பொங்கலுக்குச் சென்ற தொழிலாளர்கள் திரும்பாததால் உற்பத்தி கடும் பாதிப்பு
பொங்கலுக்கு ஊருக்குச் சென்ற தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பாததால் கோவை மாவட்டத்தில் உள்ள சிறுதொழில் கூடங்களில்


பொங்கலுக்கு ஊருக்குச் சென்ற தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பாததால் கோவை மாவட்டத்தில் உள்ள சிறுதொழில் கூடங்களில் உற்பத்தி மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மின்வெட்டு சரியானாலும் உற்பத்தி துவங்க 2 ஆண்டுகள் ஆகும் என்று தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் பஞ்சாலைகள், வார்ப்பட ஆலைகள், என்ஜினீயரிங் பொருள்கள், வாகன உதிரிபாகங்கள், மோட்டார்கள் உற்பத்தி செய்யப்பட்டு பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூடங்களும் உள்ளன.
பெரிய தொழில் கூடங்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள் சிறுதொழில் கூடங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் சிறுதொழில் கூடங்களில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்தது. சில மாதங்களாக தினமும் 18 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் இருந்தது. இதனால் உற்பத்தி பெரும்பகுதி முடங்கியது.
இந்த நிலையில் மின்சாரம் எப்போது வரும் என்பது தெரியாமல் சிறுதொழில் கூட உற்பத்தியாளர்கள் திகைத்தனர். கோவையைப் பொருத்தவரையில் உற்பத்திக்கு ஏற்ற ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மின்தட்டுப்பாட்டால் தங்கள் ஊதியத்தின் பெரும் பகுதியை இழந்தனர்.
ஜெனரேட்டரின் மூலம் உற்பத்தி செய்யும்போது அதற்குரிய விலை கிடைக்கவில்லை. இதனால் தொழில்முனைவோரின் பாடு திண்டாட்டமானது.
ஊதியத்தின் பெரும் பகுதியை ஊழியர்கள் இழந்தாலும் தீபாவளிப் பண்டிகைக்காகக் காத்திருந்தனர். தீபாவளி போனஸ் பெற்றுக் கொண்டு ஊருக்குச் சென்ற தொழிலாளர்களில் 10 சதவிகிதத் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பவில்லை. இதனால் உற்பத்தியாகும் பொருள்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையின்போது ஊருக்குச் சென்ற தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் மீண்டும் பணிக்குத் திரும்பவில்லை. இதனால் மீண்டும் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் கோரி தொழில் அமைப்பினர் அண்மையில் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். ஆனாலும் இதுவரை பலனில்லை.
இது தொடர்பாக கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் எஸ்.ரவிக்குமார் கூறியது:
கோவை மாவட்டத்தில் பயிற்சி பெற்ற தொழிலாளர்களில் 30 சதவீதம் பேர் வரை பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு தீபாவளிக்குச் சென்ற தொழிலாளர்களில் 15 சதவீதம் பேர் வேலைக்குத் திரும்பவில்லை.
பொங்கல் பண்டிகையைக் கொண்டாடச் சென்றவர்களில் 50 சதவீதம் பேர் இப்போது மீண்டும் வேலைக்குத் திரும்பவில்லை. இதனால் சிறு தொழில் கூடங்களில் மட்டும் உற்பத்தியான பொருள்களில் 3-ல் ஒரு பங்கு உற்பத்தி மட்டுமே இப்போது நடக்கிறது.
இப்போதுள்ள சூழ்நிலையில் மின்சாரம் முழுமையாகக் கிடைக்கும் என்றாலும் கூட வேலையை விட்டுச் சென்ற தொழிலாளர்கள் மீண்டும் திரும்பி வந்து உற்பத்தியைப் பெருக்க வேண்டுமென்றால் குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே நிலை தொடர்ந்தால் சிறுதொழில் கூடங்களில் வேலை செய்வதற்கு ஆள்களே இல்லாத நிலை ஏற்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...