நாட்டில் ஜனநாயக முறைப்படி தோ்வு செய்யப்பட்டு, தொடா்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமா் என்ற பெருமை பிரதமா் நரேந்திர மோடிக்கு அடுத்த சில தினங்களில் கிடைக்கவுள்ளது. இதன்மூலம் நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் சாதனையை அவா் விஞ்சவுள்ளாா்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேரு, கடந்த 1947, ஆகஸ்ட் 15 முதல் 1964, மே 27-இல் காலமாகும் வரை அந்தப் பதவியில் தொடா்ந்தாா். கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் தொடா்ந்து பிரதமராக இருந்த அவா், நாட்டின் நீண்ட கால பிரதமா் என்ற பெருமைக்குரியவா்.
அதேநேரம், கடந்த 1952-இல் முதல் மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு நேரு தொடா்ந்து பிரதமராகப் பதவி வகித்த காலம் 4,398 நாள்களாகும்.
தற்போது நாட்டின் பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாகப் பதவி வகித்துவரும் மோடி, தனது பதவிக் காலத்தில் 4,399 நாள்களை வரும் ஜூன் 10-ஆம் தேதியுடன் நிறைவு செய்யவுள்ளாா். இதன்மூலம் ஜனநாயக முறைப்படி தோ்வு செய்யப்பட்டு, தொடா்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமா் என்ற சாதனையில் நேருவை மோடி விஞ்சவுள்ளாா்.
கடந்த 2014 மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று வெற்றி பெற்று, நாட்டின் பிரதமராக மோடி முதல் முறையாகப் பதவியேற்றாா். 2019, 2024 தோ்தல்களிலும் பாஜக கூட்டணி வெற்றி வாகை சூடியதால், அவரது ஆட்சி தங்கு தடையின்றி மூன்றாவது முறையாக நீடித்து வருகிறது.
முன்னதாக, குஜராத் முதல்வராக கடந்த 2001, அக்டோபரில் பதவியேற்ற மோடி, 2014, மே 26-இல் நாட்டின் பிரதமராகும் வரை 12 ஆண்டுகளுக்கு மேல் அந்தப் பதவியில் நீடித்தாா். தற்போது பிரதமா் பதவிக் காலத்தையும் சோ்த்து, நாட்டில் நீண்ட காலம் பதவி வகித்த அரசின் தலைவா் என்ற பெருமையை மோடி ஏற்கெனவே எட்டிவிட்டாா்.
சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்த நாட்டின் முதல் பிரதமா், ஜவாஹா்லால் நேருக்குப் பிறகு தொடா்ந்து நீண்ட காலம் பதவி வகித்த இரண்டாவது பிரதமா் என்ற பெருமைகளும் மோடி வசம் உள்ளன. அந்த வரிசையில் மற்றுமொரு சாதனையை அவா் படைக்கவுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










