எப்படி மாய்ந்தனரோ?
பயங்கரக் குற்றவாளிகளை "என்கவுண்டர்' என்று சொல்லப்படும் எதிர்மறைத் தாக்குதலில் சுட்டு வீழ்த்துவது மீண்டும் மக்கள் மத்தியில் சர்ச்சைக்கு வந்துள்ளது. கோயமுத்தூரில் முஸ்கின், ரித்திக் என்ற இரு குழந்தைகளை


பயங்கரக் குற்றவாளிகளை "என்கவுண்டர்' என்று சொல்லப்படும் எதிர்மறைத் தாக்குதலில் சுட்டு வீழ்த்துவது மீண்டும் மக்கள் மத்தியில் சர்ச்சைக்கு வந்துள்ளது. கோயமுத்தூரில் முஸ்கின், ரித்திக் என்ற இரு குழந்தைகளைக் கடத்திச் சென்று கொன்ற நிகழ்ச்சி எல்லோர் நெஞ்சையும் உறையவைத்தது. என்ன பாவம் செய்தார்கள்? அந்த அப்பாவிக் குழந்தைகள்?
இத்தகைய கோர முடிவு ஏற்படுவதற்கு சாதாரணமாக எடுக்கக்கூடிய முன்ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுக்கத்தான் செய்தனர் குழந்தைகளது பெற்றோர். தமது குழந்தைகளுக்கு எல்லா வசதிகளையும் கொடுக்க வேண்டும் என்று பெற்றவர்கள் நினைப்பதில் தவறில்லை. நல்ல பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றால் அது வீட்டின் அருகில் இருப்பதில்லை. வசதிக்கு ஏற்றவாறு சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ, தனியார் வேன் அல்லது சொந்தக் காரில் அனுப்ப வேண்டும். இப்போது எல்லா நகரங்களிலும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று திரும்புவது பெரும்பாடாகி விட்டது.
தூக்கு தண்டனை மிக அரிதான வழக்குகளில் குற்றத்தின் தன்மையைப் பொறுத்தும், கிடைத்த சந்தேகமற்ற சான்றாவணங்களின் அடிப்படையிலும் அளிக்கப்படுகிறது. பல சிக்கல்களுக்கிடையில், நடந்த குற்றத்தில் வெற்றிகரமாகப் புலன் விசாரணை செய்து உரிய தண்டனை வழங்கப்பெற்ற பிறகும் நிறைவேற்றுவதில் தடங்கலும், சிக்கலும் இருப்பதால் குற்ற ஆளுமையில் நம்பிக்கை குறையும் நிலை ஏற்படுகிறது.
சமீபத்தில் சேலத்தில் ஒரு சிறுமியைக் கற்பழித்துக் கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை உச்ச நீதிமன்ற முறையீட்டில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நிகழ்ந்தது பிப்ரவரி 2009-ம் ஆண்டு. தண்டனை மார்ச் 2010-ம் ஆண்டில் வழங்கப்பட்டது. தமிழகத்தில் 16 வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.
குறைவான சக்தியைத்தான் காவல்துறை எதிரிமீது பிரயோகிக்க முடியும் என்பது சட்டம். இந்நிலையில் சந்தேகம் வரும் வகையில் பல நிகழ்வுகளில் "என்கவுண்டர்' முறையைப் பின்பற்றுவது அபாயகரமானது. கொடுங்குற்றங்கள் நிகழும்பொழுது சிலசமயம் மக்கள் மத்தியில் "என்கவுண்டர்' முறைக்கு ஆதரவு இருக்கலாம். அதற்காக கொடுங்குற்றவாளிகளின் கதையை அவ்வாறு முடிப்பது சர்ச்சைக்குரியது. நடந்த சம்பவத்துக்குத் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர்கள் பதில் அளிக்க நேரிடும்.
கேரள மாநிலத்தில் நக்சலைட் என்ற சந்தேகத்தில் விசாரிக்கப்பட்ட வர்கீஸ் என்ற இளைஞர் காவல்பிடியில் உயிரிழந்த வழக்கில், ஓய்வுபெற்ற 75 வயது நிரம்பிய காவல்துறை ஐ.ஜி. லஷ்மணன் குற்றவாளி என்று கேரள உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியதில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த காவல்பிடி மரணம் ஏற்பட்டது. ஆனால், "என்கவுண்டரில்' பங்கு பெற்ற ஒரு காவலரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. புலனாய்வு செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது எல்லா காவல்துறை அலுவலர்களையும் சிந்திக்க வைக்க வேண்டும்.
குற்றங்களின் தன்மையைப் பொறுத்து, குற்ற நிகழ்வுகள் மக்களால் உணரப்படுகிறது. எங்கு ஒரு குற்றம் நடந்தாலும் அந்தச் செய்தி தொலைக்காட்சி மூலம் பரவிவிடுகிறது. ஒருவிதத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதை உணர்த்தினாலும், மற்றொருபக்கம் இது பீதியைக் கிளப்பிவிடுகிறது என்பது உண்மை.
1978-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் நாள், கோயமுத்தூர் சம்பவம்போலவே தில்லி புத்தாபார்க் அருகில் சஞ்சய், கீதா என்ற சோப்ரா தம்பதியரின் குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பும்பொழுது பில்லா, ரங்கா என்ற இரு கொடியவர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டது இந்திய மக்களை உலுக்கியது. இந்த வழக்கில் புலன் விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகள் இருவருக்கும் தூக்கு தண்டனை 1982-ல் நிறைவேற்றப்பட்டது. குற்றவியல் ஆளுமை சிறப்பாகச் செயல்பட்டதால் மக்களின் மதிப்பைப் பெற்றது.
இந்தியாவில் ஆண்டுக்கு சராசரி 20,000 கற்பழிப்புச் சம்பவங்கள் நிகழ்கின்றன. 2008-ம் ஆண்டு 21,467 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் தில்லியில் 396 கற்பழிப்புச் சம்பவங்கள், சென்னையில் 35, மும்பையில் 218 நிகழ்வுகள். இதில் தண்டனையில் முடிவுற்ற வழக்குகள் 26 சதவிகிதம்தான். கற்பழிப்புக் குற்றத்துக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால் தண்டனையில் முடிவுறும் வழக்குகள் மேலும் குறையும்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவது கவலை தருவதாக உள்ளது. 2008-ம் ஆண்டு மொத்தக் குற்றங்கள் 22,500. அதில் தமிழகத்தில் 666 குற்றங்கள் பதிவாகியுள்ளன. குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவது, கட்டாய வேலைக்காகக் கடத்தப்படுவது, பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்துவது போன்றவை குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அடங்கும். பதினான்கு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. எல்லோருக்கும் கல்வி என்பது எந்த அளவுக்கு நடைமுறையில் உள்ளது என்று பார்க்க வேண்டும். எவ்வளவோ இல்லங்களில் குழந்தைகள் வீட்டுவேலையில் அமர்த்தப்படுகிறார்கள். கண்டும் காணாது ஏதோ நாம் அவர்களின் ஜீவனத்துக்கு உதவுகிறோம் என்று இந்தக் கொடுமைக்குக் காரணம் காட்டுகிறோம். அந்தப் பச்சிளம் குழந்தைகளின் பிள்ளைப் பிராயம் நசுக்கப்படுகிறது என்ற உண்மையைக் கவனிக்க மறுக்கிறோம்.
குழந்தைகளைக் கடத்துவதற்கும், அதைவிடக் கொடுமை - அவர்களைக் களங்கப்படுத்துவதற்கும் எவ்வாறு மனம் வருகிறது. இந்தக் கொடூர நிகழ்வுகளுக்குக் காரணம் என்ன? குழந்தைகளைப் பெற்றெடுத்து பராமரிப்பது மிகப்பெரிய பொறுப்பு. மேலை நாடுகளில் வருங்காலப் பெற்றோர்களுக்குக் குழந்தைகள் பராமரிப்புப் பற்றி வகுப்புகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அவர்கள் பொறுப்பு ஏற்கத் தயார் செய்யப்படுகின்றனர். அவசர உலகில் பல்வேறு கவன ஈர்ப்புகளின் ஊடுருவலால் குழந்தைகளைக் கவனிக்க நேரம் ஒதுக்கப்படுவதில்லை. பல்வேறு இல்லங்களில் குழந்தைகள் வீடுதிரும்பும்பொழுது வேலையாள்களைத் தவிர, மற்ற பெரியோர்கள் இருப்பதில்லை. ஏனெனில், திருமணம் முடிந்த கையோடு தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர். பொருள் ஈட்டுவதற்கு கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம். வாகன ஓட்டுநர்களையும் மற்ற உதவியாளர்களையும் நம்பியிருக்க வேண்டிய நிலை. அவர்களது பொறுப்பில் குழந்தைகள் விடப்படுகின்றனர்.
வேலைக்கு ஒருவரை அமர்த்துவதற்கு முன் ஓரளவாவது அவரது பின்னணி விசாரித்து அறியப்பட வேண்டும். அரசு வேலை அல்லது தனியார் நிறுவனங்களில் பணியமர்த்துவதற்கு முன்னர் அவரது நன்னடத்தை ஆராயப்பட்டுச் சான்றிதழ் பெறப்படுகிறது. ஆனால், நமது இல்லங்களில் வேலைக்கு வைப்பவரின் பின்னணி ஆராயப்படுவதில்லை. நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் அவசர அவசரமாக ஒருவரை வேலைக்கு அமர்த்திவிடுகிறோம். பின்னால் அவரது மோசமான நடவடிக்கை வெளிச்சத்துக்கு வரும்பொழுது வருத்தப்பட்டுப் பயனில்லை.
பல இல்லங்களில் பெரியோர்கள் இல்லாத நேரத்தில் குழந்தைகள் வீட்டு உதவியாளர்களோடு சேர்ந்து தொலைக்காட்சி பார்க்கின்றனர். இரவு நேரங்களில் எந்தமாதிரியான நிகழ்ச்சிகள் வருகின்றன என்பது கண்கூடு. "மிட்நைட் மசாலா'வாகத் தொடங்கி விரசக் காட்சிகள் இப்போது பட்டப்பகலுக்கு வந்துவிட்டன. இளம் உதவியாளர்கள் ஓய்வு நேரங்களில் எஜமானர் வீட்டிலேயே உட்கார்ந்து இத்தகைய காட்சிகளைக் கண்டு களிப்பது சகஜமாகிவிட்டது. இப்போது சின்னஞ்சிறு குழந்தைகளை ஆடவிடுகிறார்கள். அதுவும் இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்களுக்கு, வேண்டாத உடல் அசைவுகளோடு. திரும்பத் திரும்ப விரசக் காட்சிகளைக் கண்ட மயக்கத்தில் வீட்டு உதவியாளர்கள் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டியவர்கள் எந்தப் பார்வையில் அவர்களைப் பார்ப்பார்கள் என்று யூகிக்கலாம். மின்னணு ஊடகங்களின் பாதிப்பு சில அசம்பாவிதங்களுக்கு மறைமுகமாகக் காரணமாகிவிடுகின்றன என்பது உண்மை.
சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சித் தொடரில் பார்க்ககூடாத காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன என்பதால் அந்தத் தொடர் இரவு பதினோரு மணிக்கு மேல் காண்பிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சின்னத்திரையைப் பொறுத்தவரை, சுயகட்டுப்பாட்டோடு சமுதாய நலன் கருதி ஒளிபரப்பு மேற்கொள்ளும் நிலை வர வேண்டும்.
பல இல்லங்களில் பிற மாநிலங்களிலிருந்து தமிழ் தெரியாத இளைஞர்கள் வீட்டு வேலைக்கும் உதவிக்கும் அமர்த்தப்படுகின்றனர். என்ன காரணமோ சோம்பலில் சுகம் காணும் உள்ளூர்வாசிகள் வேலைக்கு வருவதில்லை. வெளிமாநிலத்தவரின் முகாந்திரம் என்ன என்றுகூட ஆய்வு செய்வதில்லை. வேலையாள்கள் மீது நம்பிக்கை வைத்தால்தான் அவர்கள் விசுவாசமாக இருப்பார்கள் என்பது உண்மையானாலும் மேற்பார்வையே இல்லாமல் முழுமையாக நம்புவது விபரீதத்தில் முடியும்.
ஒரு குற்றம் புரிந்தால் உறுதியாகத் தண்டனை கிடைக்கும், சட்டம் நம்மை விடாது என்ற பயம் இருக்க வேண்டும். சட்டம் இயற்றுகையில் குற்றத்தின் விகாரம் மற்றும் மக்கள் எதிர்பார்ப்பை வைத்து கடுமையான தண்டனை நிர்ணயிக்கப்படுகிறது. கற்பழிப்புச் சம்பவங்களின் கொடூரம் அதிகமாக உணரப்பட்டதால் கற்பழிப்புக் குற்றத்துக்கு மரண தண்டனை என்ற மாற்றம் விவாதத்தில் உள்ளது. அதிகபட்சத் தண்டனை அவசியம்தான். ஆனால், விரைவான உறுதியான தண்டனைதான் குற்றங்களைக் கட்டுப்படுத்தும்.
சட்டம் ஒழுங்கை பாரபட்சமின்றி நிலைநாட்டுவது காவல் நிலைய அதிகாரிகளின் தலையாய கடமை. காவல்துறையின் அடிப்படைப் பணிகள் குற்றங்கள் நடக்காமல் தடுப்பது, நடந்த குற்றங்களைக் கண்டுபிடித்தல், அமைதி காக்கத் தகவல் சேகரிப்பது ஆகியவை. இவை சரிவர நிறைவேற்றப்படாவிட்டால் குற்றங்கள் பெருகும். இப்பணிகளை நிறைவு செய்ய காவல் நிலையங்களைப் பலப்படுத்த வேண்டும். காவல்நிலைய அதிகாரிகள் தமது சரகத்தில் எந்த ஒரு போக்கிரியும் வாலாட்ட முடியாது என்று பெருமை கொள்ள வேண்டும். அத்தகைய தன்மானம் போற்றும் அதிகாரிகள் இருக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டால் கொடுங்குற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை. பிரச்னையை வளரவிடாமல் முதலிலேயே கிள்ளி எறிய வேண்டும். வளர விட்டுவிட்டுத் துண்டை காணோம், துணியைக் காணோம் என்று ஓடி என்ன பயன்? சட்டங்களை அமல்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கும் காவல்துறை மக்களின் ஒத்துழைப்பைப் பெற்றால்தான் பணியில் சிறப்பு எய்த முடியும். குற்றத்தடுப்பு நடவடிக்கையை மையமாகக் குறிவைத்தால் துப்பாக்கியால் எதிரிகளைக் குறிவைக்கும் நிலை வராது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...