சிலர் கூறலாம் இதென்ன பிரமாதம்? பாரா கிளைடிங், ஃபங்கி ஜம்ப் போலத்தானே இதுவும் என்று. நன்றாகக் கவனியுங்கள் அவையெல்லாம் த்ரில் விளையாட்டுக்கள் என்று தெரிந்தே நாம் அட்வெஞ்சர் விளையாட்டு மோகத்தால் போதுமான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் ஆடக்கூடியவை. ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்வு சமீபத்தில் சீன விமானமொன்றின் காக்பிட்டில் பைலட்டுக்குத் துணையாகப் பயணித்த கோ பைலட் ஒருவருக்கு நேர்ந்திருக்கிறது. ஆம், அந்த விமானத்தின் வின்ட் ஷீல்டு என்று சொல்லப்படக் கூடிய விமானத்தின் முன்புறக் கண்ணாடி ஜன்னல் போன்ற அமைப்பு காற்றுக்கு கீறல் விட்டுப் பிளந்து கொண்டு முற்றிலுமாக உடைந்து சிதற உள்ளே பைலட்டுடன் அமர்ந்திருந்த கோ பைலட் சீட் பெல்ட்டுடன் பறந்து ஜன்னலுக்கு உள்ளே விமானத்தில் பாதி உடலும், விமானத்தின் வெளியே அகண்ட பால்வெளியில் மீதியுடலுமாக கந்தர்வர்களைப் போல பறந்திருக்கிறார். அவருடன் இருந்த பைலட் தனது சகாவின் உயிரைக் காப்பாற்ற கடுமையாக முயற்சித்தும் பலனில்லை. இந்த அதிர்ச்சியிலும் அவரைக் கொஞ்சம் ஆசுவாசமடையச் செய்தது அவரது சீட் பெல்ட்டாகத் தான் இருந்திருக்கக் கூடும். ஆம், அதன் உதவியால் தான் மனிதர் இப்போது உயிருடன் இருக்கிறார் எனக்கூறுகின்றன சீன ஊடகங்கள்.