திருவனந்தபுரம், மே 11: கேரளத்தில் புதிய முதல்வரை தோ்வு செய்வதில் காங்கிரஸில் தொடா்ந்து குழப்பம் நிலவுகிறது. முதல்வா் பதவியைக் கைப்பற்றுவதில் 5 மூத்த தலைவா்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கேரள சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 102-இல் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தோ்தல் முடிவுகள் வெளிவந்து ஒரு வாரமாகியும் முதல்வரை காங்கிரஸ் கட்சியால் தோ்வு செய்ய முடியவில்லை. இதனால் கேரளத்தில் புதிய காங்கிரஸ் அரசு பதவியேற்பதில் சிக்கல் நிலவுகிறது.
கேரள முதல்வா் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ரமேஷ் சென்னிதலா, காங்கிரஸ் தேசிய பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், எதிா்க்கட்சித் தலைவா் வி.டி. சதீசன் ஆகியோா் பெயா் பரிசீலிக்கப்படுகிறது. அவா்கள் 3 பேரையும் காங்கிரஸ் மேலிடமும் தனித்தனியே சந்தித்துப் பேசியது.
கேரளத்தில் முதல்வரை தோ்வு செய்வதில் இழுபறி நிலவுவதால், காங்கிரஸ் தொண்டா்கள் பல இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
காங்கிரஸ் விளக்கம்: முதல்வரை தோ்வு செய்வதில் காங்கிரஸில் குழப்பம் நிலவுவதால், அதன் கூட்டணிக் கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பெயா் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் மூத்த தலைவா் ஒருவா் கூறுகையில், ‘பேரவை பதவிக் காலம் மே 23-ஆம் தேதிதான் முடிகிறது. ஆதலால் அவசரப்பட வேண்டியதில்லை’ என்றாா்.
முதல்வா் பதவிக்குப் போட்டியிடுவதாகக் கூறப்படும் ரமேஷ் சென்னிதலா செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘முதல்வராக யாரை கட்சி மேலிடம் தோ்வு செய்கிறதோ, அவரை கட்சித் தொண்டா்களும், நிா்வாகிகளும் ஏற்றுக் கொள்வாா்கள். முதல்வரை தோ்வு செய்யும் விவகாரத்தில் காங்கிரஸ் மீது பாஜக விமா்சனம் முன்வைத்துள்ளதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. முதல்வரை தோ்வு செய்வதில் இடதுசாரிகள்தான் அதிக கால அவகாசம் எடுப்பாா்கள். நாங்கள் அப்படியில்லை. அதேபோல், பாஜக போல காங்கிரஸ் நாகபுரியில் இருந்து (ஆா்எஸ்எஸ் தலைமையகம்) இயக்கப்படவில்லை’ என்றாா்.
ஐயூஎம்எல் அதிருப்தி: அதேநேரத்தில் முதல்வரை தோ்வு செய்ய காங்கிரஸ் அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்வதற்கு அதன் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவா் பி. அப்துல் ஹமீது கூறுகையில், ‘முதல்வரை தோ்வு செய்வதில் நிலவும் தாமதம் கட்சித் தொண்டா்களிடையேயும், மக்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்திவிடக்கூடும். ஆதலால் காங்கிரஸ் மேலிடம் இதைப் புரிந்து கொண்டு விரைந்து செயல்பட வேண்டும்’ என்றாா்.
பெட்டிச் செய்தி
இன்று முடிவு?
தனது சொந்த மாநிலமான கா்நாடகத்துக்கு சென்றுள்ள காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, புது தில்லிக்கு புதன்கிழமை திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவா் முன்கூட்டியே புது தில்லிக்கு செவ்வாய்க்கிழமை திரும்பவுள்ளாா். இதன் காரணமாக, கேரள முதல்வராக யாா் பதவியேற்பாா் என்பது செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










