ஐந்து நாள்களாகத் தொடர்ந்து நான்கு லட்சத்துக்கும் அதிகமாக இருந்து வந்த தினசரி கொவைட் 19 நோய்த்தொற்று பாதிப்பு, திங்கள்கிழமை முதல் குறையத் தொடங்கியிருப்பது ஆறுதல் அளிக்கும் செய்தி. கடந்த மார்ச் மாத மத்தியிலிருந்து ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்று ஏறுமுகத்திலிருந்த பாதிப்பு குறைந்திருப்பது இடைக்கால நிலைமையா அல்லது பாதிப்பில் ஏற்பட்டிருக்கும் தளர்வா என்பது போகப் போகத்தான் தெரியும்.
நேற்றைய நிலவரப்படி தேசிய அளவிலான பாதிப்பு 2,29,92,517, உயிரிழப்பு 2,49,992. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்து 38,509; உயிரிழப்பு 16,178. மகாராஷ்டிர மாநிலத்தில் மிக அதிக அளவிலும், அதைத் தொடர்ந்து கர்நாடகத்திலும், கேரளத்திலும் நோய்த்தொற்றுப் பரவல் கடுமையாகக் காணப்படுகிறது. தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரம், சத்தீஸ்கர், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் பாதிப்பு எண்ணிக்கையையும் சேர்த்தால் அது தேசிய அளவிலான பாதிப்பில் 73.91%.
நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், தடுப்பூசிகள் மூலம் நோய்த்தொற்றின் பாதிப்பிலிருந்து கூடியவரை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது உறுதிப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட தடுப்பூசித் திட்டம், உலக அளவில் வேறு எந்த நாட்டையும்விட மிக அதிகமாக 17 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி 114 நாள்களில் 17,01,76,603 தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. சீனா இந்த இலக்கை எட்ட 119 நாள்களும், அமெரிக்கா 115 நாள்களும் எடுத்துக் கொண்டன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கு இடையிலும், திட்டமிடல் குளறுபடிகளுக்கு நடுவிலும் தடுப்பூசித் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படுகிறது என்பது ஆறுதலான செய்தி.
தடுப்பூசித் திட்டம் ஓரளவுக்கு வெற்றிகரமாகச் செயல்படுகிறது என்றாலும்கூட, அரசின் அணுகுமுறையில் பல தவறுகள் இருப்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. தனியார்மயத்தின் தவறா அல்லது தனியார் நிறுவனங்களைப் பகைத்துக்கொள்ள விரும்பாத அரசின் துணிவின்மையா என்று தெரியவில்லை, தடுப்பூசிக் கொள்கையில் தடுமாற்றம் தெரிகிறது.
உலகில் தடுப்பூசிகளுக்கான இரண்டாவது பெரிய சந்தையாக இருப்பது இந்தியாதான். தடுப்பூசி ஆராய்ச்சியில் நாம் முன்னிலை வகிக்காவிட்டாலும், உலகில் மிக அதிகமாக தடுப்பூசி தயாரிக்கும் நாடாக இருப்பதும் இந்தியாதான். அப்படியிருந்தும்கூட, இந்தியாவில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு காணப்படுகிறது. தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவியிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பது மட்டுமல்ல, பல அண்டை நாடுகளுக்கு நாம் தடுப்பூசிகள் வழங்கி உதவியிருக்கவும் முடியும்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அரசு ரத்தக்குழாய் அடைப்புக்குப் பயன்படுத்தப்படும் "ஸ்டென்ட்' விலையைத் துணிந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதற்கு எதிராக மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும், "ஸ்டென்ட்' தயாரிப்பாளர்களும், விற்பனையாளர்களும் அரசுக்குக் கடுமையான அழுத்தத்தைத் தந்தனர். ஆனால், அரசியல் துணிவுடன் சாமானியர்களுக்கும் இதய சிகிச்சை சாத்தியமாக வேண்டும் என்கிற நோக்கில் அரசு செயல்பட்டபோது, அதை வியந்து பாராட்டாதவர்களே கிடையாது. அதே துணிவு இப்போது தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் அரசால் ஏன் காட்டப்படவில்லை என்கிற கேள்வியை எழுப்பத் தோன்றுகிறது.
மே, ஜூன், ஜூலை மாதங்களில் அரசுக்கு வழங்குவதற்கான 11 கோடி "கோவிஷீல்ட்' தடுப்பூசி குப்பிகளுக்கு முன்பணமாக மத்திய அரசு, அதன் தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு ரூ.1,732.5 கோடியை அண்மையில் வழங்கியிருக்கிறது. அதேபோல, ஐந்து கோடி "கோவேக்ஸின்' தடுப்பூசிக் குப்பிகளுக்கு ரூ.787.5 கோடியை முன்பணமாக அதைத் தயாரிக்கும் "பாரத் பயோடெக்' நிறுவனத்துக்கு அரசு வழங்கியிருக்கிறது.
ஒரு தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதித்த ரூ.150 வழங்கப்பட்டாலே, தடுப்பூசி நிறுவனங்கள் பெரும் லாபத்தை ஈட்ட முடியும். அப்படி இருக்கும்போது, தடுப்பூசி விற்பனையில் மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு "கோவிஷீல்ட்' ரூ. 300, "கோவேக்ஸின்' ரூ.400 என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு அதுவே ரூ.600, ரூ.1,200 என்றும் அரசே அனுமதித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
நோய்த்தொற்றுக் காலத்தில் அதைப் பயன்படுத்தி, கொள்ளை லாபம் ஈட்ட முற்படுபவரைத் தடுக்க வேண்டிய அரசு, அந்த மருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வழிகோலுவது வியப்பையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. அவர்களது அழுத்தத்திற்கு உடன்படாவிட்டால், அரசுக்குத் தடுப்பூசிகள் வழங்க மறுத்துவிடுவார்களோ என்கிற அச்சம் காரணமாக இருக்குமானால் அது அரசின் அரசியல் துணிவின்மையை காட்டுகிறது.
"கோவேக்ஸின்' தடுப்பூசி மருந்து என்பது "பாரத் பயோடெக்'கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து உருவாக்கியது. அந்தத் தடுப்பூசியை உருவாக்குவதற்கு மக்களின் வரிப்பணம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நிலையில் "கோவேக்ஸின்' தடுப்பூசி தயாரிப்புக்கான உரிமத்தை ஏனைய பல தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு வழங்கி, பலரும் தடுப்பூசி தயாரிக்க வழிகோலுவதன் மூலம் இந்தியாவின் தடுப்பூசி தேவையை ஈடுகட்ட முடியும். அரசு தயங்குவானேன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்: போக்குவரத்து அதிகாரிகளுக்கு அபராதம்

மனைவியுடன் தகராறு; கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரி அரசு சாா்பில் தியாகி அன்சாரி துரைசாமி சிலைக்கு அமைச்சா் மரியாதை

நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டம்: வெ. வைத்திலிங்கம் எம்.பி. பங்கேற்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

