65 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த பழங்குடியினச் சான்று!அமைச்சர் முயற்சியால் நனவானது கனவு
சுதந்திரம் அடைந்த பிறகு முதல்முறையாக, கடம்பூர் மலையில் குன்றி ஊராட்சியில் உள்ள பழங்குடி மக்கள் பழங்குடியினச் சான்று பெற்றுள்ளனர்.


சுதந்திரம் அடைந்த பிறகு முதல்முறையாக, கடம்பூர் மலையில் குன்றி ஊராட்சியில் உள்ள பழங்குடி மக்கள் பழங்குடியினச் சான்று பெற்றுள்ளனர். 65 ஆண்டுகளாக இவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த பழங்குடியினச் சான்றிதழ், வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலத்தின் முயற்சியால் நனவாகியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், கடம்பூர், பர்கூர் மலைப் பகுதிகள் இப்போதும் பின்தங்கிய நிலையிலேயே காட்சி அளிக்கின்றன. இப்பகுதிகளில் உள்ள பழங்குடி மக்களில் பெரும்பகுதியினருக்கும், வெளி உலகத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இங்குள்ள பெரும்பாலானவர்கள் இதுவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களைக் கூடப் பார்த்ததில்லை.
பிற சாதியினர் தங்களுக்கு சாதிச் சான்றிதழ் வேண்டுமெனில் வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பித்துப் பெற முடியும். ஆனால், பழங்குடியினச் சான்றிதழை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தான் பெற இயலும். வெளி உலகமே தெரியாத இங்குள்ள பழங்குடி மக்கள் பழங்குடியினச் சான்று பெறுவது, இயல்பாகவே சிரமமான விஷயம்.
கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கூத்தம்பாளையம், குன்றி ஊராட்சிகளில் 2,500-க்கு மேற்பட்ட ஊராளி, சோளகர் இனத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.
சுதந்திரத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு சென்ற கிறிஸ்தவ பாதிரியாரைப் பின்பற்றி குன்றி ஊராட்சியில் சுமார் 800 பேர் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டனர். கூத்தம்பாளையம் ஊராட்சியில் சுமார் 1,700 பழங்குடியினர் உள்ளனர்.
இந்த இரு ஊராட்சிகளைச் சேர்ந்த பழங்குடியினர், குன்றியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை படிக்க முடிகிறது. அதற்குப் பிறகு படிப்பைத் தொடர கடம்பூருக்கு 19 கி.மீ. தூரம் செல்ல வேண்டும்.
அதேபோல கல்லூரிப் படிப்புக்கு மேலும் 40 கி.மீ. தூரம் பயணித்து சத்தியமங்கலம் செல்ல வேண்டும். 30 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் பழங்குடியினச் சான்று கேட்டு விண்ணப்பித்தும் இதுவரை இவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், இம்மக்களுக்கு பழங்குடியினச் சான்று வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்யும்படி கோபி கோட்டாட்சியர் கே.பழனிசாமிக்கு உத்தரவிட்டார்.
இது குறித்து ஆய்வு செய்த கோட்டாட்சியர் பழனிசாமி, இவர்களுக்கு பழங்குடியினச் சான்று வழங்கலாம் என்று விசாரணை அறிக்கையில் தெரிவித்தார். கடந்த நவம்பர் மாதத்தில், குன்றி, கூத்தம்பாளையம் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்ற அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், இப்பகுதியைச் சேர்ந்த 741 பேருக்கு பழங்குடியினச் சான்று வழங்கினார்.
முதல்முறையாக அமைச்சர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகளைப் பார்த்த பழங்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கோபி கோட்டாட்சியர் பழனிசாமி கூறியது:வருவாய்த் துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி இக்கிராமங்களில் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை, தமிழ்நாடு பழங்குடியின இயக்குநர் அலுவலகம், வருவாய்த் துறை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தோம். பழங்குடியினர் எந்த மதத்தைத் தழுவியிருந்தாலும், அரசியலமைப்புச் சட்டம் 34-இன் படி பழங்குடியினச் சான்று வழங்கலாம் என்று தகவல் வந்தது.
அதைத் தொடர்ந்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குன்றியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் நகல் இயந்திரம், காமிரா உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி, அங்குள்ளவர்களின் விண்ணப்பத்தை வருவாய்த் துறை ஊழியர்களே நிரப்பி பழங்குடியினச் சான்று கிடைக்க ஏற்பாடு செய்தோம் என்றார்.
இது குறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநிலத் தலைவர் வி.பி.குணசேகரன் கூறியது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் சுமார் 20,000 பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்களில் இதுவரை 50 சதவிகிதம் பேர் மட்டுமே பழங்குடியினச் சான்று பெற்றுள்ளனர். பழங்குடியினச் சான்று பெற்றால் தான் பழங்குடியினர் நல வாரியத்தில் பதிவு செய்வதுடன், கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற முடியும். ÷பழங்குடியின மக்களை எந்த ஒரு ஜாதி ரீதியாகவும் பிரிக்க இயலாது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவர்கள் இனக்குழுக்கள் தான். 30 ஆண்டு போராட்டத்துக்குப் பின்னர் இப்போது பழங்குடியினச் சான்றிதழ் வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது. மீதமுள்ள பழங்குடியினருக்கும் இனச்சான்று வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பிற பகுதிகளில் உள்ளோருக்கும் விரைவில் சான்று
வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூறியது:குன்றி, கூத்தம்பாளையம் ஊராட்சிகளில் 65 ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடியினச் சான்று பெற முடியாமல் இருந்த பழங்குடி மக்களின் பிரச்னைகள் தொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்றேன். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அவர் உத்தரவிட்டார்.
அதன்படி இப்போது முதல்கட்டமாக குன்றி, கூத்தம்பாளையம் ஊராட்சிகளில் இதுவரை 741 பேருக்கு பழங்குடியினச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1,800 பேருக்கு பழங்குடியினச் சான்று வழங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல பிற பகுதிகளில் உள்ள பழங்குடியினருக்கும் பழங்குடியினச் சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...