நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

நிதிநிலை அறிக்கை 2017 - III

இந்த நிதிநிலை அறிக்கையில் அனைவரும் ஆகா

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:53 am

ஆசிரியர்

இந்த நிதிநிலை அறிக்கையில் அனைவரும் ஆகா ஓகோவென்று பாராட்டுவது, அரசியல் கட்சிகள் ரொக்கமாகப் பெறும் நன்கொடை வரம்பை ரூ.20,000லிருந்து ரூ.2,000மாகக் குறைத்திருப்பது. இதனால் கருப்புப் பணம் நன்கொடையாக வழங்கப்படுவது தடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பது அசட்டுத்தனம்.
இப்போது ரூ.20,000க்கு யாருடைய பெயரிலாவது கணக்கு எழுதிக் கருப்புப் பணத்தையும், லஞ்சப் பணத்தையும் நன்கொடையாக கணக்கு காட்டும் அரசியல் கட்சிகள், இனிமேல் ரூ.2,000க்கு ரசீது எழுதுவார்கள், அவ்வளவே. ரூ.2,000க்கு ஆதார் அல்லது வருமான வரி அட்டை எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அத்தனை நன்கொடைகளும் முறையானதுதானா என்று ஒவ்வொரு ரூ.2,000 நன்கொடையையும் சரிபார்ப்பது என்பது சாத்தியமா என்ன?
இந்தியாவின் மக்கள்தொகை 125 கோடி என்றால், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பவர்களின் எண்ணிக்கை அதைவிட மூன்று நான்கு மடங்கு அதிகமாக இருக்கப் போகிறது என்பதுதான் உண்மை. ரொக்கப் பரிமாற்றம் குறைக்கப்பட வேண்டும், அகற்றப்பட வேண்டும் என்று பொதுமக்களுக்கு உபதேசம் செய்யும் அரசாங்கம், அந்த நடைமுறையை அரசியல் கட்சிகளிலிருந்தல்லவா தொடங்கி இருக்க வேண்டும்?
அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை அனைத்தும் வங்கிப் பரிவர்த்தனையாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அறிவித்திருந்தால், அது பாராட்டுக்குரியது. அரசின் நோக்கம் நேர்மையானது என்று ஏற்றுக் கொள்ளலாம். எல்லோருக்கும்தான் "ஜன்தன்' திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்குகள் தொடங்க அரசு வழிகோலிவிட்டிருக்கிறதே. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் நன்கொடையை வங்கிப் பரிவர்த்தனையாக மட்டுமே பெற வேண்டும் என்று அறிவிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்?
கடந்த பல ஆண்டுகளாக, ஒவ்வொரு நிதியமைச்சரும் 80(ஐ) பிரிவின்கீழ் தொழில் நிறுவனங்களுக்குப் பல வரிவிலக்குகளை அளித்து வந்திருக்கிறார்கள். பெரும்பாலான வரிவிலக்குகள் தவறாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு, முதல் பத்தாண்டுகள் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. பெரும்பாலான தொழிற்சாலைகள் பத்தாவது ஆண்டில் மூடப்பட்டு, அதே இடத்தில் வேறு பெயரில் தொடர்ந்து நடத்தப்படுவது என்பது வழக்கமாகி விட்டிருக்கிறது. இதன் மூலம் தொடர்ந்து வரிச்சலுகை பெற்றுக் கொண்டே இருப்பார்கள்.
இதுபோல, ஏனைய பல வரிவிலக்குகள் 80(ஐ) பிரிவில் தரப்படுகின்றன. இந்தத் தேவையில்லாத பிரிவுகளால், வழக்குகள்தான் தேங்கிக் கிடக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வரிவிலக்குகளைப் படிப்படியாகக் குறைத்து வருவது, நரேந்திர மோடி அரசின் பாராட்டுக்குரிய முடிவு. வரியைக் குறைத்து, விலக்குகளை அகற்றிவிடுவதுதான் புத்திசாலித்தனமான நிர்வாகமாக இருக்க முடியும்.
இந்தியா முழுவதும், விவசாயம் கடுமையான பின்னடைவைச் சந்தித்து வரும் வேளையில், விவசாயத்துக்கான கடன் ஒதுக்கீடு, இதுவரை இல்லாத அளவுக்கு, ரூ.10 லட்சம் கோடியாக அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். ரூ.10 லட்சம் கோடியை விவசாயக் கடனாக வழங்குவதன் மூலம், செலாவணி செல்லாததாக்கப்பட்டதாலும், பருவமழை பொய்த்து விட்டதாலும் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஆறுதலைத் தர அரசு முற்பட்டிருக்கிறது. இதனால் பிரச்னை தீர்ந்துவிடாது என்றாலும், அரசு விவசாயத்தின்மீது பாராமுகமாக இல்லை என்பது தெரிகிறது.
"ஃபசல் பீமா யோஜனா' என்கிற பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு, பயிரிடப்பட்ட நிலப்பரப்பில் 30% பயிர்களுக்குக் காப்பீடு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அந்த அளவை 40% ஆக உயர்த்தி இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு 50% ஆக உயர்த்தப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். 100% பயிர்க் காப்பீடு உறுதி செய்யப்பட்டால்தான், விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.
எதெதற்கெல்லாமோ கூடுதல் வரி (செஸ்) அரசு வசூலிப்பதுபோல, விவசாயிகளுக்கும் 100% காப்பீடு வழங்குவதற்குக் கூடுதல் வரி வசூலித்தால் கூடத் தவறே இல்லை. "தூய்மை இந்தியா' திட்டத்திற்கும், சாலை மேம்பாட்டுக்கும் கூடுதல் வரி வசூலிக்கிறார்கள் எனும்போது நமக்கு உணவளிக்கும் விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டுக்காக மக்கள் கூடுதல் வரி தரத் தயாராக இருப்பார்கள்.
விவசாயக் கடன் வழங்கும் மாவட்டக் கூட்டுறவு வங்கிகளைக் கணினிமயப்படுத்துதல் என்பது வரவேற்புக்குரிய முனைப்பு. இதற்காக அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.19,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, 648 க்ரிஷி வித்யான் கேந்திரங்களில், மண் பரிசோதனைச் சாலைகளை நிறுவுவது என்பதும் பாராட்டுக்குரிய முனைப்பு. தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் மட்டுமே இனிவரும் காலங்களில் விவசாயம் தாக்குப் பிடிக்க முடியும் என்பதை உணர்ந்து அரசு செயல்படுவதை வரவேற்க வேண்டும்.
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னை குறித்துப் பேச வேண்டாம். ஆனால் கடலில் வீணாகக் கலக்கும் நதிநீரை பயன்படுத்துவது குறித்தாவது சிந்திக்க வேண்டாமா? நீர்ப்பாசனத்துக்கு உறுதி அளிக்காமல், நிதி ஒதுக்கீடு செய்வதாலும், கடனுதவி அளிப்பதாலும் மட்டுமே பயன் இல்லை.
விவசாயம் குறித்து இவ்வளவு அக்கறை காட்டும் அரசு, விவசாயத்தின் அடிப்படையான நீர்ப்பாசனத்தை உறுதி செய்ய என்னதான் திட்டம் வைத்திருக்கிறது என்று பார்த்தால், இந்த நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிக்கிறது.
- தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.