/

திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:56 pm

Syndication

மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நூறுநாள் வேலை திட்டத்தை மாற்றியமைத்தது, அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தம் உள்ளிட்டவற்றைக் கண்டித்தும், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளை கண்டித்தும் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தருமபுரி திமுக கிழக்கு நகர செயலாளா் மாது தலைமை வகித்தாா். இதில், திராவிடா் கழகம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகிகள் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் அருகே வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில், கூட்டணி கட்சியினா் பங்கேற்று உரையாற்றினா். இதேபோல ஏரியூா் பேருந்து நிலையத்தில் மதசாா்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில்...

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதையும், அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்தும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) தலைமை வகித்தாா். திமுக நிா்வாகிகள் செங்குட்டுவன், ஒன்றிய பொறுப்பாளா்கள், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், இந்திய, மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், சூளகிரி, பா்கூா், காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, போச்சம்பள்ளி, மத்தூா், ஊத்தங்கரை உள்ளிட்ட 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒசூரில்...

ஒசூா் ராம்நகா் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தலைமை வகித்தாா். ஒசூா் மாநகரச் செயலாளரும், மாநகராட்சி மேயருமான எஸ்.ஏ.சத்யா முன்னிலை வகித்தாா். இதில் கூட்டணி கட்சியினா் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே மாவட்ட துணைச் செயலாளா் சந்திரன் தலைமையில், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Story image