நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

நிதிநிலை அறிக்கை 2017 - IV

நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுவதுபோல

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:54 am

ஆசிரியர்

நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுவதுபோல, இந்த நிதிநிலை அறிக்கையில் ஊரக வளர்ச்சிக்கு வரலாறு காணாத அளவில் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது என்பது உண்மை. இந்த
நிதிநிலை அறிக்கையே கிராமப்புற வளர்ச்சியையும், மத்திய தர, நடுத்தட்டு மக்களையும் குறிவைத்துத் தயாரிக்கப்பட்டதாகத்தான் தெரிகிறது.
நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்குக் கடந்த நிதியாண்டில் ரூ.37,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றால், இந்த நிதிநிலை அறிக்கையில், இதுவரை இல்லாத அளவுக்கு அந்த ஒதுக்கீடு ரூ.48,000 கோடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. முந்தைய மன்மோகன் சிங் அரசின் திட்டம் என்பதற்காக இது முடக்கப்பட்டு விடுமோ என்கிற அச்சம் இதன் மூலம் விலகுகிறது. கடந்த ஆண்டில் மறு மதிப்பீட்டை ஒப்பிடும்போது (ரூ.47,499 கோடி) இது அதிகமில்லை என்றாலும், ஒதுக்கீடு என்று பார்த்தால் கணிசமான உயர்வு.
கிராமப்புற வளர்ச்சிக்கு எந்த அளவிற்கு நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் பயன்படுகிறது என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. இதனால் விவசாயத்திற்கு வேலையாட்கள் கிடைப்பதில்லை என்பதும், அதனால் பலர் பயிர் செய்வதையே நிறுத்திவிட்டனர் என்பதும் உண்மை. அதே நேரத்தில், நீர்ப்பாசன வசதியே இல்லாமல் இருக்கும் மானாவாரிப் பிரதேசங்களில் இருக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் மிகப்பெரிய ஆறுதல். பல தற்கொலைகள் நிகழாமல் தடுக்கும்
திட்டம்.
ஆண்டுதோறும், பல்வேறு திட்டங்களின் மூலம், ஊரகப்புற வளர்ச்சிக்காக மட்டும் அரசு ரூ.3 லட்சம் கோடி செலவழிக்கிறது. வங்கிகள் மூலமாகவும், சுயசேவைக் குழுக்கள் மூலமாகவும் மத்திய - மாநில அரசுகள் செலவழிக்கும் தொகை இது. அப்படி இருந்தும்கூட வளர்ச்சி பெருமளவில் இல்லை என்றால் அதற்குக் காரணம், முறையான கண்காணிப்பு இல்லாமல் இருப்பதுதான். நமது நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன. ஆனால், அவை செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதில்லை. இந்த ஆண்டு நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் செலவு செய்யப்படும் தொகை முறையாக கண்காணிக்கப்படும் என்று அரசு கூறியிருக்கிறது. எதிர்பார்ப்போம்.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது உரையில் குறிப்பிட்டிருக்கும் ஒரு புள்ளிவிவரம் பாராட்டும்படியாக இருக்கிறது. நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் இந்தியா முழுவதுமாக நீர்ப்பாசனத்துக்காக பயன்படும் ஐந்து லட்சம் ஏரிகள், குளங்கள், குட்டைகள் தூர் வாரப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கு இரட்டிப்பாக நிறைவேற்றப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் தெரிவிக்கிறார். இந்த ஆண்டு மேலும் ஐந்து லட்சம் ஏரி, குளம், குட்டைகள் தூர் வாருதல் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் பாராட்டுக்குரிய முயற்சி.
ஒரு கோடி குடும்பங்களை வறுமைக் கோட்டுக்கு மேலே கொண்டு வருவது என்பதும், 50,000 கிராமப் பஞ்சாயத்துக்களை வறுமையிலிருந்து முற்றிலுமாக மீட்பது என்பதும் 2019-ஆம் ஆண்டுக்கான இலக்கு என்கிறார் நிதியமைச்சர். அண்ணல் காந்தியடிகள் பிறந்த 150-ஆவது ஆண்டை முன்னிட்டு அரசு இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறது. வரவேற்கலாம்.
அதேபோல, அடுத்த மூன்று ஆண்டுகளில் பால்வளத் துறைக்கு ரூ.8,000 கோடி என்று ஒதுக்கீடு செய்திருப்பதும் புதிய முயற்சி. உலகிலேயே மிக அதிகமாகக் கால்நடை வளர்ப்பு இருந்தும், மிகக்குறைவான அளவே பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாகவே இந்தியா தொடர்கிறது என்பதை நாம் உணர வேண்டும். நமது பாரம்பரியக் கால்நடை இனங்களைப் பாதுகாப்பது குறித்து எந்த அரசும் கவலைப்படுவதில்லை. பசுவைப் போற்றும் இந்த அரசும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
விவசாயத்துறை வளர்ச்சி பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர, அது குறித்த சரியான புரிதல் நமது ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதும், முறையான திட்டமிடல் இல்லாமல் இருப்பதும் தெளிவு. விவசாயம், ஊரக வளர்ச்சி இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பவை. 2017 - 18 நிதியாண்டில் இந்த இரண்டுக்கு
மாகச் சேர்த்து ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியாதாரம் ரூ.1,87,223 கோடி. இதுவரை இல்லாத அளவிலான ஒதுக்கீடு இது என்பதில்
சந்தேகமில்லை.
அதே நேரத்தில், கடந்த ஆண்டு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு, செய்யப்பட்ட மறு மதிப்பீட்டின்படி, இவற்றுக்கான ஒதுக்கீடு ரூ.1,67,768 கோடியாக அதிகரிக்கப்பட்டது. அதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது வெறும் 11.5% தான் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டுக்கான மறு மதிப்பீட்டில், ஒதுக்கீடு அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கலாம்.
வேளாண்துறை வளர்ச்சி 6% ஆக உயர வேண்டும் என்பதுதான் கடந்த சில ஆண்டுகளாகவே நாம் நிர்ணயித்திருக்கும் இலக்கு. விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழில்களும் இந்தியாவின் மொத்த உற்பத்தி விகிதத்தில் (ஜி.டி.பி.) 13.7%. ஏறத்தாழ 50% பேர் இதை நம்பித்தான் வாழ்கிறார்கள். மொத்த உற்பத்தியில் உலகில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.
வேளாண் வளர்ச்சி 6% என்பது இலக்காக இருந்தாலும், இந்த நிதிநிலை அறிக்கை 4.1% வளர்ச்சியையாவது அடைந்துவிட வேண்டும் என்று முனைவதாக நிதியமைச்சர் குறிப்பிடுகிறார். நிதியமைச்சரின் அறிக்கையில் காணப்படும் முனைப்பு, அரசு இயந்திரத்தின் செயல்பாட்டிலும் இருந்தால்தான் அது சாத்தியம். செலா
வணியை செல்லாததாக்கிய முடிவால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட ஊரகப் பகுதிகளில் காயத்துக்கு மருந்து தடவும் முயற்சியாக மட்டுமே தெரிகிறது இந்த நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.