கன்னியாஸ்திரீ அபயா கொலை செய்யப்பட்டு சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு, கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது, நீதிக்குக் கிடைத்த வெற்றி என்ற அடிப்படையில் பல தரப்பினரும் கொண்டாடி வருகிறார்கள்.
ஒரு வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்கள், குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. அவ்வளவுதானே.. இதில் நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லப்படுவதற்குக் காரணம், அந்த வழக்கு சுமார் 28 ஆண்டு காலப் போராட்டங்களைக் கடந்துதான் இன்று தீர்ப்பு எனும் முற்றுப்புள்ளியை அடைந்துள்ளது.
அந்த வழக்கை மூடி மறைக்கவும், தற்கொலை என்று மூடவும், ஒரு துப்புக் கூட கிடைக்கவில்லை என்று வழக்கை முடிக்கவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஒரு போதும் துவளாமல் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத் தந்தே ஆக வேண்டும் என்று போராடியவர்கள்தான் இந்த வழக்கில் முக்கிய நாயகர்கள். ஆனால், இவ்வளவு தாமதமாகக் கிடைத்த நீதிதான் அவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியிருக்கும்.
ஒட்டுமொத்த விசாரணை அமைப்பும் இந்த வழக்கில் நீதி கிடைக்கக் கூடாது என்பதற்காக கடுமையாக உழைத்த நிலையில், ஒரு சில தனிநபர்கள், சில சமூக ஆர்வலர்கள், நீதிக்காக போராடிய நீதிபதிகள் தான் இன்று அபயா வழக்கில் நீதி நிலைநாட்டக் காரணமாக அமைந்தனர்.
இதையும் படிக்கலாமே.. கேரள கன்னியாஸ்திரீ கொலை வழக்கில் நியாயம் கிடைக்க உதவிய ஒரு திருடனின் வாக்குமூலம்
1992-ஆம் ஆண்டு நடைபெற்ற அபயா கொலை வழக்கில், பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரீ செபி ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதித்து திருவனந்தபுரத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பில், வழக்கு சந்தித்த பல விஷயங்களை நீதிபதிகளே தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
கேரளத்தைச் சேர்ந்த தாமஸ், லீலாம்மா தம்பதியின் மகள் அபயா (21). கன்னியாஸ்திரீயான அவர், கோட்டயத்தில் உள்ள புனித பயஸ் கான்வென்ட்டில் தங்கி, அதே நகரில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு மேற்கொண்டு வந்தார். கடந்த 1992-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கான்வென்ட் கிணற்றில் அவர் சடலமாக கிடந்தார்.
இது தொடர்பாக முதலில் உள்ளூர் காவலர்களும், பின்னர் குற்றப் பிரிவு காவலர்களும் விசாரணை நடத்தினர். இதில் அபயா தற்கொலை செய்துகொண்டதாக அவர்கள் முடிவுக்கு வந்தனர்.
ஆனால் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த வழக்கை பின்னர் சிபிஐ விசாரித்தது. இது தற்கொலையல்ல, அபயா கொலை செய்யப்பட்டார் என்று தெரிவித்தபோதிலும், தகுந்த சாட்சியங்கள் இல்லாததாலும், குற்றவாளிகளைக் காணவில்லையென கூறியும் மூன்று முறை விசாரணை நடத்தி முடித்துவைக்கும் அறிக்கையை அளித்தது.
செல்வாக்குள்ள முக்கிய குற்றவாளிகளை சிபிஐ காப்பாற்ற எண்ணுவதாக, 2008-இல் கேரள உயர்நீதிமன்றம் சிபிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்து மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவு பிறப்பிக்கப்படவே சுமார் 16 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதையும் படிக்கலாமே.. கேரள கன்னியாஸ்திரீ கொலை வழக்கு: பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
இதையடுத்து, நடைபெற்ற தீவிர விசாரணையில், பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் பூத்ருக்கயில், கன்னியாஸ்திரீ செபி ஆகிய மூவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதன்பிறகுதான் 2009-ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த மூவரும் தகாத உறவு வைத்திருந்ததாகவும் அவர்களின் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் அபயாவுக்குத் தெரிய வந்ததால், அவர் கோடரியின் கைப்பிடியால் தாக்கிக் கொலை செய்து, அருகிலிருந்த கிணற்றில் வீசியதாகவும் சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணைத் தொடங்கவே 10 ஆண்டுகள் ஆனது. காரணம் அத்தனை சட்டப்போராட்டங்களை அந்த வழக்கு சந்தித்தது. இறுதியாக வழக்கு விசாரணை, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதிதான் தொடங்கியது. இந்த வழக்கில் பாதிரியார் பூத்ருக்கயில் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் முன்னதாகவே விடுவிக்கப்பட்டார்.
அபாய வழக்கில் நீதியைத் தடுக்க அத்துனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. குற்றவாளிகளை காப்பாற்ற நினைத்தவர்கள், நீதியை தங்களால் இயன்ற அளவுக்கு வளைத்தனர். அதில் பெரும்பாலும் வெற்றியும் அடைந்தனர். கொலை வழக்கு என்று சாட்சியம் கூறும் அனைத்து ஆதாரங்களையும் காவல்துறையினர் அழித்தனர். வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் யாரேனும், இந்த வழக்கை கொலை வழக்கு என்ற கோணத்தில் விசாரிக்கத் தொடங்கினால் போதும், அவர்கள் விருப்ப ஓய்வு பெற நிர்பந்திக்கப்பட்டனர். பல சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறின. காரணம் கொலை மிரட்டல் அல்லது கோடிக்கணக்கான பண பேரம். ஆனால், ஒரு சிலர் மட்டுமே தங்களது வாக்குமூலத்தை மாற்றிக் கொள்ளவேயில்லை. கொலை மிரட்டல், பணப் பேரம் என எல்லாவற்றையும் தாண்டி தங்களது வாக்குமூலத்தை மாற்றிக் கொள்ளாத நல்லுள்ளங்களில் அந்த முன்னாள் திருடர் ராஜூவும் ஒருவர். அவரது சாட்சியமே இந்த கொலை வழக்கில் நீதி கிடைக்க பேருதவியாக இருந்தது.
இதையும் படிக்கலாமே.. கேரள கன்னியாஸ்திரீ அபயா கொலை வழக்கு: பாதிரியார் உள்ளிட்ட இருவர் குற்றவாளிகள்
இந்த வழக்கின் தீர்ப்பை, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் டிசம்பர் 22-ம் தேதி வெளியிட்டது. அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ செபி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று நீதிபதி ஜெ.சனல்குமார் தீர்ப்பளித்தார். அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.
கேரளத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் 28 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு வெளியானது. ஆனால் தங்களது மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்த அபயாவின் பெற்றோர் கடந்த 2016-இல் அடுத்தடுத்து காலமாகிவிட்டனர்.
இந்த வழக்கில் நீதிக்காகப் போராடிய ஒரு சமூக ஆர்வலர் தனது குடும்பத்தினரிடமிருந்து விலகி, பல கொலை முயற்சிகளை எதிர்கொண்ட போதிலும், கடைசி வரை நீதிக்கான தனது முயற்சியைத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஏதோ ஒருசிலர் தங்களது வேலையை செய்தனர், நீதிபதிகள் நீதியை வழங்கினார்கள். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள்.. அபாய கொலை செய்யப்பட்டு.. தற்போது குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுவிட்டது.
இதுதான் அத்துனை கொண்டாட்டங்களுக்கும் காரணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தொகுதிப் பங்கீடு: திமுக - மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை தொடக்கம்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

