'கேரளாவில் நிலப்பகுதி குறைவு, மக்கள் பெரும்பாலும் நதிக்கரைகளை ஒட்டியே வாழ்கிறார்கள். கேரளாவின் 44 நதிகளை ஒட்டியும் மக்களின் வாழ்விடங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் காவிரிக் கரையோரப் பகுதிகளைப் போலவே அங்கும் வீட்டின் புழக்கடையில் நதிகள் பாய்வதை சர்வசாதாரணமாகக் காணலாம். நதிகளைப் பாதுகாக்கிறோம்... நதிக்கரை ஆக்ரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் அந்த மக்களின் வாழ்விடங்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது அத்தனை எளிதான காரியமல்ல. இது தவிரவும் நதி நீரை மாசு படுத்தும் தொழிற்சாலைகள், அரசியல்வாதிகள் மற்றும் பெரும்பண முதலைகளால் அதிகாரத்தின் பெயரால் ஆக்ரமிக்கப்பட்ட நதிக்கரையோர பகுதிகளை மீட்டெடுப்பது அத்தனை எளிதான காரியமில்லை. அதற்கு போதுமான அவகாசம் தேவைப்படுகிறது. இந்தியா போன்றதொரு ஜனநாயக நாட்டில் இது அத்தனை எளிதில் சாத்தியப்படுவதில்லை. கேரள நதிகளைப் புனரமைத்து அவற்றை பாதுகாப்பதற்கான ஒரு வரைவைக் கொண்டு வரும் பொருட்டு கேரள அரசு இந்தியாவின் 'தண்ணீர் மனிதர்' எனப் பாராட்டப் படும் ராஜேந்தர் சிங்கை அழைத்திருந்தது. அவரும் கேரள அரசின் அழைப்பை ஏற்று 2015 ஆம் ஆண்டு அம்மாநிலத்திற்கு வருகை தந்து கேரள அரசுக்கு நதிகளைப் பாதுகாப்பது தொடர்பான திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். அவர் வகுத்துக் கொடுத்த நதிப் பாதுகாப்பு வரைவு தெள்ளத் தெளிவாக இருந்த போதும் கேரள அரசால் அதனை அத்தனை எளிதில் செயல்படுத்த முடியவில்லை.'