இன்று புத்த பூர்ணிமா. புத்தம் இவ்வுலகில் அவதரித்த திருநாள். இன்றைய நேபாள எல்லையில் அன்றைய இந்துஸ்தானத்தில் கபிலவஸ்துவில் சாக்கிய குல மன்னரான சுத்தோதனருக்கும், அரசி மாயாதேவிக்கும் மகனாக புத்தர் அவதரித்தார். அவர் பிறக்கும் போது அவரது ஜாதகத்தைக் கணித்த அரண்மனை சோதிடர்கள் இக்குழந்தையின் லக்ன ரேகைகள் இகபர வாழ்வை வெறுத்து துறவில் இன்பம் காணத்தக்க வகையில் அமைந்திருந்தமையை சுட்டிக்காட்ட பிறந்தது முதல் தனது திருமணக்காலம் வரையிலும் புத்தரை வெளிஉலகம் காணாது அரண்மனைக்குள்ளேயே வைத்து வளர்த்தனர் அவரது பெற்றோர். ஆயினும் விதி வலியது. மனைவி யசோதராவும் மகன் ராகுலனும் அரண்மனை உப்பரிகையினுள் ஆழ்ந்துறங்கும் வேளையொன்றில் மூப்பு, பிணி, இறப்பு எனும் மூவகை வாழ்வியல் நிதர்சனங்களையும் ஒரு சேர இளவரசன் சித்தார்த்தன் காண நேர அவர் தம் மனைவிக்கும், குழந்தைக்கும், பெற்றோருக்கும் கூட எவ்வித அறிவிப்புமின்றி அரண்மனையை விட்டு நீங்குகிறார். அன்றுமுதல் அவர் கபிலவஸ்துவின் அரசனல்ல ஆயினும் காணும் எவருக்கும் ஆன்மீக அரசராகும் நற்பேறு பெற்றார். ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்பது புத்தரின் கொள்கை அடிப்படை. அந்த ஆசையை புறக்கணித்ததோடு தன்னைப் போன்றே இந்த உலகமும் உய்யவேண்டுமென்று கால்நடையாக நடந்தும், உஞ்சவிருத்து செய்து உண்டும், உலக மக்களுக்கு ஆசையினால் விளையும் துன்பங்களைப் பற்றியும் மனிதன் எவ்விதம் வாழ்ந்தால் அவனுக்கு இவ்வுலகில் நன்மை பயக்குமென்றும் புத்தர் பல்வேறு விதமான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் இவ்வுகல மக்களுக்கு விட்டுக் சென்றிருக்கிறார்.