மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

அரசுப் பேருந்து-மினிலாரி மோதிய விபத்து: 5 பேர் சாவு20 பேர் படுகாயம்

ஈரோடு அருகே அரசுப் பேருந்து, மினி கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 5 பேர் இறந்தனர். இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:02 am

ஜெபலின்ஜான்

ஈரோடு அருகே அரசுப் பேருந்து, மினி கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 5 பேர் இறந்தனர். இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
 கோவையில் இருந்து சேலம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை வந்த அரசுப் பேருந்தில் பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பேருந்தில் படிக்கட்டுகள் வரை கூட்டம் அதிகமாக இருந்தது. தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த இந்த பேருந்து, சித்தோட்டில் பயணிகளை இறக்குவதற்காக புறவழிச்சாலை வழியாக வந்தது.
 சித்தோட்டில் பயணிகளை இறக்கிவிட்டு, மேலும் சில பயணிகளை ஏற்றிவிட்டு புறவழிச்சாலை வழியாக ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரி அருகே மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் ஏற முயன்றது.
 அப்போது சேலத்தில் இருந்து கோவை நோக்கி வந்த மினி கன்டெய்னர் லாரியும், அரசுப் பேருந்தும் மோதிக்கொண்டன. அரசு பேருந்தின் பக்கவாட்டில், மினிலாரி மோதியதால் பேருந்து கவிழ்ந்தது.
 இதில் பேருந்தின் பின்படிகட்டில் பயணம் செய்த 3 பேர், முன்படிகட்டில் பயணம் செய்த 2 பேர் உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பவானி தீயணைப்பு வீரர்கள், சித்தோடு, பவானி, ஈரோடு பகுதிகளில் இருந்த 108 ஆம்புலன்ஸ் வாகன குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
 பின்படிகட்டில் பயணம் செய்த தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பறையப்பட்டியை சேர்ந்த சங்கர் (44), சேலம் மாவட்டம் கருமந்துறையை சேர்ந்த கோவிந்தராஜ் (29) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.  இறந்தவர்களின் சடலங்களை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர்.
 அதேபோல படுகாயம் அடைந்த மேலும் 23 பேரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டுச்சென்றனர்.
  அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும் வழியில் மேலும் ஒருவர் இறந்தார். 
அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் தருமன் (20) இறந்தார்.
 இந்த விபத்தில் காயமடைந்த மற்ற 20 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்த குமாரின் மனைவி சென்னம்மாள் (38), இவரது மகள்கள் சத்யா (19), காவ்யா (15), நெல்லித்துறையை சேர்ந்த மணியின் மனைவி கலைவாணி (40), தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பறையப்பட்டியை சேர்ந்த அல்லிமுத்து மகன் வெங்கடாச்சலம் (27), ராமநாதபுரம் மாவட்டம் மறவான்குடியை சேர்ந்த நாகேந்திரனின் மகன் செல்லபெருமாள் (20), சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த வேலுவின் மகன் நடராஜ் (23), ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (19), தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே இண்டூரை சேர்ந்த கார்த்திக்கின் மனைவி வாசுகி (27), நார்த்தம்பட்டியை சேர்ந்த சென்னியம்மாள் (50), மினி லாரியின் ஓட்டுநரும், மதுரையை சேர்ந்த சதாசிவம் மகனுமான செந்தில்குமார் (40) உள்ளிட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 ஈரோடு துணை மேயர் கே.சி.பழனிசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.கணேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் இரா.சுகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர். காயம் அடைந்தவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.
 லாரி மோதியதில் பேருந்தின் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் கொட்டியது. டீசலில் தீப்பிடிக்காமல் இருக்க தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது. டீசலில் தீப்பிடித்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். இந்த விபத்து காரணமாக கோவை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.