இனிமேல் பாரதப் பிரதமர் போலவோ அல்லது வேறு யாரேனும் அரசியல்தலைவர்களைப் போலவோ மிமிக்ரி செய்யும் அடிப்படை கருத்து உரிமை மற்றும் பேச்சு உரிமைகளை சாமான்ய மக்களிடம் இருந்து பறிக்கப்பட வேண்டும் என்றோ, அல்லது அரசியல் தலைவர்கள்(!!!) எல்லோரும் மிமிக்ரி திறமைக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களை மிமிக்ரி செய்ய முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றோ சூரத் ரயில்வே போலீஸாரும், இந்த மத்திய, மாநில அரசுகளும் பறைசாற்ற முயல்கின்றனவா? மிமிக்ரி என்பது ஒரு கலை. எல்லோருக்கும் எளிதில் வந்து விடாது அந்தக் கலை. அதை நகைச்சுவையாக அணுகுவது தான் தலைவர்களுக்கான பண்புகளாக இருக்க முடியும். சகித்துக் கொள்ள முடியாமை சர்வாதிகாரிகளின் பாணி. அதைத்தான் இந்த அரசு கடைபிடிக்க நினைக்கிறதோ என்னவோ? என்றெல்லாம் இந்தச் செய்தியை அறிந்த நெட்டிஸன்களில் பலர் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். ரயில்வே போலீஸாரின் செயலை நியாயம் என்று வாதிடும் சிலரோ, ஒரு நாட்டின் தலைவர்கள் என்று கருதப்படக்கூடியவர்களை இன்ன விதத்தில் தான் பகடி செய்ய வேண்டும், மிமிக்ரி செய்ய வேண்டும் என்று வரம்புகள் உண்டு. வரம்பு மீறிச் செயல்பட்டால் இது தான் கதி என்று இடித்துரைக்கவும் மறக்கவில்லை.