தாமதமாகும் ககன்யான்!
நிகழாண்டுக்குள் 3 சோதனை விண்கலங்களை விண்ணுக்கு செலுத்தி வெற்றி பெற்றால் மட்டுமே, 2027-இல் விண்வெளிவீரர்களை ஏற்றிக்கொண்டு ககன்யான் விண்கலம் விண்ணுக்கு செல்ல முடியும்.


அமெரிக்க விஞ்ஞானி ராபர்ட் கொடார்ட் மேற்கொண்டு வந்த பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, அவர் வடிவமைத்து, தயாரித்த முதல் ஏவூர்தி (ராக்கெட்) 1926, மார்ச் 16-ஆம் தேதி விண்ணுக்கு சென்று சாதனை படைத்தது.
அதைத்தொடர்ந்து, ஜெர்மனி வடிவமைத்த வி2 ஏவூர்தி, 1944, ஜூன் 20- ஆம் தேதி ஆய்வுப் பொருளுடன் 174 கி.மீ. தொலைவுக்கு விண்ணுக்கு சென்றது. 1957, அக். 4-ஆம் தேதி ஸ்புட்னிக்1 விண்கலத்தை ஸ்புட்னிக் பிஎஸ் ஏவூர்தி மூலம் சோவியத் ரஷியா விண்ணில் செலுத்தியது.
1957, நவ. 3ஆம் தேதி ஸ்புட்னிக் 2 விண்கலத்தின் மூலம் 'லைக்கா' என்ற நாய் முதன்முறையாக விண்வெளிக்கு சோவியத் ரஷியாவால் அனுப்பப்பட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, 1961, ஏப். 12-ஆம் தேதி யூரி காகரின் என்ற சோவியத் ரஷிய விண்வெளிவீரர், விண்ணுக்கு சென்று பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினார்.
இவற்றின் தொடர்ச்சியாக, 1963, நவ. 21-ஆம் தேதி இந்தியா முதன்முறையாக ஆராய்ச்சி ஏவூர்தியை விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது. 1969, ஜூலை 16-ஆம் தேதி நிலவுக்கு சென்ற அமெரிக்காவின் அப்பல்லோ 11 ஏவூர்தி, முதன்முறையாக மனிதனை நிலவில் கால்பதிக்கவைத்து, மீண்டும் பூமிக்கு அழைத்து வந்தது.
1969, ஜூலை 20-ஆம் தேதி அமெரிக்க விண்வெளி வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் இருவரும் நிலவில் இறங்கி ஆய்வு மேற்கொண்டு, சாதனை படைத்தனர்.
கலாம் கனவு: ஏவூர்தி கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகளைத் தொடும் நிலையில், மனிதனை விண்ணுக்கு அழைத்துச் சென்று, மீண்டும் பூமிக்கு அழைத்துவரும் முயற்சியில் வெற்றிபெற இந்தியா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
2006-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள ஃபிசிகல் ரிசர்ச் லெபாரட்டரியில் பேசிய அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், "2014- ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி வீரர்கள் 2 பேர் விண்ணுக்குச் சென்று, ஆய்வுகளை முடித்துக்கொண்டு, வங்காள விரிகுடா வழியாக பூமிக்கு திரும்புவதாக கனவு கண்டேன். அதேபோல, 2025, ஆக. 15-ஆம் தேதி இந்திய விண்வெளி வீரர்கள் நிலவில் கால்பதித்து, 15 நாள்கள் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபடுவார்கள். அதன்பிறகு பூமிக்குத் திரும்பும்போது, அன்றைய பிரதமர் நேரில் சென்று நமது விண்வெளிவீரர்களை வரவேற்பார். அவர்களை வரவேற்க கூடியிருக்கும் பெருந்திரளில், 95 வயதை நெருங்கும் வலிமை வாய்ந்த மனிதனாக விண்வெளி வீரர்களை நெருங்கும் நபராக நானும் இருப்பேன் என்று கனவு கண்டேன்' என்று குறிப்பிட்டிருந்தார். அவரது கனவை நனவாக்க இந்தியா தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்திய முயற்சி: சோவியத் ரஷியாவின் சோயூஸ் டி11 விண்கலத்தில் 1984, ஏப். 3-ஆம் தேதி இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, முதன்முறையாக விண்ணுக்கு சென்று பூமிக்கு திரும்பினார். அதைத்தொடர்ந்து, அமெரிக்காவின் ஆக்சிம் 4 விண்கலத்தில் 2025, ஜூன் 25-ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று, 20 நாள்களுக்குப் பிறகு பூமிக்கு திரும்பி சாதனை படைத்தார் இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா.
இதன் தொடர்ச்சியாக, மனிதனை விண்ணுக்கு அனுப்பி, மீண்டும் பூமிக்கு அழைத்துவரும் "ககன்யான்' திட்டத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை முன்மொழிந்துள்ளதாக அன்றைய இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் 2007, ஆக. 9-ஆம் தேதி அறிவித்திருந்தார். ரூ. 12,400 கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு இந்திய அரசும் 2009-இல் ஒப்புதல் அளித்துவிட்டது.
ஆனாலும், திட்டத்தை செயல்படுத்தப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்க 10 ஆண்டுகள் பிடித்தன. இறுதியாக, 2018, ஆக. 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி மனிதனை விண்ணுக்கு அனுப்பும் "ககன்யான்' திட்டத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தார். 2021-ஆம் ஆண்டில் 'ககன்யான்' விண்கலம் இந்திய விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு செலுத்த திட்டமிடப்பட்டது.
ககன்யான் திட்டம்:
உலக அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ககன்யான்' வெற்றிபெறும்போது, மனிதனை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்த நாடுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா வரிசையில் 4-ஆவது நாடாக இந்தியாவும் இடம்பெற்று, புதிய வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைக்கு 2027-ஆம் ஆண்டு விண்வெளிவீரர்களுடன் ககன்யான் விண்கலத்தை விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பூமியில் இருந்து 400 கிமீ தொலைவுக்கு விண்கலனை அனுப்பி, 3 நாள்கள் விண்வெளியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட பிறகு விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளது.
பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, விண்ணுக்கு அனுப்புவதற்காக இந்திய விமானப் படையின் வீரர்கள் குரூப் கேப்டன்கள் பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபான்ஷு சுக்லா ஆகிய 4 பேரை தேர்வுசெய்து, ரஷியாவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களை ஏற்றிச்செல்லும் விண்கலத்தை செலுத்துவதற்கு முன்பாக, 3 முறை ஆளில்லா விண்கல சோதனையை மேற்கொள்ள இஸ்ரோ திட்டம் வகுத்துள்ளது. முதல் ஆளில்லா சோதனை விண்கலத்தை அடுத்த மாதம் விண்ணுக்கு செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆளில்லா முதல் சோதனை விண்கலனில் 'வியோமித்ரா' என்ற மனித உருவம் கொண்ட இயந்திர மனிதனை (ரோபோ) இஸ்ரோ அனுப்ப உள்ளது.
அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும் ரோபோ, விண்வெளி வீரர்களுக்கு அளிக்கப்படும் கட்டளைகளைப் படிக்கவும், பதில் அளிக்கவும் திறன்கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளை படிக்க, புரிந்துகொள்ள, பதிலளிக்க முடியும். மனிதர்களுக்கு மாற்றாக அனுப்பப்படும் ரோபோ, விண்கல நடைமுறைகளை பகுப்பாய்வு செய்தல், காற்றழுத்தம், வெப்பநிலை போன்ற சுற்றுச்சூழல் அளவுருக்களைக் கண்காணித்தல், பயணத் தரவுகளை கண்காணிக்க சிறப்பு சென்சார்களைக் கொண்டு செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளது.
மேலும், இந்த ரோபோ சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்புகளை இயக்கலாம், காற்றழுத்த மாற்றங்கள் குறித்த எச்சரிக்கைகளை வெளியிடலாம் மற்றும் ஸ்விட்ச் பேனல் செயல்பாடுகளுக்கு உதவலாம். அடிப்படையில் ஒரு மனித விண்வெளி வீரர் நிறைவேற்றும் பல செயல்களை ரோபோ நிறைவேற்றும்.
இதுதவிர, பூமியில் உள்ள கட்டளை கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்புகொள்ளவும், நுண் ஈர்ப்பு சோதனைகளை மேற்கொள்ளவும், விண்வெளிப் பயணத்தின்போது உடலியல் அளவுருக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதைக் கவனிக்கவும் பயன்படுத்தப்படவுள்ளது.
வெல்லுமா சோதனை?: நிகழாண்டுக்குள் 3 சோதனை விண்கலங்களை விண்ணுக்கு செலுத்தி வெற்றி பெற்றால் மட்டுமே, 2027-இல் விண்வெளிவீரர்களை ஏற்றிக்கொண்டு ககன்யான் விண்கலம் விண்ணுக்கு செல்ல முடியும். ககன்யான் விண்கலத்திற்கான எல்லா முன்னேற்பாடுகளையும் துரிதகதியில் செயல்படுத்தி வரும் இஸ்ரோ, அதில் முழுமையாக வெற்றி பெற முடியாமல் தவித்து வருவது விண்வெளி அறிஞர்களை வியப்படையச் செய்துள்ளது.
ககன்யான் மனித விண்வெளிப் பயணத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பூமியில் இருந்து 400 கிலோ தொலைவில் இந்திய விண்வெளி நிலையத்தை (பாரதிய அந்தரீக்ஷ் ஸ்டேஷன்) அமைத்து, அங்கிருந்து விண்வெளி ஆராய்ச்சியை முடுக்கிவிட இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ககன்யான் விண்வெளிப் பயணத்தின் வெற்றியில் இருந்து 7 ஆண்டுகளில் இது உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக, 2035-ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையத்தை அமைக்க இஸ்ரோ திட்டம் வகுத்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் பல மைல்கற்களைத் தொட்டுள்ள இஸ்ரோ, மேலும் பல சாதனைகளை நிகழ்த்தும் என்பதை நம்பலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...