மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

நிறையும் குறையும் - IV

எந்தவோர் ஆட்சியை எடுத்துக் கொண்டாலும் நிச்சயமாக நிறையும், குறையும் இருக்கத்தான் செய்யும். குவளையில் பாதி

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:38 am

ஆசிரியர்

எந்தவோர் ஆட்சியை எடுத்துக் கொண்டாலும் நிச்சயமாக நிறையும், குறையும் இருக்கத்தான் செய்யும். குவளையில் பாதி அளவு தண்ணீர் இருக்கிறது என்றும் சொல்லலாம், குவளையில் பாதி காலியாக இருக்கிறது என்றும் சொல்லலாம். அது அவரவர் பார்வையைப் பொருத்தது.
நரேந்திர மோடி அரசின் மிகப் பெரிய பலம், வலிமையான பிரதமர் அலுவலகம். இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு இப்படியொரு சக்தி வாய்ந்த பிரதமர் அலுவலகமும், வலிமையான பிரதமரும் நமக்கு அமையவில்லை. ஆனால், அந்த பலமேதான் இந்த அரசின் மிகப் பெரிய பலவீனமும்கூட. எதற்கெடுத்தாலும் பிரதமரையும், பிரதமர் அலுவலகத்தையும் எதிர்பார்த்துத்தான் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்கிற நிலைமை.
விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான சில அமைச்சர்களைத் தவிர, ஏனையோர் நிர்வாகத்துக்குப் புதிது என்பது மட்டுமல்ல, துணிந்து முடிவுகள் எடுக்கத் தயங்குகிறார்கள் என்பதும் உண்மை. முக்கியமான பிரச்னைகளில் அமைச்சரவை கூடி முடிவெடுத்து விடுகிறது. ஆனால், சாதாரண அன்றாடச் செயல்பாடுகள் பல முடிவெடுக்கப்படாமல் தேங்குகின்றன. இது சரியான அணுகுமுறை அல்ல.
அமைச்சரவையும் சரி, குறைந்த அளவு அமைச்சர்களுடன் இருக்க வேண்டும் என்கிற நோக்கில் பல முக்கியமான துறைகளுக்குத் தனியாக அமைச்சர்கள் இல்லாமல் தொடர்கிறது. சுதந்திர இந்திய சரித்திரத்திலேயே, தமிழ்நாடு போன்ற ஏழு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுள்ள ஒரு பெரிய மாநிலத்தில் இருந்து கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சரே இல்லாமல் இருப்பது இதுதான் முதல் முறை. அதேபோல, கேரளமும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியில், அனுபவசாலி அமைச்சர்களும், பலவீனமான பிரதமரும் இருந்ததுபோய், இப்போது வலிமையான பிரதமரும் பலவீனமான அமைச்சரவையும் இருப்பதுதான் இந்த ஆட்சியின் மிகப் பெரிய பலவீனம். விரைவிலேயே தனது அமைச்சரவையைப் பலப்படுத்தி, திறமையும், அனுபவமும் உள்ள அமைச்சர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு, பிரதமர் கொள்கைகளை வகுப்பதிலும், திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்தாவிட்டால், அவரது உழைப்புக்கான பலன் கிடைக்காமல் போகும்.
அதேபோல, நரேந்திர மோடி அரசு நாடாளுமன்றத்தை நடத்தவும், தனது மசோதாக்களை சாதுர்யமாக நிறைவேற்றவும் முடியாமல் திணறுவது வெளிப்படையாகவே தெரிகிறது. மக்களவையில் பெரும்பான்மை இருப்பதுபோல, மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால், எதிர்க்கட்சிகள் எந்தவொரு மசோதாவையும் நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை போடுகின்றன என்கிற ஆளுங்கட்சியின் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல.
நரேந்திர மோடி அரசுக்காவது மக்களவையில் பெரும்பான்மை பலம் இருக்கிறது. பிரதமர் நரசிம்ம ராவுக்கு அதுகூட இருக்கவில்லை. ஆனாலும், தான் விரும்பிய அத்தனை மசோதாக்களையும் நிறைவேற்றிக் கொண்டது மட்டுமல்ல, சவாலான காலகட்டத்தில் மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்தத்துக்கும் வழிகோலித் தனது ஐந்தாண்டுப் பதவிக் காலத்தை முழுமையாக்கவும் அவரால் முடிந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. எதிர்க்கட்சிகளைக் கலந்தாலோசித்து, அரவணைத்துக் கொண்டு அல்லது பிளவை ஏற்படுத்தித் தனது மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வதில்தான் ஆளுங்கட்சியின் சாதுர்யமும் அரசியல் ராஜதந்திரமும் அடங்கி இருக்கிறது.
பா.ஜ.க.விடம், குறிப்பாக, நரேந்திர மோடியிடம் மக்கள் மிக அதிகமாக எதிர்பார்த்தது வெளிப்படைத்தன்மை. அமைச்சரவை, அமைச்சர்கள், துறைகள் எடுக்கும் எல்லா முடிவுகளும் உடனுக்குடன் சுட்டுரை மூலம் சமூக வலைதளங்களில் வெளியாகின்றன என்பது வரவேற்புக்குரியதுதான், ஐயமில்லை. அதேநேரத்தில், தகவல் ஆணையம், ஊழல் கண்காணிப்பு ஆணையம் போன்ற முக்கியமான பதவிகளில் உடனுக்குடன் நியமனங்களை மேற்கொள்ளாமல் இருப்பது, ஆட்சியின் வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குறியாக்குகின்றன. இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் போன்றவற்றில் திருத்தம் கொண்டுவர முற்பட்டது மோடி அரசு செய்ய முற்பட்ட மிகப் பெரிய முட்டாள்தனம்.
அரசு அலுவலகங்களில் ஒழுங்கும், கட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கின்றன. ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வருவது மட்டுமல்ல, அரட்டை அடிக்காமல் ஒழுங்காக வேலை பார்க்கிறார்கள் என்பதெல்லாம் உண்மை. அடிமட்ட அளவில் அரசு ஊழியர்கள் மத்தியில் இந்த ஒழுங்கும், கட்டுப்பாடும் சற்று அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும், தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு அது ஒரு முக்கியமான காரணம் என்பதையும் மறந்துவிடக் கூடாது. இதே நிலைமை, ஆரம்பத்தில் குஜராத்திலும் இருந்தது. ஐந்து ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் நரேந்திர மோடியின் ஆதரவாளர்களாக மாறினர் என்பதும் உண்மை.
மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சி அதிகாரத்தை ஒருவரிடம் அளித்திருக்கும்போது, ஒரே ஆண்டில் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் அவர் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை. பிரதமர் நரேந்திர மோடி விளையாடுவது ஐந்து ஆண்டுக்கான டெஸ்ட் பந்தயம். இதை ஒரு நாள், டி-20 கிரிக்கெட் பந்தயமாக நினைத்து விமர்சிப்பது தவறு. ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அடிப்பது என்பது எந்த கிரிக்கெட் வீரருக்கும் சாத்தியமல்ல!
புரையோடிப் போயிருக்கும் அத்தனை தவறுகளையும் ஒரே ஆண்டில் திருத்தி, திடீர் மாற்றத்தை ஏற்படுத்தப் பிரதமர் நரேந்திர மோடி ஒன்றும் மோடி மஸ்தான் அல்லவே!
(முற்றும்)


 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.