பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

கருணைக் கொடை!

அருணா ஷான்பாக் உயிருக்கு நிமோனியா காய்ச்சல் கடந்த திங்கள்கிழமை முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:33 am

ஆசிரியர்

அருணா ஷான்பாக் உயிருக்கு நிமோனியா காய்ச்சல் கடந்த திங்கள்கிழமை முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. மரணத்துடனான அவரது 42 ஆண்டுப் போராட்டம் முடிந்துவிட்டது. மும்பையிலுள்ள ஒரு மருத்துவமனைச் செவிலியர் ஒருவரின் மரணத்துடனான போராட்டமும், மரணமும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், ஏன், உலகத்துக்கே பல செய்திகளையும், வழிகாட்டுதலையும் தந்திருக்கிறது என்பதுதான் இதன் பின்னால் இருக்கும் பாடம்.
 1973-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ஆம் நாள் அருணா ஷான்பாகின் வாழ்வில் கருமையான நாள். அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவருடன் அருணாவுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அந்த நிலையில், தனது பணி நேரம் முடிந்து, உடை மாற்றிக் கொண்டிருந்த அருணா ஷான்பாக், ஊழியர் சோஹன்லால் பார்த்தா வால்மீகி என்பவரால் எதிர்பாராத விதத்தில் தாக்கப்பட்டார்.
 நாயைக் கட்டும் சங்கிலியால் அருணாவின் கழுத்தை நெரித்து மயக்கமடையச் செய்தார் சோஹன்லால் பார்த்தா வால்மீகி. அருணாவுடன் பாலியல் வன்புணர்வுதான் அவரது நோக்கமாக இருந்தது. தன்னுடைய நோக்கம் நிறைவேறியவுடன், மயக்க நிலையில் கிடந்த அருணா ஷான்பாக்கை விட்டுவிட்டு அவர் ஓடிவிட்டார்.
 அருணா மயக்கமாகக் கிடந்தது அடுத்த நாள் காலையில்தான் தெரியவந்தது. அதற்குள் நிலைமை விபரீதமாகி விட்டிருந்தது. நீண்டநேரம் நாய்ச் சங்கிலியால் கழுத்து கட்டப்பட்டிருந்தால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்பட்டிருந்தது. அதன் விளைவாக அருணா ஷான்பாக்கின் மூளை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவர்களின் அனைத்து முயற்சிகளும் பயனளிக்காத நிலையில், அருணா ஷான்பாக் உயிர் இருந்தும் செயல்பட முடியாத கோமா நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்.
 அதற்குப் பிறகு நடந்ததுதான் உலகில் எங்குமே கண்டும் கேட்டும் இருக்க முடியாத அதிசயம். மும்பை கே.இ.எம். மருத்துவமனையின் ஊழியர்கள், குறிப்பாக, செவிலியர்கள், தாதிகள் உள்ளிட்டோர் "கோமா' நிலையில் இருந்த அருணா ஷான்பாக்கை தங்கள் உறவினரில் ஒருவராகக் கருதிப் பாதுகாக்க முற்பட்டனர்.
 நான்காம் எண் வார்டுடன் இணைந்த அறை அருணாவுக்காக ஒதுக்கப்பட்டது. அந்த அறையில்தான் முற்றிலுமாக செயலிழந்த நிலையில் கடந்த 42 ஆண்டுகளாக அருணா ஷான்பாக் படுத்த படுக்கையாக, சுற்றிலும் நடப்பது எதுவும் அறியாதவராக, ஆனால் சுவாசமும் இதயத் துடிப்பும் தொடர்ந்து கொண்டிருக்கத் தனது காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தார்.
 நான்காம் எண் கொண்ட வார்டை கவனிக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும், தாதிகளும் அருணா ஷான்பாக்கை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது அந்த மருத்துவமனையின் எழுதப்படாத விதியாக இருந்து வந்தது. 1973-இல் இருந்து அவரது உயிர் பிரியும் வரை அந்த மருத்துவமனையில் பணியாற்றிய அனைவருமே இந்த எழுதப்படாத விதியை, தங்கள் கடமையாகக் கருதிச் செய்து வந்திருக்கிறார்கள்.
 42 ஆண்டுகளாகப் படுத்த படுக்கையாகக் கழித்து வந்த, நினைவில்லாத நிலையில் உயிர் வாழ்ந்து கொண்டிருந்த அருணா ஷான்பாக்கிற்கு "பெட் சோர்' என்கிற நீண்ட நாள் நோயாளிகளுக்கு ஏற்படும் சரும ரணம் ஏற்படவில்லை என்றால், அதற்குக் காரணம் செவிலியர்களும், தாதிகளும் அவர்மீது செலுத்திய கவனமும், அக்கறையும்.
 தங்களது குடும்பத்தில் ஒருவராக அவரை அவர்கள் கருதியதால்தான், அருணாவின் இறுதிச் சடங்கை நடத்தும் பொறுப்பைத் தாங்களே ஏற்றுக் கொண்டனர். இத்தனை நாள் பாதுகாக்காத குடும்பத்தினர் இதற்கான செலவைச் செய்ய வேண்டியதில்லை என்று கூறிவிட்டனர்.
 2011-இல் பிங்கி விரானி என்பவர், இப்படி "கோமா' நிலையில் தொடரும் அருணா ஷான்பாக்கை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுவின் மீதான விசாரணையைத் தொடர்ந்து நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோரின் அமர்வு கருணைக் கொலை பற்றிய பல்வேறு நிலைப்பாடுகளை ஆராய்ந்து 2011 மார்ச் 7-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
 நெதர்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகள், வெவ்வேறு அளவுகோல்கள், நிபந்தனைகளின் பேரில் கருணைக் கொலையை அனுமதிக்கின்றன. 2011-இல் உச்சநீதிமன்றம், பிங்கி விரானி மனுவின் மீதான தீர்ப்பில், அந்தந்தப் பகுதியிலுள்ள உயர்நீதிமன்றங்களின் அனுமதியுடன், இதுபோன்ற நிகழ்வுகளில் கருணைக் கொலையை அனுமதிக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தது. அதே நேரத்தில், அது கொலையாக இல்லாமல் உயிரைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் பிராண வாயுவை மெல்ல மெல்லக் குறைப்பது, மருந்தைக் குறைத்துக் கொடுப்பது போன்ற முறைகளையே கையாள வேண்டும் என்று வரைமுறையையும் விதித்தது.
 உச்சநீதிமன்றம் 2011-இல் அனுமதி அளித்தும்கூட, அருணா ஷான்பாக்கின் உயிரை "கருணைக் கொலை' என்கிற பெயரால் பறிக்க மும்பை கே.இ.எம். மருத்துவமனையின் மருத்துவர்களும், செவிலியர்களும், தாதிகளும் அனுமதிக்கவில்லை. அருணா ஷான்பாக்கின் மரணத்துடனான போராட்டமும், மருத்துவமனை ஊழியர்களின் கடமை உணர்வும் இந்திய சரித்திரத்தில் அழிக்க முடியாதப் பதிவுகள்.
 25 வயதுப் பெண்ணான தனக்கு சமூகம் செய்த அநீதிக்கு எதிராக 42 ஆண்டுகள் நினைவும், செயலும் இழந்த நிலையிலும்கூட உயிரைப் பிடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினாரோ அருணா ஷான்பாக்? அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது!
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.