நிறையும் குறையும் - II
இதுவரை பதவி வகித்த பிரதமர்களில், அறிவுஜீவிகள், ஊடகங்கள், அரசியல் நோக்கர்கள் ஆகியோரின் எதிர்ப்புகளையும்,


இதுவரை பதவி வகித்த பிரதமர்களில், அறிவுஜீவிகள், ஊடகங்கள், அரசியல் நோக்கர்கள் ஆகியோரின் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும், எதிர்பார்ப்புகளையும் மீறி, மக்களின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்தவர்கள் இந்திரா காந்தியும், நரேந்திர மோடியும் மட்டுமே. எதிர்பார்ப்புகளையும், வம்சாவளி அரசியலுக்கு எதிரான கருத்தாக்கத்தையும் எதிர்கொள்ள இந்திரா காந்திக்கு நேரு குடும்பப் பாரம்பரியமும், அந்தக் குடும்பத்தின் மீதான அபரிமிதமான பற்றும் உதவின. ஆனால், எளிமையான பின்னணியிலிருந்து தனது சாதுர்யத்தாலும், உழைப்பினாலும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கும் நரேந்திர மோடிக்கு அத்தகைய பின்புலம் எதுவுமே இல்லை.
ஐந்து ஆண்டுகள் ஆட்சி அமைக்க மக்கள் மன்றத்தால் தனிப் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரின் ஆட்சியைப் பற்றிய கணிப்பை ஓராண்டு முடிந்ததும் எடை போடுவதேகூட சரியானதல்ல எனும்போது, நரேந்திர மோடி ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்புகளை 100 நாள், 200 நாள், 300 நாள், இப்போது ஓராண்டு என்று ஊடகங்கள் அவரது ஆட்சியைத் தொடர்ந்து அக்னி பரீட்சைக்கு உள்ளாக்குவது வேடிக்கையாக இருக்கிறது.
இதற்கு முந்தைய பிரதமர்களின் முதலாண்டு சாதனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடியின் முதலாண்டு சாதனைகளை யாரும் ஒப்பிடுவதில்லை. தேர்தல் நேரத்தில் நரேந்திர மோடி பேசிய பேச்சுகள், அளித்த வாக்குறுதிகள் ஆகியவற்றுடன் ஓராண்டு சாதனைகளை ஒப்பிடும் போக்கு காணப்படுவதால், எதிர்பார்ப்புகளுக்கும் சாதனைகளுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருப்பதாகத் தெரிகிறது, அவ்வளவே.
இரண்டு துறைகளில் நரேந்திர மோடி அரசு மிகவும் சாதுர்யமாகவும், தொலைநோக்குப் பார்வையுடனும் செயல்பட முற்பட்டிருக்கிறது. முந்தையது ரயில்வே, அடுத்தது பாதுகாப்பு. கடந்த பல வருடங்களாக, முறையான திட்டமிடல் இல்லாமல் புரையோடிப் போயிருக்கும் செயல்படாத தன்மை இந்த இரண்டு முக்கியமான துறைகளில் காணப்பட்டது. அதி நவீன ரயில்வே போக்குவரத்தும், எல்லா விதத்திலும் தயார் நிலையிலான ராணுவமும் இலக்காக்கப்பட்டிருப்பதன் விளைவை அடுத்த நான்கு ஆண்டுகளில் காண முடியும்.
நரேந்திர மோடியின் இன்னொரு வெற்றி, அண்டை நாடுகளுடனான உறவை சுமுகப்படுத்திக் கொண்டிருப்பது. வங்கதேசம் உருவானது முதல், இந்தியாவுக்கும் அந்த நாட்டுக்கும் இடையே நிலவி வந்த பிரச்னைகள் இரண்டு. முதலாவது எல்லைப் பிரச்னை, இரண்டாவது தீஸ்தா நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிரச்னைகள் தொடர்ந்தன என்பது எந்த அளவுக்கு இந்தியா மெத்தனமாக இருந்து வந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு.
வங்கதேச எல்லைக்குள் இந்தியப் பகுதிகளும், இந்தியாவின் மேற்கு வங்கம், அஸ்ஸôம், திரிபுரா, மேகாலயா மாநிலங்களுக்குள் வங்கதேசத்தைச் சேர்ந்த பகுதிகளும் 1905-இல் பிரிட்டிஷ் காலனிய அரசு நடத்திய வங்கப் பிரிவினையின் விளைவாக ஏற்பட்டுவிட்டன. சுதந்திரத்துக்குப் பிறகு இரண்டு நாடுகளுக்குமே இது மிகப் பெரிய பாதுகாப்புத் தலைவலியாகவும், குடிமக்களுக்கு வேதனையாகவும் நீடித்து வந்தன. இதுபோன்ற அன்னிய ஆளுமைக்குள்பட்ட பகுதிகளின் நிலப்பரப்பு வெறும் 5,000 ஏக்கர் மட்டுமே. உங்கள் பகுதியிலிருக்கும் இந்தியப் பகுதியை நீங்களும், எங்கள் பகுதியிலிருக்கும் வங்கதேசப் பகுதியை நாங்களும் வைத்துக் கொள்கிறோம் என்றோ அல்லது நீங்கள் இழக்க இருக்கும் அளவுக்கான நிலப்பரப்பை எல்லையோரமாக நாங்கள் தந்து விடுகிறோம் என்றோ கூறி ஒரு முடிவெடுக்கக் கூட கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டவர்கள் தயாராக இல்லை. அல்லது கவனம் செலுத்தவில்லை.
நரேந்திர மோடி பதவி ஏற்ற ஒரே ஆண்டில் இப்போது வங்கதேசத்துடன் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. விரைவிலேயே பிரதமரின் வங்கதேசப் பயணத்தில் தீஸ்தா நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னைக்கும் முடிவு காணப்படுகிறது. இது எத்தனை பெரிய சாதனை? இதைப் பற்றி பா.ஜ.க.வினருக்கே கூடத் தெரியுமா, அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்பது சந்தேகம்தான்.
வங்கதேசம் மட்டுமல்ல. இலங்கையில் இந்தியாவுக்கு சாதகமான அரசு அமைக்கப்பட்டிருக்கிறது. மாலத் தீவிலும், நேபாளத்திலும் பல ஆண்டுகளாக இருந்த இந்திய எதிர்ப்பு மறைந்து நட்புறவு மலர்ந்திருக்கிறது. பூடானுடனான உறவு மேலும் வலுப்பட்டிருக்கிறது. சீனாவுடனும் பழைய பகைக்குப் பதிலாக புதிய புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவாக, இப்போது பாகிஸ்தான் தனிமைப்பட்டிருக்கிறது.
இத்தனையையும் ஒரே ஆண்டில் சாதித்து முடித்திருக்கிறது நரேந்திர மோடி அரசு என்பது மக்கள் மன்றத்தில் ஊடகங்களால் சரியாகப் பதிவு செய்யப்படவும் இல்லை. அரசும் அதுபற்றி சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளவும் இல்லை.
"மாநில சுயாட்சி' பற்றியும், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவது பற்றியும் அரை நூற்றாண்டு காலமாகப் பேசி வருகிறோம். ராஜமன்னார் தொடங்கிப் பல குழுக்கள் நியமிக்கப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்பட்டன. முதல் முறையாக ஒரு மத்திய அரசு, வெளிவிவகாரத்திலும் சரி, பொருளாதார வளர்ச்சியிலும் சரி மாநிலங்களையும் கூட்டணி ஆக்கிக் கொள்ள முற்பட்டிருப்பது இப்போதுதான். "நீதி ஆயோக்' அமைக்கப்பட்டு, முந்தைய திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டது மட்டுமல்ல, மாநிலங்கள் தங்களது வளர்ச்சித் திட்டங்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்ள ஏதுவாகக் கொள்கை முடிவையும் மாற்றி இருப்பது நினைத்துப் பார்க்க முடியாத மாற்றம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...