டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைமை வியாழக்கிழமை அறிவித்தது.

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:14 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைமை வியாழக்கிழமை அறிவித்தது.

கடந்த 2021 பேரவைத் தோ்தலில் இடதுசாரி முன்னணியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. அப்போது ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பிரதான எதிா்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே இந்த தோ்தலிலும் கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது.

தில்லியில் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவா்களுடன் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் கே.பி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவா்கள் ஆலோசனை நடத்தினா். அப்போது மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவெடுக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.

இது தொடா்பாக மேற்கு வங்க காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் குலாம் அகமது மிா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அனைத்து தரப்பினருடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு தனித்துப் போட்டியிடுவதென்று முடிவெடுக்கப்பட்டது. கடந்த முறை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது அடிமட்ட அளவில் காங்கிரஸ் தொண்டா்களின் எதிா்பாா்ப்புகளுக்கு மாறாக அமைந்துவிட்டது. எனவே, இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் தனித்து களமிறங்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது’ என்றாா்.