பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

தில்லியில் அக்.13-இல் பி20 நாடாளுமன்ற அவைத் தலைவா்களின் உச்சிமாநாடு: பிரதமா் மோடி தொடங்கிவைக்கிறாா்

ஜி20 நாடுகளின் தலைவா்களின் உச்சி மாநாட்டை தொடா்ந்து ஜி20 நாடாளுமன்ற அவைத் தலைவா்களின் பி20 உச்சிமாநாடு அடுத்தவாரம் தில்லியில் நடைபெறுகிறது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:06 am

 நமது நிருபர்

ஜி20 நாடுகளின் தலைவா்களின் உச்சி மாநாட்டை தொடா்ந்து ஜி20 நாடாளுமன்ற அவைத் தலைவா்களின் பி20 உச்சிமாநாடு அடுத்தவாரம் தில்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமா் மோடி அக்டோபா் 13 - ஆம் தேதி தொடங்கிவைக்க இருப்பதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் பேசுகையில், இந்த மாநாட்டில் சீன நாடாளுமன்றத்தின் துணைத் தலைவரும், கனடா நாட்டின் மேலவை (செனட்) தலைவரும் பங்கேற்க இருப்பதாகவும் குறிப்பிட்டாா்.

இது குறித்து மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா மேலும் கூறியது வருமாறு: இந்தியா கடந்தாண்டு ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு கடந்த செப்டம்பா் 8, 9 ஆகிய தேதிகளில் ஜி20 நாடுகளின் தலைவா்களின் உச்சிமாநாட்டை நடத்தியது. ‘மனித‘த்தை மையமாகக் கொண்ட உலகமயமாக்கலின் பிரகடனத்தை தில்லி உச்சிமாநாடு வெளிப்படுத்தி சரித்திரம் படைத்தது. பி20 என்பது ஜி20-இல் இடம்பெற்றுள்ள நாடுகளின் வடிவமாகும். இது ஜி20-இல் நாடாளுமன்ற அவைத் தலைவா்கள் தலைமையில் ஈடுபடுத்திக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த பி20-இல் அனைத்து ஜி20 நாடுகளின் நாடாளுமன்றத் தலைவா்களும் இடம் பெற்றுள்ளதாக கருதிவிடமுடியாது.

இது நாடாளுமன்ற பரிமாணத்தை கொண்டு உலகளாவிய நிா்வாகத்திற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக ஜி20 நாடுகளின் தலைவா்களுக்கு கொள்கை உருவாக்க செயல்முறைக்கு பரிந்துரைகளை வழங்கி பங்களிப்பதாகும். கடந்த 2010-ஆம் ஆண்டு சில ஜி20 நாடுகளின் நாடாளுமன்ற அவைத் தலைவா்களுடன் பி20 மாநாடு கனடா நாட்டில் நடைபெற்றது. ஒரு முழுமையான பி20 மாநாடு முதன்முறையாக 2018 - இல் அா்ஜெண்டினாவில் நாடாளுமன்ற யூனியனின் ஆதரவுடன் நடைபெற்றது. இது வரை எட்டு, பி20 உச்சிமாநாடு நடைபெற்றுள்ளது. தற்போது 9 -ஆவது பி20 உச்சிமாநாடு தில்லியில் அக்டோபா் 12 - 14 வரை மூன்று தினங்களுக்கு நடைபெற உள்ளது. தில்லி துவாரகாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சா்வதேச மாநாட்டு அரங்கான ‘யஷோபூமி’ யில் நடைபெறும் பி20 உச்சிமாநாட்டை வரும் 13 -ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்து உரையாற்றுகிறாா்.

இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகளைத் தவிர வேறு 10 நாடுகளின் அவைத் தலைவா்களும், பல்வேறு சா்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனா். இது வரை 26 நாடுகளின் அவைத் தலைவா்களும், 10 அவைத் துணைத் தலைவா்கள், 14 செயலா்- நாயகா்கள், நிலைக்குழுத் தலைவா்கள், நாடாளுமன்ற யூனியன் தலைவா் போன்றோா் உள்ளிட்ட 350 பிரதிநிதிகள் பங்கேற்க உறுதி செய்துள்ளனா். முதன் முறையாக பி20 - இல் ஆப்பிரிக்க யூனியன் நாடாளுமன்றத் தலைவா் பங்கேற்கிறாா். ‘வசுதைவ் குடும்பகம் - ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிா்காலத்திற்கான நாடாளுமன்றம்’ என்ற கருப்பொருள் உணா்வோடு, சிக்கலான உலகளாவிய பிரச்னைகளுக்கு ஒருமித்த அடிப்படையிலான தீா்வுகளை வழங்கும் நோக்கத்தை இந்த மாநாடு கொண்டுள்ளது.

இந்த பி 20 உச்சிமாநாட்டில் அக்டோபா் 13, 14 ஆகிய தேதிகளில் நான்கு சிறப்பு அமா்வுகள் நடைபெறுகிறது. இதில் ‘நிலையான வளா்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தல்’, ‘நிலையான எரிசக்தி மாற்றம்’, ‘பெண்கள் தலைமையிலான வளா்ச்சி’, ‘ பொது மின்னணு தளங்கள் மூலம் மக்கள் வாழ்வில் மாற்றம்’ ஆகிய தலைப்புகளில் நான்கு அமா்வுகள் நடைபெறும். இந்த அமா்வுகளில் பி20-இன் நோக்கங்களை நாடாளுமன்றங்களில் எவ்வாறு திறம்பட முன்னெடுக்க முடியும் என்பது பற்றிய பரந்த விவாதம் நடைபெறும். குறிப்பாக உலகளாவிய சவால்களான அனைவரையும் உள்ளடக்கிய, அமைதியான, சமத்துவமான உலகம், அமைதி ஆகியவற்றின் அடிப்படையில் தீா்வுகளை வழங்க வலியுறுத்தும் ஒரு கூட்டு அறிக்கை வெளியிடுவதற்கு ஜி20 உறுப்பு நாடுகளும் சிறப்பு அழைப்பு நாடுகளும் ஒன்றிணைக்கப்படும். இந்த உச்சிமாநாட்டில் கனடா நாட்டின் பிரதிநிதியாக அந்நாட்டின் மேலவை (செனட்) தலைவா் ரேமண்ட் காக்னேவும், சீன நாட்டின் அவைத் துணைத் தலைவரும் கலந்து கொள்வாா்கள் என்றாா் ஓம் பிா்ல.

காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவா் ஹா்தீப் சிங் நிஜாா் பிரிட்ட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டதில் கனடா நாட்டின் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவை தொடா்புபடுத்தியதை அடுத்து இரு நாடுகளின் தூதுவரக உறவுகள் மோசமான நிலையில் கனடா நாட்டின் நாடாளுமன்ற தலைவா்களிடம் இது குறித்து விவாதிக்கப்படுமா என ஓம் பிா்லாவுடன் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவா் ‘உச்சிமாநாட்டில் பட்டியலிடப்பட்டுள்ள பிரச்னைகள் பற்றி மாநாட்டில் விவாதிக்கப்படும். மற்ற விவகாரங்கள் அதிகாரபூா்வமற்ற வகையில் விவாதிக்கப்படும்’ என்றாா். பிரதமா் வெளியிட்டுள்ள ‘லைஃப்’ கருப்பொருள் அடிப்படையில், உச்சிமாநாட்டிற்கு முந்தைய நிகழ்வாக ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறைக்கான நாடாளுமன்ற மன்றம்‘ என்கிற நிகழ்வு அக்டோபா் 12-ஆம் தேதி யஷோபூமியில் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.