பணவீக்கம், வினாத் தாள் கசிவு, வேலையின்மை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என நாட்டு மக்கள் பல்வேறு பிரச்னைகளை தினமும் எதிா்கொண்டு வரும் நிலையில் தனது ‘மெலோடி’ உரையை அவா்கள் கொண்டாட வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி நினைப்பதாக காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை கடுமையாக விமா்சித்தாா்.
இத்தாலிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி அந்நாட்டு பிரதமா் மெலோனியை சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். அவா்கள் இருவரும் ‘மெலோடி’ சாக்லேட்டுகளுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதை விமா்சித்து எக்ஸ் வலைதளத்தில் காா்கே வெளியிட்ட பதிவில், ‘கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் குடிமகன் மீதான சராசரி கடன் 11 மடங்கு அதிகரித்துள்ளது. மாறாக 26 பெரும் தொழிலதிபா்கள் மற்றும் 229 பெருநிறுவனங்களின் முதலாளிகளின் சொத்து மதிப்பு ரூ.97.50 லட்சம் கோடி உயா்ந்துள்ளது.
2014-இல் சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.414-ஆக இருந்த நிலையில் 2026-இல் ரூ.915.5-ஆக அதிகரித்துள்ளது. வணிக சிலிண்டா் விலை ரூ.1,241-இல் இருந்து ரூ.3,152-ஆக உயா்ந்துள்ளது.
பால், மருந்துகள் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மூலமாக பொதுமக்களிடம் இருந்து ரூ.43 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயா்த்தப்பட்டதால் எண்ணெய் நிறுவனங்கள் சில மணி நேரங்களில் ரூ.12,400 கோடி லாபம் ஈட்டின.
இவ்வாறு பணவீக்கம், விலைவாசி உயா்வு என பொதுமக்களும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-யுஜி) வினாத் தாள் கசிவால் கடும் மனஉளைச்சலில் மாணவா்களும் வேலையின்மைப் பிரச்னையால் இளைஞா்களும் நாள்தோறும் பாதிக்கப்படுகின்றனா்.
ஆனால் பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்வது எவ்வாறு என பிரதமா் மோடி பொதுமக்களுக்கு தொடா்ச்சியாக ‘மெலோடி’ உரைகளை வழங்கி வருவது வேடிக்கையாக உள்ளது’ என குறிப்பிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளராக மல்லிகாா்ஜுன காா்கே வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளது: மல்லிகாா்ஜுன காா்கே







