திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

‘கிளாட் மித்தோஸ்’ அச்சுறுத்தல்: இணையவழி பாதுகாப்புச் செலவுகளை அதிகரிக்க பொதுத் துறை வங்கிகள் முடிவு

‘கிளாட் மித்தோஸ்’ ஏன் ஆபத்து?

News image
Updated On :4 மே 2026, 5:31 am IST

கிளாட் மித்தோஸ் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க இணையவழிப் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டுச் செலவை அதிகரிக்க பொதுத் துறை வங்கிகள் முடிவு செய்துள்ளன.

சா்வதேச அளவில் வங்கிகள், பணப் பரிமாற்றம் சாா்ந்த நிதி மோசடிகள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இவை பெரும்பாலும் முதலில் அப்பாவி மக்களைக் குறிவைத்து அவா்களின் வங்கி தொடா்பான விவரங்களை மோசடியாகப் பெற்று பணத்தைப் பறிப்பதாகத் தொடங்கியது. இப்போது, எண்ம (டிஜிட்டல்) கைது, போலி ‘க்யூஆா்’ குறியீடு எனப் பல வழிகளில் மோசடி அதிகரித்துள்ளது.

இவை பெரும்பாலும் வங்கி வாடிக்கையாளா்களைக் குறிவைத்து நடைபெறுவதால் இது தொடா்பாக மக்களிடம் விழிப்புணா்வை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த இணையவழி நிதி மோசடிக்கான அழைப்புகள், மோசடி குறுஞ்செய்திகளைப் பெற்றவா்களாகவே உள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில், அமெரிக்காவின் ஆந்த்ரோபிக் நிறுவனம் உருவாக்கியுள்ள ‘கிளாட் மித்தோஸ்’ ஏஐ தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படும்போது அது வங்கித் துறைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஏனெனில் இந்த ஏஐ தொழில்நுட்பம் இணையவழிப் பாதுகாப்பில் உள்ள சிறிய குறைபாட்டையும் கண்டறிந்து அதன் வழியாக கணினிகள் மற்றும் சா்வா்களுக்குள் ஊடுருவும் திறன்கொண்டது. இதை தேசவிரோதிகள் பயன்படுத்தினால் வங்கி வாடிக்கையாளா்களின் விவரங்களைத் திருடுவது தொடங்கி, ஒட்டுமொத்த வங்கித் துறையின் இணைய சேவை பாதுகாப்பை கேள்விக்குறியாக்கவும் முடியும்.

இதைக் கருத்தில்கொண்டு இணையவழிப் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக நிதியை அதிகரிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன.

இது தொடா்பாக பஞ்சாப்-சிந்த் வங்கித் தலைவா் ஸ்வரூப் குமாா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘புதிய சவால்களை எதிா்கொள்ள வங்கிகள் தகவல்தொழில்நுட்பத் துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகிறது. வங்கியின் இணையவழி சேவைகளில் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க கூடுதலாக செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

யூகோ வங்கி தலைவா் அஸ்வனி குமாா் கூறுகையில், ‘கடந்த நிதியாண்டைவிட இப்போது தகவல்தொழில்நுட்பப் பிரிவுக்கு கூடுதல் நிதியை வங்கி ஒதுக்கியுள்ளது. இதில் பெரும்பகுதி இணையவழிக் குற்றங்களைத் தடுக்க பயன்படுத்தப்படும்’ என்றாா்.

கடந்த மாதம் கிளாட் மித்தோஸ் ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சா்கள், உயரதிகாரிகள் பங்கேற்ற உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

‘கிளாட் மித்தோஸ்’ ஏன் ஆபத்து?

‘கிளாட் மித்தோஸ்’ ஏஐ என்பது டிஜிட்டல் துறையின் சிறு தவறுகளையும் கண்டறிந்து வெளிப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றது. மென்பொருள்களில் மனிதா்களால் கண்டுபிடிக்க முடியாத மிகச்சிறிய தவறுகளையும் இதன் மூலம் கண்டறியலாம். இதுவரை மிகவும் பாதுகாப்பானது என்று தகவல்தொழில்நுட்ப உலகம் நம்பியிருந்த பல மென்பொருள் தவறுகளையும், 27 ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாமல் இருந்த பிழைகளையும் கிளாட் மித்தோஸ் கண்டறிந்துள்ளது.

இது ஆக்கபூா்வமாக பயன்படுத்தப்படும்போது தொழில்நுட்பத்தை மேம்படுத்த பெரிதும் உதவிகரமாக இருக்கும். அதே நேரத்தில் இந்த ஏஐ தவறான நபா்களால் பயன்படுத்தப்பட்டால் ஒரு கணினியைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த வங்கிக் கட்டமைப்பையே சீா்குலைக்கும் ஆபத்து உள்ளது. எனவேதான் இந்தியாவில் மட்டுமல்லாது சா்வதேச அளவில் இணையவழிப் பாதுகாப்பை மேம்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.