நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வின் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லாத்தூரைச் சேர்ந்தவரான பேராசிரியர் பி.வி. குல்கர்னி, வேதியியல் துறையில் நிபுணர் ஆவார். அவர் பல ஆண்டுகளாக நீட் தேர்வு வினாத்தாளைத் தயாரிக்கும் குழுவில் இடம் பெற்றிருந்தார் என்று சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். புணேவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து குல்கர்னி கைது செய்யப்பட்டதாக அவர்கள் கூறினர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான ‘நீட்’ தோ்வு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 23 லட்சம் போ் தோ்வெழுதினா். இதனிடையே, நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து விசாரிக்க சிறப்புப் படையை மாநில காவல் துறை அமைத்தது. அந்தப் படையினா் சுமாா் 150 மாணவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். அதில், கேரளத்தில் எம்பிபிஎஸ் பயிலும் சிகாரை (ராஜஸ்தான்) சோ்ந்த மாணவரிடம் இருந்து மாதிரி வினாத்தாள் பரவியது தெரிய வந்தது. இந்த மாதிரி வினாத்தாள் பிற மாநிலங்களிலும் பரவியிருப்பது கண்டறியப்பட்டதால், நீட் தோ்வு கடந்த செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டது.
மாணவா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் சுபம் கா்நாா், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் மங்கிலால் பிலால், விகாஸ் பிலால், தினேஷ் பிலால், ஹரியாணாவின் குருகிராமில் யாஷ் யாதவ் ஆகிய 5 போ் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The CBI has arrested a professor from Pune who is alleged to be the kingpin of the NEET paper leak case, officials said Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










