தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறந்துவைக்கப்பட்டது குறித்து...

News image
ராஜாஜி சிலையை திறந்து வைத்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்- படம் - எக்ஸ் / President of India
Updated On :23 பிப்ரவரி 2026, 11:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில், சுதந்திர இந்தியாவின் முதலாவது மற்றும் கடைசி இந்திய கவா்னா் ஜெனரல் சி. ராஜகோபாலாச்சாரியின் சிலையை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (பிப். 23) திறந்து வைத்தார்.

விடுதலை மற்றும் சுதந்திர இந்தியாவில் ராஜாஜியின் பங்களிப்புகளை பிரதிபலிக்கும் வகையில் ராஜாஜி உத்சவ் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ராஜாஜியின் வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்த கண்காட்சி பிப். 24 முதல் மார்ச் 1, 2026 வரை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ஆங்கிலேயா் புகழ் போற்றும் அடையாளங்கள், சின்னங்கள் மெல்ல விலக்கிக்கொள்ளப்பட்டு சுதந்திர இந்தியாவில் பெரிதும் பங்களிப்பு செய்த தலைவர்கள், தியாகிகள் கெளரவிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், தில்லியின் முக்கிய அரசுக் கட்டடங்கள் அமைந்த செளத் பிளாக், நாா்த் பிளாக், குடியரசுத் தலைவா் மாளிகை உள்ளிட்ட கட்டடங்களை கட்டிய பிரிட்டிஷ் கட்டடக் கலைஞா் எட்வின் லூட்யன் நினைவாக குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்த அவரின் சிலை அகற்றப்பட்டு, அந்த இடத்தில் ராஜாஜி சிலை திறக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் அசோக மண்டபத்திற்கு அருகிலுள்ள பிரமாண்டமான திறந்த படிக்கட்டில் அமைக்கப்பட்ட ராஜாஜியின் மார்பளவு சிலையை திரெளபதி முர்மு இன்று (பிப். 23) திறந்து வைத்தார்.

ராஜாஜி சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள், (வலது புறம்) ராஜாஜி குடும்ப உறுப்பினர்கள்

ராஜாஜி சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள், (வலது புறம்) ராஜாஜி குடும்ப உறுப்பினர்கள்

இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிலை திறப்பு நிகழ்ச்சியில் பேசிய திரெளபதி முர்மு, இந்தியாவின் ஆன்மிக மற்றும் சேவை பாரம்பரியத்தை மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தும் வகையிலான பணிகளில் ராஜாஜி தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து முர்மு பேசியதாவது:

''அரசு மாளிகையில் உள்ள தனது அறையில் ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் மகாத்மா காந்தியின் உருவப்படங்களை ராஜாஜி வைத்திருந்தார். இந்தியாவின் பாரம்பரியத்தில் பெருமை கொள்ளவும், அடிமை மனநிலையின் எச்சங்களை ஒழிக்கவும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்ட தேசிய பிரசாரத்தில் ராஜாஜியின் லட்சியங்கள் என்றும் பிரதிபலிக்கும்.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது நாட்டு மக்களை அந்நியமாகப் பார்க்கும் பார்வை இருந்தது. நமது சொந்த சுதந்திர நாட்டில், நமது சொந்த ஜனநாயகத்தில், மக்களுடன் இணைவது நமது கொள்கை. குடியரசுத் தலைவர் மாளிகை என்பது தேசத்தின் கட்டுமானம். அனைத்து குடிமக்களின் கட்டுமானம் என்று நம்புகிறேன். அனைத்து குடிமக்களையும் வரவேற்க அதன் கதவுகள் திறந்திருக்கும்.

ராஜாஜி உத்சவத்தின் ஒரு பகுதியாக, ராஜாஜியின் வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்த கண்காட்சி பிப். 24 முதல் மார்ச் 1 வரை குடியரசுத் தலைவர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

summary

Rajaji's statue unveiled at the Rashtrapati Bhavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.