/

மொழி மாற்றுத் தொடர்களால் பாதிப்பு: சின்னத்திரை கலைஞர்கள் நாளை மறுநாள் வேலை நிறுத்தம்

மொழி மாற்றுத் தொடர்களின் அதிகரிப்பை நிறுத்தக் கோரி தமிழ் சின்னத்திரை கலைஞர்கள் புதன்கிழமை (ஏப்.15) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:09 am

ஜி. அசோக்

மொழி மாற்றுத் தொடர்களின் அதிகரிப்பை நிறுத்தக் கோரி தமிழ் சின்னத்திரை கலைஞர்கள் புதன்கிழமை (ஏப்.15) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இணைந்து திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொலைக்காட்சி மெகா தொடர்கள் பல ஆயிரம் கலைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் வாழ்வதாரமாக திகழ்கிறது. ஆனால், சமீப காலமாக அதிகரித்துள்ள மொழி மாற்றுத் தொடர்களின் வரவு பல ஆயிரம் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பினை பறித்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்தி பல ஆயிரம் குடும்பங்களை காப்பாற்றுமாறு சின்னத்திரைக் கூட்டமைப்பு மற்றும் பெப்ஸி அமைப்பின் சார்பாக தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது.

சின்னத்திரை தயாரிப்பாளர்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். ஆனால் மொழி மாற்றுத் தொடர்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனங்கள் எங்கள் வேதனையைப் புரிந்துக் கொள்ளாமல் மேலும் அதிக எண்ணிக்கையிலான தொடர்களை மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பி வருகின்றன.

இதன் விளைவால் சின்னத்திரையை மட்டுமே முழுமையாக நம்பியுள்ள பல பேர் வேலையில்லாமல் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர். மொழி மாற்றுத் தொடர்களின் ஒளிபரப்புத் தொடருமானால் தற்கொலைகள் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே, சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் மொழி மாற்றுத் தொடர்களை நிறுத்தி விட்டு, நேரடி தொடர்கள் மூலம் வேலை வாய்ப்பைப் பெருக்கித் தந்து பல ஆயிரம் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும்.இதனை வலியுறுத்தும் விதமாக ஏப்ரல் 15-ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம். இதில் சின்னத்திரையைச் சார்ந்த அனைத்து அமைப்புகளும் பங்கு கொள்கின்றன. இதனால் படப்பிடிப்பு உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறாது. சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து எங்களது கோரிக்கையை மனுவையும் அளிக்கவுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.