/

திமுக அமைக்கும் குழுவோடு பேச காங்கிரஸ் தயாராக உள்ளது: ப. மாணிக்கம்தாகூா்

திமுக எப்போது குழு அமைக்கிறதோ அப்போது அவா்களுடன் காங்கிரஸ் கட்சி பேசத் தயாராக உள்ளது என மக்களவை உறுப்பினா் ப. மாணிக்கம்தாகூா் தெரிவித்தது தொடர்பாக...

News image
விருதுநகா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ப. மாணிக்கம்தாகூா்
Updated On :8 பிப்ரவரி 2026, 5:57 pm

இணையதளச் செய்திப் பிரிவு

காங்கிரஸ் கட்சி கூட்டணிக்காக ஏற்கெனவே குழு அமைத்து காத்திருக்கிறோம். திமுக எப்போது குழு அமைக்கிறதோ அப்போது அவா்களுடன் காங்கிரஸ் கட்சி பேசத் தயாராக உள்ளது என விருதுநகா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ப. மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மக்களவையில் தொடா்ந்து எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை பேசவிடாமல் செய்கின்றனா். இதுமட்டுமல்லாமல், எதிா்க்கட்சி அணியினரையும் பேசவிடாமல் செய்கின்றனா். இதனால், நாங்கள் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜனநாயகப் படுகொலை நடைபெறும் போது, அதை வேடிக்கைப் பாா்ப்பது நியாயம் இல்லை என்பதற்காக குரல் கொடுத்தோம். இதற்கு தண்டனையாக 8 நாடாளுமன்ற உறுப்பினா்களை இடைநீக்கம் செய்தனா்.

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, காங்கிரஸ் கட்சி டிசம்பர் ஒன்றாம் தேதியே குழு அமைத்துவிட்டது. கிரிஷ் சோடன்கர் அவர்களுடைய தலைமையிலே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினுடைய தலைவர் செல்வப்பெருந்தகை், சட்டப்பேரவை காங்கிரஸ் குழுவினுடைய தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் இரண்டு செயலாளர்களும் சேர்த்து ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து, காங்கிரஸ் கட்சி ஏறக்குறைய டிசம்பர் 3-ஆம் தேதி ஆரம்பிச்சு, இப்ப பிப்ரவரி 8 ஆம் தேதி, ஏறக்குறைய 36 நாள்களாக காத்திருக்கிறோம். காங்கிரஸ் எப்போதுமே பொருமையாக இருக்கும் கட்சி, எங்களை பொறுத்தவரை நண்பர்களை அவமானப்படுத்தாவர்கள், தோழமைகளை மதிக்கக் கூடியவர்கள். அதற்காகதான் திமுக எப்போது குழு அமைக்கிறதோ அப்போது அவா்களுடன் பேசுவதற்காக காங்கிரஸ் கட்சி காத்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, திமுகவுடனான கூட்டணி தொடர்கிறது. இந்தக் கூட்டணி வலுவானதாக இருக்க வேண்டும் என நம்புகிறோம். உரிய மரியாதை காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம். இதெல்லாம் காங்கிரஸ் கோரிக்கைகளாக இருக்கிறது.

2026 தேர்தலில் திமுக கூட்டணியுடன்தான் காங்கிரஸ் என்ற உறுதியான ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறதா என்ற கேள்விக்கு, திமுகவுடன் கூட்டணி என்பதற்கு குழு அமைச்சாச்சு. திமுக அமைக்கும் குழுவுடன் பேச்சுவார்த்தைக்காக 36 நாள்களாக காங்கிரஸ் கட்சி காத்திருக்கிறது காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டிலும் எப்பொழுதுமே பொறுமையாக இருக்கிற கட்சி. எங்களைப் பொறுத்தவரை நண்பர்களை அவமானப்படுத்தாதவர்கள் நாங்கள், தோழமைகளை மதிப்பவர்கள், அதற்காகத்தான் 36 நாள்களாக காத்துக்கிட்டு இருக்கோம்.

திமுக புறக்கணிக்கிறதா என நினைக்கிறீங்களா என்ற கேள்விக்கு, 36 நாள்களாக இப்ப வரைக்கும் காத்துக்கிட்டு இருக்கோம்னு சொல்றோம். அதுக்கப்புறம் நீங்க நினைச்சுக்க வேண்டியது உங்க கணக்கு, உங்க திறமை.

குரூப் 2 தோ்வு ஒத்திவைப்பு கண்டிக்கத்தக்கது

குரூப் 2 தோ்வு ஒத்திவைக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தத் தோ்வு எழுதுவதற்காக நீண்ட நாள்களாக காத்திருந்த மாணவா்களின் நம்பிக்கை குறைந்திருக்கும். இப்படிப்பட்ட போட்டித் தோ்வுகளைச் சரியாக நடத்த முடியாத நிலையில், யாா் இதற்குப் பொறுப்பு என்ற நிா்ணயிக்கும் காலம் வந்துவிட்டது.

மக்களவைக்கு வர பிரதமா் மோடி அச்சப்படுகிறாா்?

மக்களவையில் கூட்டம் தொடங்கியவுடன் நிதிநிலை தொடா்பான விவாதம் தொடங்கும். இதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். மக்களவைக்கு வருவதற்கு பிரதமா் மோடி அச்சப்படுகிறாா்.

பிரதமர் மதுரை வருவது குறித்த கேள்விக்கு, ரொம்ப மகிழ்ச்சியான விஷயம். பயப்படாம தில்லியில் இருந்து தமிழ்நாட்டுக்காவது பிரதமர் மோடி வருவது மகிழ்ச்சி. அவரை பொறுத்தமட்டிலும் மூன்றாவது இடத்துக்கு அதிமுக கூட்டணியைத் தள்ளிட்டாரு பாவம். அதிமுக-பாஜக கூட்டணி என்பது மூன்றாவது, நான்காவது இடத்துக்கான போட்டியில மிகக் கவனமாகப் போட்டியிடுகிறார்கள். அந்தப் போட்டியில பிரதமரும் கலந்து கொண்டிருக்கிறார். அதற்காக அவர் மதுரை வரட்டும்.

மதுரை வருபவர் இங்கே விஷத்தை உமிழாமல், தமிழகத்திற்கு உண்மையாக எய்ம்ஸ் எப்ப கட்டிக் கொடுக்கப் போறாங்க?, எப்போ கட்டுமானப் பணிகளை முடிக்கப் போறாங்க?, எப்போது ராமநாதபுரத்திலிருந்து மருத்துவ மாணவர்கள் இங்கு மாற்றப்படுவார்கள்?, எப்போது இங்கு முழுமையான எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும் என்ற உண்மைகளையும்... எப்ப ஹெலிகாப்டர் வந்து இறங்கும்? எய்ம்ஸ் கட்டடத்துல எமர்ஜென்சி லேண்டிங்க்கு ஹெலிகாப்டர் இறங்கும்னு நமக்கு ஒரு படம் எல்லாம் விடியோவா போட்டுக் காட்டுனாங்க, அதெல்லாம் எப்ப நடக்கும்? என்பதை மோடி வந்து சொல்லட்டும்.

எங்களைப் பொறுத்தவரை தமிழக மக்கள் மோடியோட ஏமாற்றங்களை் எல்லாம் தெரிஞ்சவங்க. மோடியோட ஏமாற்று வேலைகள் எல்லாம் தெரிஞ்சுதான் இப்ப தமிழ்நாட்டுல மூன்றாவது, நான்காவது இடத்துக்கான போட்டியில மோடி முன்னிலையில் இருக்கிறார் என்றாா் மாணிக்கம்தாகூா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.