பல் நலம் பேணுவோம்
ஆண்டவனின் படைப்பில், மனிதப் பிறவியை விட அரிதான படைப்பு என்பது எதுவுமே இல்லை என்றே சொல்லலாம்.


ஆண்டவனின் படைப்பில், மனிதப் பிறவியை விட அரிதான படைப்பு என்பது எதுவுமே இல்லை என்றே சொல்லலாம்.
எண்சாண் உடம்பில், சிரசே பிரதானம் என்பதும் யாவரும் அறிவோம். அந்த சிரசில், அதுவும், முக அமைப்பில்,முத்து போன்ற பற்களே, ஒருவரின் முக அழகினை மேலும் அழகாக்குகிறது என்றால் மிகை இல்லை.
அழகுக்கு அழகு சேர்க்கும் முத்துப் போன்ற பற்களின் பராமரிப்பைப் பற்றி, ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர், டாக்டர் ராகவேந்திர ஜயேஷ், நமக்கு சில பல் பராமரிப்பு பற்றிய தகவல்களைக் கூறுகிறார்.

உடல் ஒரு கோயில் என்றால், வாய், அதன் நுழை வாயில் என்று கூறலாம். வாயில் அமைந்திருக்கும் பற்கள் மனிதனுக்கு பல்வேறு வகைகளில் ஆரோக்கியத்தினைக் கொடுக்கின்றன.
குழந்தைப் பருவம் முதல், வயதானபின்பும், உணவினை அரைத்து உண்ணவும், தெளிவாகப் பேசுவதற்கும், முக அழகிற்கு காரணிகளாகவும் பற்கள் விளங்குகின்றன.
மனிதனுக்கு, இருவகையான பற்கள் ஆயுளில் தோன்றுகின்றன. ஆறு முதல் ஏழு மாதத்தில் பால் பற்களும், ஆறு முதல் ஏழு வயதில் நிரந்தர பற்களும் தோன்ற ஆரம்பிக்கின்றன.பல்வேறு உறுப்புக்களில் நோய் ஏற்படும்பொழுது, வாயிலும், பற்களிலும் அவற்றின் அறிகுறிகள் தென்படும்.
வாயில் ஏற்படும் நோயினால், உடலில் பல உறுப்புக்கள், இதயம், மூட்டுக்கள், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்படுகின்றன. ஆகையால், வாய் நலம் காத்தல் மிகவும் அவசியம்.
முக்கியமாக பெண்கள், பேறு காலத்தில், மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அந்தச் சமயத்தில், ஈறு சம்பந்தமான நோய்கள் வர அதிகப்படியான வாய்ப்பு உள்ளது. பெண்களின் உடலில், ஈஸ்ட்ரோஜன் என்னும் தாதுவினால், வயதிற்கு வரும்பொழுதும், மாதவிடாய் நாட்களிலும், கருவுற்றிருக்கும் காலங்களிலும் , வயதான பின் மெனோபாஸ் சமயங்கள் பொழுதும் ஈறு நோய் அதிகப்படியாக இருக்கும். அதனால், எந்த உணவைச் சாப்பிட்டாலும் சோம்பேறித்தனம் பாராமல் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும். ஈறு பாதிக்கப்படுவதைக் குறைக்க முடியும்.
கர்ப்பிணிப் பெண்கள், வாய் சுகாதாரம் பேணவில்லை என்றால், குறைகாலப் பிரசவம் ஏற்படலாம். குழந்தையின் பிறப்பு எடை கூட குறையலாம். அவர்கள் டெட்ரா சைக்ளின் எனும் மாத்திரை உட்கொண்டால், குழந்தையின் பற்கள் காவி நிறமாக அமையும். அவர்கள் ஊடுகதிர் பரிசோதனைகள் மேற்கொண்டால், குழந்தையின் பற்கள் உருமாறிப் போகலாம். ஏனென்றால், பற்களானது, தாயின் கருவறையில், ஆறாவது மாதத்திலிருந்தே உருவாகத்தொடங்கி விடுகிறது.
பொதுவாக வாயின் நோய்கள் ஆறாகப் பிரிக்கப்படுகின்றன. அவை, பற்சொத்தை, ஈறுநோய், நிலை மாறிய பற்கள், நிறம் மாறிய பற்கள், வாய் புற்று நோய், தாடை மூட்டு எலும்பு நோய் ஆகியவை ஆகும்.
பற்களில் சொத்தை ஏற்பட்டால், உணவு சிக்குதல், பல் கூசுதல், வலி , வீக்கம் போன்றவை உண்டாகும். அதை அடைப்பான்கள் மூலமாகவோ, வேர் சிகிச்சை செய்தோ காப்பாற்றிக் கொள்ளலாம்.
பற்களை சரியாக சுத்தம் செய்யாமலிருந்தால், பற்களின்மேல், ஒரு படலம் படிந்து, அதனுடன் வாயில் இருக்கும் உப்பும் சேர்ந்து, பற்காறையாக மாறி, ஈறு வீக்கத்தினை உண்டாக்கும். ரத்த கொதிப்பிற்காக உட்கொள்ளும் சில மருந்துகளாலும், வலிப்பிற்காக உட்கொள்ளும் சில மருந்துகளினாலும் ஈறுகளில் வீக்கம் ஏற்படலாம். பல் மருத்துவரிடம்,சுத்தம் செய்து கொள்வதின் மூலம் ஈறுநோய் வருவதை தவிர்க்கலாம்.
நிலை மாறிய பற்கள் அமைவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று மரபு வழி. மற்றொன்று வழி வழி வகை. விரல் சூப்புதல், நகம், பென்சில் போன்றவற்றைக் கடித்தல், நாக்கால் தெத்துதல் பற்கள் கடித்தல், வாய் வழியாக சுவாசித்தல் ஆகியவைகளைத் தவிர்க்க வேண்டும்
நிலை மாறிய பற்களை சீராக்க, க்ளிப் , ப்ரெசெஸ் அணிந்தோ அல்லது அறுவை சிகிச்சை செய்தோ சரி செய்து கொள்ளலாம்.

பற்கள் நிறம் மாறுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.ஒன்று, கருவில் இருக்கும் பொழுதே உண்டாகும் குறைபாடு. இரண்டாவதாக, புகை, புகையிலை, சில மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் பின்விளைவு மற்றும் நீரில் தாது உப்புக்கள். வெளிக்கறைகளை சலவை செய்து சரி செய்து கொள்ளலாம். உட்கறைகளைப் போக்க , காரணம் அறிந்து குணப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாய் புற்று நோய் , ஒரு உயிர்க் கொல்லி நோயாகும். புகையிலை, மது பழக்கம் முதல் காரணமாகும். வாயைத் திறக்க முடியாமல் இருந்தாலோ, வெண் படலமோ , கன்னத்தின் உட்பக்கம் சிவப்பு படலமோ இருந்தால், பல் மருத்துவரை அணுகவும்.
பிரசவ காலத்தில், தாயின் பிறவிக் குழாய் மூலமாக தலை வெளியே வரும் பொழுது ஏற்படும் சேதத்தினாலும், அடி படுவதாலும், எலும்பு நோயாலும் தாடை மூட்டு எலும்பு பாதிக்கப் படும்.இதற்கு அறுவை சிகிச்சை தான் ஒரே வழி.
பல்லு போனால் சொல்லு போய்விடும் என்று சொல்வார்கள்.
முறையான பல் பாதுகாப்பு அவசியம் வேண்டும்.அதற்கான சில டிப்ஸ் வாசகர்களுக்காக :
சிசு, கருவில் இருக்கும் பொழுது , தாயானவள், கால்ஷியம், சத்துப் பொருட்கள் நிறைந்த உணவில்லை உட்கொள்ள வேண்டும். தடை விதிக்கப்பட்ட மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது.
எக்ஸ்ரே கதிர்களைத் தவிர்க்க வேண்டும். மிருதுவான சிறிய தலை உள்ள பிரஷ் கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு தடவை பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.மூன்று மாதத்திற்கு ஒரு தடவை பிரஷ் மாற்றவேண்டும்.
பல் தேய்க்கும் பொழுது , ஈறுகளை, விரல்களால் தேய்த்து விட்டால், ஈறுகள், பலமாக இருக்கும்.
ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்பும் நன்கு வாயை கொப்பளிக்க வேண்டும், முக்கியமாக குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே சொல்லி, பழக்க வேண்டும். கொப்பளிக்க முடியாத இடத்தில், கொப்பளித்த நீரை விழுங்கி விடலாம்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை, பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
கருவிலிருந்து கடைசி வரை பல் நலம் பேணுதல் அத்தியாவசியம்.
எவ்வளவு விஷயம் பல்லில் அடங்கி இருக்கிறது. ஒருவர் நன்றாக பல் தெரியும்படி சிரிக்கவில்லை என்றால், பல்லில் ஏதோ வில்லங்கம் என்பது பரவலான கருத்து.
பற்களைப் பாதுகாப்போம். வாய்விட்டு ,பல்தெரியும்படி தைரியமாகச் சிரிப்போம். நோயும் விட்டுப் போகும் அல்லவா?
- மாலதி சந்திரசேகரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...