கொப்பரைக் கொள்முதல்: மத்திய அரசு உத்தரவால் விவசாயிகள் அதிர்ச்சி
கொப்பரைக் கொள்முதல் தொடர்பாக மத்திய அரசின் உத்தரவால் தென்னை விவசாயிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.


கொப்பரைக் கொள்முதல் தொடர்பாக மத்திய அரசின் உத்தரவால் தென்னை விவசாயிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் தேங்காய் விலை குறைந்தபோது விவசாயிகளுக்கு ஆதரவாகக் கொப்பரையை மத்திய அரசு நிறுவனமான தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் (நேபட்), தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் (டேன்பெட்) மூலமாக குறிப்பிட்ட வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருந்து தமிழகம் முழுவதும் கொள்முதல் செய்தது.
வியாபாரிகளுக்குப் பலன்: விவசாயிகளுக்கு உதவுவதற்காகக் கொண்டு வரப்பட்ட இக் கொள்முதலால் பயனடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கொப்பரை வியாபாரிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு விவசாயிக்கும் இருந்த நிலத்தின் அளவு, தென்னை பயிரிடப்பட்டிருந்த நிலத்தின் அளவு, அதிலிருந்து கிடைக்கும் கொப்பரையின் அளவு குறித்து வேளாண் துறையும் வருவாய்த் துறையும் அடையாள அட்டை வழங்கியிருந்தனர். இந்த அட்டையை வைத்துத்தான் கொப்பரையைக் கொண்டு வரலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த அடையாள அட்டையை வைத்துப் பயனடைந்தவர்களில் 99 சதவீதத்தினர் வியாபாரிகள் தான். சில விவசாயிகளைத் தவிரப் பிற விவசாயிகள் யாரும் கொப்பரையைத் தயாரிப்பதில்லை. எனவே, எப்போது கொப்பரைக் கொள்முதல் என்றாலும் பயனடைவது வியாபாரிகள் மட்டுமே. இச் சூழ்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையாக கொப்பரை கிலோ ரூ.51 வீதம் கொள்முதல் செய்யப்பட்டது. இப்போது ரூ.52.90-க்கு வாங்கப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் சுமார் 29 ஆயிரம் டன், கேரளத்தில் 17 ஆயிரம் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வரை எவ்வளவு டன் கொப்பரை கொள்முதல் செய்தாலும் கொள்முதல் விலையை விடக் குறைவான விலைக்கு விற்கும்போது நாபெட்டுக்கு உண்டாகும் நஷ்டம் முழுவதையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுவிடும்.
ஆனால், இப்போது அதிகபட்சமாக 15 சதவீத நஷ்டத்துக்கு உண்டான தொகையை மட்டும் தர முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக "நேபட்' அலுவலர் ஒருவர் கூறுகையில், கொள்முதல் செய்வதில் 15 சதவீத நஷ்டத்தை மட்டும் மத்திய அரசு ஏற்கும் என்று தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக உத்தரவு இதுவரை வரவில்லை. எனினும் கொப்பரைக் கொள்முதல் தொடர்பாக மீண்டும் உத்தரவு வந்தால் மட்டும் துவங்கப்படும் என்றார்.
இது தொடர்பாக, பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கே.சுகுமார் கூறியது: கொப்பரைக் கொள்முதல் செய்வதில் 15 சதவீத நஷ்டத்தை மட்டும் மத்திய அரசு ஏற்கும் என்று தெரிவித்ததை அடுத்து வேளாண் துறை அமைச்சர் சரத்பவாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. மத்திய நிதியமைச்சகம் தான் இந்த உத்தரவை பிறப்பித்ததாக சரத்பவார் தெரிவித்தார். நிதியமைச்சரிடம் இது தொடர்பாக அவரே பேசுவதாகவும் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம்முதல் கொப்பரைக் கொள்முதல் விலை ரூ.52.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதை ரூ.60 ஆக உயர்த்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கோதுமை, நெல் உள்ளிட்ட பொருள்கள் கொள்முதலுக்கு இப் பிரச்னையில்லை. ஆனால், தமிழகம் மற்றும் கேரளத்தில் அதிகமாக உற்பத்தியாகும் கொப்பரைக்கு மட்டும் நிதியமைச்சகம் கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வியாபாரிகளுக்குப் பல கோடி நஷ்டம்
பருவமழை பெய்யாததால் கொப்பரையின் எடை குறைந்ததால் வியாபாரிகளுக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வாழ்நாள் பயிரான தென்னை அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு சுமார் 1000 உலர் களங்கள் உள்ளன. விவசாயிகளிடம் இருந்து தேங்காயை வாங்கும் வியாபாரிகள், அவற்றை உடைத்துக் காய வைத்து கொப்பரையாக்குவார்கள்.
பொதுவாக, 1000 தேங்காய்களை உடைத்தால் சுமார் 160 கிலோ கொப்பரை கிடைக்கும். ஆனால், மழை இல்லாததால் அளவு சிறுத்துப்போன தேங்காய்களால் சுமார் 130 கிலோ கொப்பரை மட்டுமே கிடைக்கிறது. இதனால், கிலோவுக்கு சுமார் ரூ.44 வீதம் குறைவாகக் கிடைக்கிறது. 30 கிலோவுக்கு ரூ.1,320 வீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் வியாபாரிகளுக்குப் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இப் பிரச்னையால் விவசாயிகளிடம் அதிகபட்சமாக தேங்காய் ரூ.5-க்குத்தான் கொள்முதல் செய்யப்படுகிறது.
இது தொடர்பாக, கோவை மாவட்ட தேங்காய் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் நல்லாம்பள்ளி நாச்சிமுத்து கூறியது:
பருவமழை உரிய நேரத்தில் பெய்யாததால் தேங்காயின் அளவு குறைந்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. மழை இல்லாததால் பல ஆயிரம் ஏக்கரில் தென்னை மரங்கள் கருகத் துவங்கியுள்ளன. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்குத் தகுந்த நஷ்டஈடு தர வேண்டும் என்றார்.
பிரச்னைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர்
கொப்பரைக் கொள்முதல் தொடர்பான பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என, வேளாண் துறை அமைச்சர் செ.தாமோதரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, "தினமணி' செய்தியாளரிடம் அவர் கூறியது:
நேபட் மூலமாக கொள்முதல் செய்யப்படும் கொப்பரையில் 15 சதவீத நஷ்டத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், கொப்பரைக் கொள்முதல் தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது. இப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...