உலகம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புதான். இதை ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கும் மேலாக அறிந்திருந்தும் போதுமான நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கிறோம். 1974 முதல் ஆண்டுதோறும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அப்படியிருந்தும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வு மக்கள் மத்தியில் ஏற்படவில்லை.
இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்துக்கான கொள்கை வாசகம் "சூழலியல் மீட்டெடுப்பு' என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சூழலியலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் காரணமாக பருவநிலை மாற்றமும், அதன் விளைவாக உயிரினங்களுக்கு இனப்பெருக்க அச்சுறுத்தலும் உருவாகியிருக்கின்றன. இதே நிலைமை தொடர்ந்தால், அடுத்த சில நூற்றாண்டுகளில் உலகில் மனித இனமும் அழிவை நோக்கி நகரத் தொடங்கும் என்பதை நாம் ஏனோ உணர மறுக்கிறோம்.
கடந்த ஒரு நூற்றாண்டாக உலகெங்கிலும் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. வனப்பரப்பு குறைந்து வருகிறது. இதனால், பல்வேறு உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 1970 முதல் 2016 வரையிலான 46 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு உயிரினங்களின் எண்ணிக்கை சராசரியாக 68% குறைந்திருக்கிறது. சில உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்திருக்கின்றன. வேறு பல அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
ஆண்டுதோறும் ஏறத்தாழ 1.1 கோடி டன் நெகிழிப் பொருள்கள் கடலில் கொட்டப்படுகின்றன. இதன் விளைவாக, கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலைச் சொல்லிமாளாது. அது குறித்த ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. எண்ணிலடங்கா கடல் வாழ் உயிரினங்கள் இருப்பதால், எவையெல்லாம் முற்றிலுமாக அழிந்திருக்கின்றன என்பது குறித்த சரியான புள்ளி விவரம் கிடைக்கவில்லை. நெகிழியால் ஏற்படும் அச்சுறுத்தலைப் போலவே, புவி வெப்பமயமாதலைத் தொடர்ந்து கடல்நீர் வெப்பம் அதிகரிப்பதாலும் கடல்வாழ் உயிரினங்கள் பல அழிந்து கொண்டிருக்கின்றன.
மக்கள்தொகைப் பெருக்கமும், அதனால் தேவைப்படும் கூடுதல் நிலப்பரப்பு அவசியமும் விளைநிலங்களையும், வனப்பகுதிகளையும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கின்றன. வளர்ச்சி என்கிற பெயரில் வனவிலங்கு சரணாலயங்கள்கூட விட்டுவைக்கப்படாமல் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. இதனால், வனவிலங்குகளும், பறவைகளும், புழு பூச்சிகளும் அழிவை நோக்கி நகர்கின்றன. உலகின் இயற்கை சமநிலையை நிலைநிறுத்த அவையெல்லாம் அவசியம் என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.
வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இதுவரை உலகம் ஐந்து முறை பேரழிவை எதிர்கொண்டிருக்கிறது. உலகின் ஏனைய உயிரினங்கள் பேரழிவை எதிர்கொள்ளும் போதெல்லாம் அதன் தொடர் விளைவாக மனித இனமும் ஏதாவது வகையில் பாதிக்கப்பட்டு பேரழிவுக்கு ஆளாகியிருக்கிறது. இப்போதைய சூழலியல் பாதிப்பு, உலகம் ஆறாவது பேரழிவை நோக்கி நகர்கிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.
உலகில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 42 லட்சத்திலிருந்து 70 லட்சம் பேர் காற்றுமாசால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். 10-இல் 9 பேர் அதிக அளவு மாசுபட்ட காற்றைத்தான் சுவாசிக்கிறார்கள். இது குறித்த அச்சத்தையும் எச்சரிக்கையையும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வெளிப்படுத்தியும்கூட, விழிப்புணர்வு ஏற்படாததன் விளைவைத்தான் உலகம் இப்போது எதிர்கொள்கிறது.
தற்போது உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுக்கும், சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் தொடர்பு உண்டு என்று விஞ்ஞானிகள் உறுதிபடத் தெரிவிக்கிறார்கள். தீநுண்மிப் பரவலில் காற்றுமாசு மிகப் பெரிய பங்கு வகிப்பதாகவும், அதனால் சுற்றுச்சூழலுக்கும் கொள்ளை நோய்த்தொற்று காரணமான மரணங்களுக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்பதும் அவர்களது கருத்து.
ஒருபுறம் கொள்ளை நோய்த்தொற்றை மருத்துவத் துறையினரின் உதவியுடன் உலகம் எதிர்கொண்டு வருகிறது என்றாலும்கூட, இதுபோன்ற பேரிடர்கள் மனித இனத்தை தாக்காமல் இருக்க வேண்டுமானால், சூழலியல் மீட்பு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது, ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் தடுக்கப்பட்டும், மேலும் பாதிப்புகள் ஏற்படாமலும், சூழலியல் மீட்டெடுக்கப்பட்டும், இயற்கை சமநிலையை நாம் உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
பல்லுயிர்ப் பெருக்கம் மேலும் தகர்ந்து விடாமல் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும். பருவநிலை மாற்றம் எதிர்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம்தான் மனித இனத்தின் வருங்காலத்தை உறுதிப்படுத்த முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
மனிதர்களால் ஏற்படும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தின் மூன்றில் ஒரு பங்கு, உணவு உற்பத்தித் துறையால் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதற்கு வனங்கள் அழிக்கப்பட்டு, கூடுதல் நிலங்கள் விவசாயப் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருப்பது முக்கியமான காரணம். உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ரசாயன உரங்களும், பூச்சி மருந்துகளும் அதிகமாக பயன்படுத்துவதும்கூட காரணிகள் என்பதை மறந்துவிடக் கூடாது.
இந்தியாவில் பசுமைப் புரட்சி உணவுத் தன்னிறைவையும், விவசாயிகளுக்கு அதிக மகசூலையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்றாலும்கூட, அதிகரித்த ரசாயன உரங்களின் விளைவாகப் பல்லுயிர்ப்பெருக்க பாதிப்பும், பசுமை இல்ல வாயு வெளியேற்ற அதிகரிப்பும் ஏற்பட்டிருப்பதை மறந்துவிடுகிறோம். பலவீனமான அஸ்திவாரத்தில் பலமான வீடு கட்டும் முயற்சிதான் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா - நியூசிலாந்து வணிக ஒப்பந்தம்: விவசாயிகள், இளைஞர்களுக்குப் பயன்!

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!

எஸ்பிஐ கார்டு: 4வது காலாண்டு லாபம் 14% உயர்வு!

சென்னை - நெல்லை சிறப்பு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

