ருக்ஷான பேகத்தின் வழக்கு குறித்துப் பேசும் போது குசைகுடா பகுதியின் வட்டார ஆய்வாளரான கே சந்திரசேகர் தெரிவித்தது என்னவென்றால், ருக்ஷானா பேகத்தின் சார்பில் எங்களுக்கு ஒரு புகார் வந்தது. அவர் தனது பற்கள் கோணலாக இருப்பதாகக் கூறி தன் கணவர் தனக்கு முத்தலாக் அளித்து விட்டதாகவும், அதைத் தன்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் அதில் தெரிவித்திருந்தார். இவர்களது திருமணத்தின் போதே ருக்ஷானாவின் பெற்றோர் முஸ்தபா குடும்பத்தினருக்கு ஏகப்பட்ட வரதட்சிணையை நகைகளாகவும், பணமாகவும் அளித்திருந்தனர். அவர்கள் கேட்ட சீர்வரிசைகளை எல்லாம் முறையாகக் கொடுத்த பின்பும் கூட ருக்ஷானாவிற்கு புகுந்த வீட்டில் சந்தோஷமோ, நிம்மதியோ துளியும் கிடைக்கவில்லை. திருமண நாள் முதலே அவருக்கான சோதனைகள் தொடங்கி விட்டன. மாமியார், மாமனார், கணவர் என மூவரும் கூட்டு சேர்ந்து கொந்து ருக்ஷானாவைக் கொடுமைகளுக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். திருமணத்தன்று அளித்த வரதட்சிணை போதாது, கோணலான பற்கள் கொண்ட ஒரு பெண்ணை எங்கள் தலையில் கட்டிவிட்டு உன் பெற்றோர் நிம்மதியாக இருப்பதா? மேலும் பணமும், நகையும் கொண்டு வா. அப்போது தான் உன்னால் இங்கே நிம்மதியாக வாழ முடியும் என்று அச்சுறுத்தி இருக்கின்றனர்.