விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வியாழக்கிழமை வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் வேட்பு மனுத்தாக்கல் கடந்த 29-ம் தேதி தொடங்கி, 5-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. அதன் அடிப்படையில் இத்தொகுதியில் போட்டியிட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் ஆகியோர் விரும்பி வேட்பு மனுக்களை அளித்து வருகின்றனர். அவ்வகையில் சிவகாசியைச் சேர்ந்த வழக்குரைஞரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பு.கமலவேல்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் வந்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதேபோல், ஸ்ரீவில்லிப்புத்தூர் பெருமாள்பட்டியைச் சேர்ந்த கோவிந்தனின் பட்டதாரி மகன் மணிகண்டன்(32), சாத்தூர் அருகே ஆலம்பட்டியைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகனும், ஆசிரியர் பட்டதாரியுமான லட்சுமிகாந்தன்(29), சாத்தூரைச் சேர்ந்த சின்னமணி என்பவரின் மகன் சுரேஷ்காந்த்(40) ஆகியோர் விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிட விரும்பி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் டி.என்.ஹரிஹரனிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.