கடந்த 10 ஆண்டுகளில் அதிமுகவும்-திமுகவும் மின் உற்பத்திக்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருகட்சிகளுமே மீண்டும், மீண்டும் குற்றஞ்சாட்டி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
விருதுநகர் மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சாமுவேல்ராஜுக்கு ஆதரவாக அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை பிரசாரம் செய்து பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் விரோதக் கொள்கையை கடைபிடித்து வந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் மீதும், அதற்கு துணை நின்ற திமுக மீதும் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இந்தியாவில் 20 கோடி பேர் சில்லறை வணிகத்தை நம்பி உள்ளனர்.
2002ல் பா.ஜ.க ஆட்சியில் அன்னிய நிறுவனங்கள் உள்ளே வர வாஜ்பாய் முன்மொழிந்தார். அதை 2012ல் காங்கிரஸ் ஆட்சியில் அமுலாக்கியது தவறான பொருளாதாரக் கொள்கையை பின்பற்றுவதில் காங்கிரஸ் கட்சியும், மதவாத கட்சியான பா.ஜ.கவும் ஒரே நிலைபாடுதான் கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் எரிவாயு விலை 100 சதம் உயர்ந்துள்ளது. இதனால் உரம், மின் கட்டணம் உயர்ந்துள்ளது.