நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

புதிய வெளிச்சம்!

சஹாரா டைரி குறிப்புகளின் அடிப்படையில்

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:57 am

ஆசிரியர்

சஹாரா டைரி குறிப்புகளின் அடிப்படையில், விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று "காமன் காஸ்' தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பிரசாந்த் பூஷண் தொடுத்திருந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்து நிராகரித்து விட்டிருக்கிறது. போதிய அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் விசாரணைகள் நடத்தப்படுவது சரியல்ல என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி
யிருக்கிறது. மிகவும் வரவேற்புக்குரிய தீர்ப்புகளில் இதுவும்
ஒன்றாக இருக்கும்.
சஹாரா குழுமமும், ஆதித்ய பிர்லா குழுமமும் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பலருக்கு 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் பெரிய தொகைகளைக் கையூட்டுக் கொடுத்தன என்பதுதான் குற்றச்சாட்டு. வருமானவரித் துறையும், மத்திய புலனாய்வுத் துறையும் ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஹிண்டால்கோ நிறுவனத்தின் அலுவலகத்தில் 2013-லும், சஹாரா இந்தியா நிறுவனத்தின் அலுவலகத்தில் 2014-லும் நடத்திய சோதனைகளில் பல ஆவணங்களைக் கைப்பற்றின. இதனடிப்படையில், நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான் "காமன் காஸ்' முன்வைத்த வேண்டுகோள்.
பிரசாந்த் பூஷணின் மனுவை நிராகரிக்கும்போது, காட்சி ஊடகங்கள் எப்படி இதுபோன்ற வழக்குகளில் அல்லது விசாரணை
களில் தாங்களே நீதிமன்றமாக மாறி தொடர்புடையவர்களின் நற்பெயரைக் களங்கப்படுத்துகின்றன என்பதையும் உச்சநீதிமன்றம் குறிப்பிடாமல் இல்லை.
இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு முன்னால், ஆணித்தரமான அடிப்படை ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்றும், முக்கியமான பொறுப்புகளில் இருப்பவர்கள்மீது அடிப்படை இல்லாமல் களங்கத்தை வாரிப் பூசிவிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது. அப்படியொரு விசாரணைக்கு உத்தரவிட்டால், அதுவே தலைப்புச் செய்தியாகி ஊடகங்களால் பரபரப்பு ஏற்படுத்தப்பட்டு, பொறுப்பான பதவியில் இருப்பவர்கள்மீது தீராத களங்கத்தை ஏற்படுத்திவிடும் என்றும், தண்டனை கொடுத்துவிட்டு விசாரிப்பது என்பது சரியான அணுகுமுறை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி இருப்பது வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு.
இது ஏதோ அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் தொடர்பானது என்றோ, ஊழல் வழக்குகள் தொடர்பான தீர்ப்பு என்றோ தள்ளி
விடக் கூடாது. சாமானிய இந்தியக் குடிமகனையும் பாதுகாக்கும் தீர்ப்பாகத்தான் இதை நாம் பார்க்க வேண்டும்.
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம் என்று நாம் பெருமை பேசிக் கொண்டாலும், உண்மையில் இந்தியா காவல்துறையின் சொர்க்க பூமியாகத்தான் திகழ்கிறது. இங்கே இருப்பதுபோல, சாமானியக் குடிமகனைக் கட்டுப்படுத்தும், எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் அரசாலும், காவல்துறையாலும் இம்சைப்படுத்தும் போக்கு, மிக மோசமான சர்வாதிகார ஆட்சிகளிலும்கூடக் கிடையாது. அதற்குக் காரணம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அடிமை நாட்டை நிர்வகிப்பதற்காகப் போட்ட சட்டதிட்டங்களை சுதந்திரம் அடைந்து
69 ஆண்டுகள் கடந்தும் நாம் அப்படியே வைத்துக் கொண்டிருக்
கிறோம் என்பதுதான்.
ஏனைய ஜனநாயகங்களில் வழக்குப் பதிவுக்குக்கூடத் தகுதியில்லாத சாட்சியங்கள், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இங்கே எந்தவொரு குடிமகனையும் சிறையில் தள்ளிவிட முடியும். இந்தியாவின் நீதிநிர்வாகம் என்கிற வலைக்குள் ஒரு குடிமகன் சிக்கிக்கொண்டால், அதிலிருந்து வெளியில் வர பல ஆண்டுகள் பிடிக்கும். இதற்குள் சிறை தண்டனை அனுபவித்து அல்லது பெயருக்குக் களங்கம் கற்பிக்கப்பட்டு முழுமையாக அவனது வாழ்க்கையே தகர்ந்து போயிருக்கும்.
பள்ளிக்கூடத்தில் குழந்தையொன்று தற்கொலை செய்து கொள்கிறது அல்லது திடீரென்று மரணமடைகிறது என்றால், உடனே கொந்தளிப்பு ஏற்படுகிறது. அடுத்த கட்ட நடவடிக்கை, அதற்கு எந்தவிதத்திலும் தொடர்பே இல்லாத பள்ளியின் தலைமையாசிரி
யரும், தாளாளரும் கைது செய்யப்படுவார்கள். ஊடகங்களில் அவர்களது பெயர்கள் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டு, அவர்களின் கௌரவம் சிதைக்கப்படும். கடைசியில், குழந்தையின் மரணத்துக்குக் காரணம் வேறு ஏதாவதாக இருக்கும். அது வெளியில் வரவே செய்யாது.
தண்டனைக்குப் பிறகு விசாரணை என்கிற மிகவும் மோசமான நடைமுறை இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுவதுபோல வேறு எந்த வளர்ச்சி அடைந்த நாட்டிலும் காணப்படுவதில்லை. அதுமட்டுமல்ல, தவறுகள் நடப்பதைக் கண்காணிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள் அனைத்துமே கையூட்டின் ஊற்றுக்கண்களாகவும், தவறுக்குத் துணைபோவதாகவும் அமைகின்றன என்பதுதான் நடைமுறை சத்தியம்.
நூறு குற்றவாளிகள் தப்பித்துவிட்டாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதுதான் நீதி நிர்வாகத்தின் அடிப்படை கோட்பாடு என்பது ஏட்டளவில் மட்டுமே காணப்படுகிறது. பெரும்பாலும், நிரபராதிகள் அலைக்கழிக்கப்படுவதும் குற்றவாளிகள் தப்பிவிடுவதும்தான் யதார்த்தத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
சஹாரா டைரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பால், தண்டனைக்குப் பிறகு விசாரணை என்கிற நடைமுறை கீழ்மட்டம்வரை மாற்றப்பட்டால் மட்டுமே, இந்தியாவில் நீதிநிர்வாகம் நியாயமானதாக மாறும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு புதிய வெளிச்சத்தைத் தந்திருக்கிறது. பிரதமரிலிருந்து சாமானியக் குடிமகன்வரை, ஆணித்தரமான ஆதாரங்கள் இல்லாமல் அலைக்கழிக்கப்படுவதும், சட்டத்தால் இம்சிக்கப்படுவதும் முடிவுக்கு வரவேண்டும். அதற்குத் தீர்ப்புகள் விரைந்து வழங்கப்படுவதும் அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.