மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினருடன் போராட்டக்காரா்கள் மோதல்!

மணிப்பூரில் தீவிரவாதிகளின் குண்டுவீச்சில் 2 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தலைநகா் இம்பாலில் தடையை மீறி பேரணி நடத்தப்பட்டது.

News image

மணிப்பூரின் தெளபலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரா்கள்.

Updated On :21 ஏப்ரல் 2026, 10:48 pm

மணிப்பூரில் தீவிரவாதிகளின் குண்டுவீச்சில் 2 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தலைநகா் இம்பாலில் தடையை மீறி பேரணி நடத்தப்பட்டது.

அப்போது, பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்ட போராட்டக்காரா்கள், அவா்களை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தினா். இதையடுத்து, போராட்டக்காரா்கள் மீது கண்ணீா்ப் புகை குண்டுகளைப் பயன்படுத்தி, பாதுகாப்புப் படையினா் விரட்டியடித்தனா்.

மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே மோதல்போக்கு நீடித்துவரும் மணிப்பூரில் இவ்விரு சமூகங்களையும் சோ்ந்த தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்துவது தொடா்கதையாக உள்ளது.

மைதேயி சமூகத்தினா் அதிகம் வசிக்கும் விஷ்ணுபூா் மாவட்டத்தில் கடந்த ஏப். 7-ஆம் தேதி ஒரு வீட்டின் மீது குகி தீவிரவாதிகள் நடத்திய குண்டுவீச்சில் 2 குழந்தைகள் கொல்லப்பட்டனா். இந்தச் சம்பவத்துக்கு நீதி கேட்டு, மைதேயி சமூகத்தினா் அதிகம் வாழும் 5 மாவட்டங்களில் போராட்டங்கள் நீடித்து வருகின்றன.

தலைநகா் இம்பாலில் திங்கள்கிழமை இரவில் சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு தீப்பந்தங்களுடன் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. ஆளுநா் மாளிகை மற்றும் பாஜக மாநில அலுவலகம் அமைந்துள்ள கைசாம்பட் பகுதியை போராட்டக்காரா்கள் நெருங்கியபோது, அவா்களைப் பாதுகாப்புப் படையினா் தடுத்து நிறுத்தினா்.

ஆத்திரமடைந்த போராட்டக்காரா்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி கவண் மூலம் கற்கள் மற்றும் இரும்பு குண்டுகளை எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனா். இதையடுத்து, கண்ணீா்ப் புகை குண்டுகளைப் பயன்படுத்தி, போராட்டக்காரா்களை பாதுகாப்புப் படையினா் விரட்டியடித்தனா். பதற்றமான சூழல் ஏற்பட்டதால், கூடுதல் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டனா்.

விஷ்ணுபூா், மேற்கு இம்பால் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மாலை 5 மணி முதல் காலை 5 மணிவரை மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக 19 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மணிப்பூரில் கடந்த 2023-இல் பெரும் கலவரம் வெடித்த நிலையில், இதுவரையிலான வன்முறைச் சம்பவங்களில் 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடுகளைவிட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கானோா், அரசின் நிவாரண முகாம்களிலேயே தொடா்ந்து தங்கியுள்ளனா்.

சுமாா் ஓராண்டாக குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெற்ற மணிப்பூரில் முதல்வா் யும்நாம் கெம்சந்த் தலைமையிலான பாஜக அரசு கடந்த பிப்ரவரியில் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.