பிரதமர் நரேந்திர மோடி மீது சாட்டப்படும் இரண்டு மிகப் பெரிய குற்றச்சாட்டுகள், அவர் மதவாத சக்திகளை அடக்கி வைக்கவில்லை என்பதும், உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு முன்னுரிமை தராமல் கடந்த ஓராண்டில் 18 முறை வெளிநாடுகளுக்குப் பயணித்திருக்கிறார் என்பதும். முதலாவது குற்றச்சாட்டுக்கு அவர் அளித்திருக்கும் பதில்- "என்னைப் பொருத்தவரை எனது மதம் இந்திய அரசமைப்புச் சட்டம் மட்டுமே!' என்பது.
கடந்த ஓராண்டில் சிறுபான்மையினருக்கு எதிரான எந்தவிதமான தாக்குதலும் நடைபெறவில்லை என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் இந்தியாவில் 561 மதக் கலவரங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதில் 90 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1688 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அதில் 400 மதக் கலவரங்கள், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மே மாதம் ஆட்சி அமைப்பதற்கு முன்பு நடந்தவை. அதுமட்டுமல்ல, 2013-இல் இதே காலகட்டத்தில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கலவரங்களின் எண்ணிக்கை 694.
2002-இல் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது நடந்த குஜராத் கலவரத்தைப் பற்றியே இப்போதும் பேசிக் கொண்டிருக்கும் ஊடகங்களும், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளும் முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி ஆட்சியில் உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர் நகரில் 2013-இல் நடந்த, இன்றும்கூட நீறுபூத்த நெருப்பாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் மதக் கலவரத்தைப் பற்றிப் பேசுவதே இல்லையே, ஏன்? சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் என்பது பிரிட்டீஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியும், பிரிவினையும் நமக்குத் தந்திருக்கும் சாபம். அதற்கு நரேந்திர மோடியை அடையாளமாக்குவதும், காரணமாக்கி பயமுறுத்துவதும் வாக்கு வங்கி அரசியலே தவிர, அடிப்படை இல்லாதது. நரேந்திர மோடி அரசில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை என்பது உண்மையல்ல.
நரேந்திர மோடி மீது சுமத்தப்படும் இன்னொரு குற்றச்சாட்டு, அவர் அடிக்கடி வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது. முந்தைய பிரதமர்களைப்போல, அரசுச் செலவில் பத்திரிகையாளர்களை அவர் தன்னுடன் அழைத்துச் செல்வதில்லை என்பதேகூட இப்படியொரு குற்றச்சாட்டை ஊடகங்கள் உயர்த்திப் பிடிப்பதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.
பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடு போவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் அவரைப் பற்றிய தவறான கருத்தாக்கம் எல்லா ஊடகங்களாலும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. கடந்த தேர்தலில் மக்களின் பேராதரவு இந்திய அளவில் எதிர்ப்பாளர்களின் வாயை அடைத்துவிட்டது. ஆனால், சர்வதேச அளவில் ஏற்பட்டிருந்த களங்கத்தை அவர் துடைத்தாக வேண்டிய நிர்பந்தம் இருந்தது.
மேலும், இன்றைய சர்வதேசச் சூழலில் உள்நாட்டில் மக்கள் ஆதரவு இருப்பதால் மட்டுமே எந்தவோர் அரசும் ஆட்சியில் தொடர்ந்துவிட முடியாது. மக்கள் ஆதரவை மக்கள் வெறுப்பாக சர்வதேச சக்திகளால் மாற்றிவிட முடியும் என்பதை மத்திய ஆசிய நாடுகளிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் நாம் பார்த்துள்ளோம். உலக நாடுகளின் நட்பை பலப்படுத்துவதன் மூலம் தன் மீதான களங்கத்தைத் துடைப்பதுடன், தனது ஆட்சியையும், இந்தியாவின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த முடியும் என்று நினைத்து ஒரு பிரதமர் செயல்படுவதை நாம் எப்படிக் குறைகூற முடியும்?
முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது முழுக்க முழுக்க அமெரிக்கா சார்ந்ததாக மாற்றப்பட்டிருந்தது. அமெரிக்காவுடனான நட்புறவை மேம்படுத்துவது மட்டுமே அந்த ஆட்சியின் குறிக்கோளாக இருந்தது. கடந்த ஓராண்டு நரேந்திர மோடியின் வெளிநாட்டு அரசுமுறைப் பயணங்கள், அமெரிக்க நல்லுறவைத் தக்க வைத்துக் கொள்ளும் அதேநேரத்தில், பன்முக நட்புறவை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இப்போது உலகின் மிகப் பெரிய வல்லரசுகள் என்று கருதப்படும் அமெரிக்கா, சீனா, ரஷியா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் அனைத்துமே இந்தியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு, ஆஸ்திரேலியா, கனடா, தென் அமெரிக்க நாடுகள், கிழக்காசிய நாடுகள் ஆகியவற்றுடனும் இந்தியா முன் எப்போதும் இல்லாத நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இன்றைய உலகச் சூழலில், உள்நாட்டில் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டுமானால், வெளிநாடுகளுடனான நல்லுறவை உறுதிப்படுத்திக் கொண்டாக வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் வீட்டுக்குப் போனாரா என்று கேள்வி கேட்கும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கடந்த பத்தாண்டுகள் பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங் எத்தனை தடவை விவசாயிகளின் வீட்டுக்குப் போனார் என்று முதலில் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். நரேந்திர மோடி அரசின் முதலாண்டு ஆட்சியின் மிகப் பெரிய சாதனை, உலக நாடுகளுடனான நல்லுறவை வலுப்படுத்திக் கொண்டிருப்பதுதான்.
இதில் தன் மீதான களங்கத்தையும், தவறான அபிப்ராயங்களையும் சர்வதேச அளவில் துடைத்தெறிய வேண்டும் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் சுயநலம் இருப்பதை நிச்சயமாக மறுப்பதற்கில்லை. அதேநேரத்தில், இந்தியப் பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்கமும் அதில் இருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

