சிலரைத் தற்கொலைக்குத் தூண்டுகின்றன. தற்கொலை முயற்சியில் தோல்வியடைந்தவர்கள் மற்ற மனவியல் பிரச்னைகளை விட அதிகமாக கவலையளிக்கக் கூடிய நிகழ்வுகள் தங்கள் வாழ்வில் நடந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த நிகழ்வுகள் எல்லாரையும் ஒரே மாதிரி பாதிப்பதில்லை. சின்ன வயதிலிருந்தே எப்படி வளர்க்கப்படுகிறார்கள் என்பது ஒருவருடைய ஆளுமையைத் தீர்மானிக்கிறது. சிலர் எவ்வளவு பெரிய சவாலையும் உடையாத உள்ளத்தோடு ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் குடும்பமே அப்படித் துணிச்சலுடன் துலங்குவதைக் காணலாம். பெற்றோர்கள் திடமானவர்களாக இருந்தால், குழந்தைகளும் அவ்வாறே இருக்கின்றார்கள்.
குஜராத் மாநிலத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பூகம்பத்தில் ஒருவர் தன்னுடைய வீட்டைவிட்டு வெளியே போயிருந்த சமயம் வீடு இடிந்து விழுந்து மனைவி, குழந்தைகள் அனைவரும் மரணமடைந்தார்கள். ஆனால் அவரோ இழப்புகளைத் தாங்கியதோடு, மீண்டும் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளோடு குதூகலமாக வாழத் தொடங்கினார். 2001ஆம் ஆண்டு நடந்த பூகம்பத்தில் அவரைத் தவிர ஒட்டுமொத்த குடும்பமும் இடிபாடுகளில் சிக்கி இறந்து போனார்கள். "பட்ட காலிலேயே படும்' என்பதற்கொப்ப அவருடைய வாழ்வில் நடந்த இந்த அசம்பாவிதம் அவரைப் பாதித்தாலும் அவர் நொடிந்து போனாரே தவிர, இடிந்து போகவில்லை. நான் அகமதாபாத் சென்றபோது அவரைப் பார்க்க நேர்ந்தது.
வாணியம்பாடி சென்றபோது அங்கிருக்கும் ஒரு கல்லூரியில் மாணவர்கள் விடுதியில் ஒருவர் மேற்பார்வை பார்ப்பதாக அறிமுகப்படுத்தினார்கள். அவரோ யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பிறகு அவர்களே அவர் இல்லாதபோது அவருடைய குடும்பத்தில் ஒருவர் விடாமல் பூகம்பத்தில் மடிந்து போனதாகச் சொல்லி அவர் சகஜ நிலைமைக்குத் திரும்பவே வாணியம்பாடிக்கு அழைத்து வரப்பட்டதாகக் குறிப்பிட்டார்கள்.
சில நேரங்களில் நாம் மிகவும் நேசிப்பவர்கள் மரணமடைந்தால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சுனாமி, பூகம்பம், புயல் போன்றவற்றில் ஏற்படும் மனஅழுத்தமும் சிலரை விரக்தி மனப்பான்மைக்கு விரட்டுகிறது.
மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் என்கிற பகுதி பிட்யூட்டரி சுரப்பியைப் பாதிக்க, மனஅழுத்தத்தைக் குறைக்கும் ஹார்மோன்கள் உடல் எங்கும் உற்பத்தியாகின்றன. அடிக்கடி இது உண்டாகும்போது உடலும் நைந்து போகிறது. தீவிரமான மனஅழுத்தம் மட்டை விழுந்த தென்னை மரத்தில் ஏற்படுத்தும் வடு வைப்போல மனத்தில் நீங்காத பாதிப்பை உருவாக்கிவிடுகிறது.
போரில் ஈடுபடுபவர்களும் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகிறார்கள். 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா ஜப்பானில் உள்ள ஹிரோசிமா, நாகசாகி ஆகிய இடங்களில் அணுகுண்டு வீச அனுப்பிய குழுவில் மேஜர் கிளாடு ராபர்ட் ஈதர்லி என்பவரும் இடம் பெற்றிருந்தார். அவர் அந்த சம்பவம் முடிந்த பிறகு கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார். அந்த இரண்டு நகரங்களும் கதிரியக்கத்தால் கந்தலானதற்கு தான்தான் பொறுப்பு என்று எண்ணி கவலைப்படத் தொடங்கினார். இரண்டுமுறை தற்கொலைக்கு முயன்றார். பலமுறை மனச்சிக்கல்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அகிரோகுரோசவா "கனவுகள்' என்கிற அற்புதமான படத்தை இயற்றியிருக்கிறார். அதில் சுரங்கவழி என்ற ஒருபகுதியில் ஒரு போர்வீரனை நாய் ஒன்று எதிர்கொண்டு நகரவிடாமல் குரைப்பதுபோல இருக்கும். அந்த நாய் உடல் முழுவதும் குண்டுகளால் கட்டப்பட்டிருக்கும். அவன் அந்த நாயைச் சுட முடியாது. அவருடைய போர் நினைவுகள் அவ்வாறு அவனைத் தாக்குவதாக மிகச்சிறந்த குறியீட்டோடு அந்தக்காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இழப்புகளைச் சந்தித்தவர்கள் மட்டுமல்ல, ஏற்படுத்தியவர்களும் மனஉளைச்சலிலிருந்து தப்பிக்க முடியாது.
வியட்நாமிற்கு அனுப்பப்பட்ட 15 லட்சம் அமெரிக்க சிப்பாய்களில் நான்கில் ஒரு பகுதியினர் திரும்பி வந்த இரண்டு ஆண்டுகளில் ஏதேனும் ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர். அந்தப் போரில் ஈடுபட்ட பலரும் இன்னும் அந்த மனச்சிக்கல்களிலிருந்து மீள முடியாமல் கெட்ட கனவு, போர் குறித்த நினைவுகள், போர்க்காட்சிகளின் தாக்கம் ஆகியவற்றால் அல்லலுறுகிறார்கள். பாஸ்னியா
கொசாவா போர்களில் ஈடுபட்ட வீரர்களில் பதினெட்டிலிருந்து ஐம்பது சதவிகிதம் வரை பல்வேறு விதமான அதிர்ச்சிக்கும் மனஅழுத்தப் பிரச்சினைகளுக்கும் ஆளானார்கள் என்பது தெரிகிறது.
இயற்கை இடர்பாடுகள் தோன்றும்போது கண்ணெதிரில் தனக்குப் பிரியமானவர்கள் இழப்பதைப் பார்த்தவர்கள், அந்த ஞாபகத்திலிருந்து மீளமுடியாமல் வாழத் தொடங்குகிறார்கள். ஒரு சிலரோ திரும்பத்திரும்ப அக்காட்சிகள் கனவில் வரத் தொடங்கியதும் காப்பாற்ற எதுவும் செய்யாமல் விட்டுவிட்டோமே என்கிற குற்ற உணர்வு அவர்களைக் குறிவைத்துத் தாக்க, மீளாத் துயரில் மூழ்கி அவர்கள் வாழ்வை வெறுத்து மரணத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இந்திய விடுதலையின்போது எல்லைப் பகுதியிலிருந்த பல பெண்கள் எதிரிகளிடம் சிக்கி சின்னாபின்னமாவதைத் தடுப்பதற்காக அவர்கள் கணவன்மார்களே அவர்களை வாளால் வெட்டிய நிகழ்வுகள் உண்டு. சில பெண்களோ அருகிலிருக்கிற கிணற்றில் குதித்தனர். அதிகமானோர் விழுந்ததால் கிணற்றுத் தண்ணீர் போதாத காரணத்தால் மேலே மிதந்து உயிர் பிழைத்தவர்களும் உண்டு. "மெüனத்தின் மறுபக்கம்' என்கிற நூலில் ஊர்வசி புட்டாலியா இந்த விவரங்களையெல்லாம் குறிப்பிடுகிறார்.
கெவின் கார்ட்டர் என்பவர் தென்னாப்பிரிக்க இதழியல் புகைப்படக் கலைஞர். சூடான் நாட்டில் நிகழ்ந்த பஞ்சத்தின்போது அவர் எடுத்த புகைப்படத்திற்காக புலிட்சர் விருது பெற்றவர். பஞ்சத்தில் அடிபட்ட ஒரு குழந்தை எலும்பும் தோலுமாய் இருக்க, அதை ஒரு பிணந்தின்னிக் கழுகு பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற புகைப்படம் அது. அவர் அந்த புகைப்படத்தை எடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் அக்குழந்தையைத் தொட்டால் தொற்றுநோய் ஒட்டிக்கொள்ளும் என்று சொல்லப்பட்டதால் அங்கிருந்து வந்துவிட்டதாகவும் சில தகவல்கள் உண்டு. உலகமெங்கும் உள்ள இதழ்களில்
எல்லாம் அந்தப் புகைப்படம் வெளியானது. அவர் அந்த புகைப்படத்தை எடுத்த பிறகு அக்கழுகைத் துரத்தியதாகவும் தகவல் உண்டு.
கெவின் கார்ட்டர் பரிசு கிடைத்த ஓராண்டிலேயே தற்கொலை செய்துகொண்டார். அவர் கண்ட பட்டினியும் பஞ்சமும் மனத்தில் ஏற்படுத்திய தீராத தாக்கமும் அவருடைய தற்கொலை முடிவுக்குக்காரணம் என்று குறிப்பிடுகிறார்கள். அந்தப் புகைப்படத்தைப் பற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும் அவருடைய முடிவு பரிதாபகரமானது.
சில பணிகள் தற்கொலையைத் தூண்டும்படி இருக்கின்றன. மருத்துவத்துறை, மனவியல் போன்றவற்றில் ஈடுபடுகிறவர்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. யாரெல்லாம் பிரச்னைகளை இரும்புச் சுவர்களாக நினைக்கிறார்களோ, அவர்களுக்கு மரணம் ஒன்றே தீர்வு என்று தோன்றுகிறது. விடுமுறை நாட்களில் தற்கொலை விகிதம் குறைவதாகக் கணக்கெடுப்புகள் சொல்கின்றன.
லெமிங்ஸ் என்கிற கொறிவிலங்கு கூட்டமாகத் தற்கொலை செய்துகொள்வதைப் போல "ஒயிட் வைல்டர்னஸ்' என்கிற வால்ட் டிஸ்னி படத்தில் காட்டப்பட்டது. ஆனால் அது உண்மையல்ல.
விலங்குகளைத் தள்ளி பலவந்தமாக எடுக்கப்பட்ட காட்சி அது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...