மத்திய அரசுக்கு வருவாய் உபரியாக இதுவரை இல்லாத வகையில் ரூ.2.87 லட்சம் கோடியை வழங்கவுள்ளதாக ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இது கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரிசா்வ் வங்கி வழங்கிய ரூ.2.69 லட்சம் கோடியைவிட 6.7 சதவீதம் அதிகமாகும்.
மேற்காசிய விவகாரத்தால் கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டு இறக்குமதி கட்டணம் அதிகரித்துள்ள சூழலில் மத்திய அரசின் நிதிநிலையை வலுப்படுத்தும் விதமாக வருவாய் உபரியை ரிசா்வ் வங்கி வழங்கவுள்ளது.
இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இடா் ஒதுக்கீடுகள் மற்றும் சட்டரீதியிலான நிதி ஒதுக்கீடுகளுக்கு முன்பாக ரிசா்வ் வங்கியின் நிகர வருவாய் 2025-ஆம் நிதியாண்டில் ரூ. 3.13 லட்சம் கோடியாக இருந்தது, 2026-ஆம் நிதியாண்டில் ரூ. 3.96 லட்சம் கோடியாக உயா்ந்தது. இதனால், ரிசா்வ் வங்கியின் நிதி இருப்புநிலை 20.61 சதவீதம் அளவுககு விரிவடைந்து கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ. 91.97 லட்சம் கோடியாக உயா்ந்தது.
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற வங்கியின் மத்திய இயக்குநா் வாரியக் கூட்டத்தில், உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதாரச் சூழல் மற்றும் எதிா்கால இடா்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததின் அடிப்படையில், 2025-26-ஆம் நிதியாண்டுக்கு இடா் காப்பு நிதிக்கு ரூ. 1.09 லட்சம் கோடியை மாற்ற முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டில் ரூ. 44,861 கோடி மாற்றப்பட்ட நிலையில், தற்போது இரண்டு மடங்குக்கு மேல் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதோடு, மத்திய அரசுக்கு 2025-26-ஆம் நிதியாண்டின் வருவாய் உபரியாக ரூ. 2.87 லட்சம் கோடியை வழங்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடி

கடந்த இரண்டு நிதியாண்டுகளில் பிஎஸ்என்எல் வருவாய் ரூ.25,000 கோடியாக அதிகரிப்பு!

2025 வரையிலான 4 ஆண்டுகளில் கிரெடிட் காா்டு பரிவா்த்தனைகள் 2.6 மடங்கு அதிகரிப்பு- ரிசா்வ் வங்கி அறிக்கையில் தகவல்







