நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஊழலற்ற இந்தியாவை இளைஞர் சமுதாயம் உருவாக்க வேண்டும்: அப்துல் கலாம்

மாணவ- மாணவிகள், இளைஞர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு 4 விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். முதலாவதாக தங்களுக்கென்று மிகப் பெரிய லட்சியத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். சிறிய லட்சியம்

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:04 pm

க. தங்கராஜா

நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கல்களைத் தீர்க்கவும், ஊழலற்ற இந்தியாவை உருவாக்கவும் இளைஞர்கள் பாடுபட வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காடு மான்ட்போர்ட் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்துல் கலாம் மேலும் பேசியதாவது:

மாணவ- மாணவிகள், இளைஞர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு 4 விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். முதலாவதாக தங்களுக்கென்று மிகப் பெரிய லட்சியத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். சிறிய லட்சியம் குற்றமாகும். இரண்டாவதாக அறிவைத் தேடித் தேடிப் பெற வேண்டும். மூன்றாவதாக அந்த லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். நான்காவதாக விடா முயற்சி வேண்டும். தோல்வி மனப்பான்மை இல்லாமல் இந்த 4 விஷயங்களையும் கடைப்பிடித்தால் தோல்விக்கே தோல்வி கொடுத்து வெற்றி பெற முடியும்.நல்ல லட்சியத்துடனும், உயர்ந்த எண்ணத்துடனும் இருப்பவர்கள் செய்யும் பணிகளே சிறக்கும். இந்த பூமிக்கு கீழேயும், மேலேயும், பூமியிலும் உள்ள எந்த சக்தியைக் காட்டிலும் மன எழுச்சி கொண்ட இளைஞர்களே இந்தியாவின் பெரிய சக்தி. 60 கோடி இளைஞர்களைக் கொண்ட நாம், மன உறுதியுடன் முயற்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை.

பள்ளியின் கட்டடங்கள், அதன் புகழ்பாடும் விளம்பரங்கள், பாடத் திட்டங்களைக் காட்டிலும் நல்ல ஆசிரியரே ஒரு மாணவனுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம். சராசரி மாணவரையும் சிறந்த மாணவராக்குவதே ஆசிரியரின் பணி. பள்ளிகள் தொழில் நிறுவனங்களோ, வர்த்தக மையங்களோ கிடையாது.ராமேஸ்வரத்தில் எனக்கு சிவசுப்பிரமணியன் போன்ற நல்ல ஆசிரியர்கள் கிடைத்தனர். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை ஆசிரியர்கள் வீடு தேடி வந்து பாராட்டிச் செல்வார்கள். ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் இடையே நல்ல பிணைப்பு இருந்தது. இதனால் எங்கள் பள்ளியில் இடைநிற்றலே இருந்ததில்லை. பத்தாம் வகுப்புக்கு பிறகு எந்த படிப்பைத் தேர்வு செய்வது என்பதில் பெரும்பாலான மாணவர்களுக்கு குழப்பமும், நெருக்கடியும் உள்ளது. மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த, விருப்பமான படிப்பை பெற்றோருடன் கலந்து ஆலோசித்து தேர்வு செய்ய வேண்டும். அன்பால் மட்டுமே பெற்றோரை சம்மதிக்க வைக்க முடியும் என்பதை உணர வேண்டும். இதுபோன்ற மாணவர்களுக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் நல்ல ஆலோசகர்களாக இருக்க வேண்டும்.

புதிய இந்தியா இன்று பொருளாதாரத்திலும் ஊழல் விவகாரங்களிலும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. 2020-ம் ஆண்டில் விவசாயம், சுகாதாரம், பொருளாதாரத்தில் உயர்ந்த நாடாக இந்தியா உருவாக வேண்டும். பொருளாதார சிக்கல், ஊழல் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு ஊழலற்ற வளர்ந்த நாடாக இந்தியா வளர வேண்டும். அதற்கு இளைஞர்களின் பங்கு அவசியம் என்றார் அவர்.

முன்னதாக பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தென்மண்டல மான்ட்போர்ட் சபைத் தலைவர் ஜார்ஜ் கே.ஜே., பள்ளி இயக்குநர் இக்னேஷியஸ், முதல்வர் கே.ஜே.வர்கீஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.பள்ளி விழாவில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் இருந்து கார் மூலம் ஏற்காடு வந்த அப்துல் கலாம், நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சேலம் வழியாக நாமக்கல் புறப்பட்டார். அவரது வருகையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் சுமார் 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.