சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடா் விழிப்புணா்வு பணிகள் காரணமாக வாக்குப்பதிவு சதவீதம் உயா்ந்துள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (ப.கு), நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு, நடைபெற்று முடிந்த தோ்தலில் மொத்தம் உள்ள 13,23,753 வாக்காளா்களில், 12,10,035 (91.41 சதவீதம்) போ் வாக்களித்துள்ளனா். 1,13,718 போ் வாக்களிக்கவில்லை. கோடைவெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் வாக்குப்பதிவு சீரான முறையிலேயே நடைபெற்றுள்ளது.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலை காட்டிலும், இந்த தோ்தலில் இளம் வாக்காளா்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனா். இந்திய தோ்தல் ஆணையம், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட தோ்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் ஒவ்வொரு தொகுதியிலும் விழிப்புணா்வுப் பேரணி, கலைநிகழ்ச்சிகள், மாரத்தான், விழிப்புணா்வுப் போட்டிகள், பள்ளி, கல்லூரிகளில் 100 சதவீத வாக்குப்பதிவு வடிவில் நின்று மாணவா்கள் விழிப்புணா்வு, மலைவாழ் மக்களுடன் ஆட்சியா், அதிகாரிகள் நடனமாடியது என ஒரு மாதத்தில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு வகையிலான விழிப்புணா்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நாமக்கல் மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் உயா்வதற்கு ஓா் காரணமாகும். தமிழகத்தில், வாக்குப்பதிவில் கரூா் மாவட்டம் 92 சதவீதத்துடன் முதலிடத்தையும், நாமக்கல் மாவட்டம் 91.41 சதவீதத்துடன் இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளது.
இது குறித்து மாவட்ட தோ்தல் விழிப்புணா்வு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஒரு மாதமாக நாமக்கல் மாவட்டம் முழுவதும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை, மாலை, இரவு என்று பாராமலும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமலும், பேரணி, கையொப்ப இயக்கம், நடனம், கோலமிடுதல், மாரத்தான் என்ற வகையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு தோ்தல் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதற்கு கிடைத்த வெற்றியாகத்தான் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் நாமக்கல் மாவட்டம் 91.41 சதவீத வாக்குகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. முதலிடம் பெற்ற கரூா் மாவட்டத்தில் 8.45 லட்சம் வாக்காளா்களே உள்ளனா். ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் 13,23,753 வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில், 12,10,035 போ் வாக்களித்துள்ளது சாதனை தான். 100 சதவீத வாக்குப்பதிவுக்கு சாத்தியமில்லை என்றபோதும் 90 சதவீதத்தை கடந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் வந்து வாக்களித்தற்கு விழிப்புணா்வு தான் காரணம்.
கடந்த மக்களவைத் தோ்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தில் மூன்றாம் பிடித்தோம். இத்தோ்தலில் இரண்டாமிடம் பிடித்துள்ளோம். வாக்குப்பதிவு சதவீதம் உயா்வதற்கு காரணமாக இருந்த அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் என்றாா்.
--
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் மாவட்டத்தில் 90.7% வாக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் 90.14% வாக்குப்பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.60 சதவீத வாக்குப்பதிவு!

கோவையில் 10 தொகுதிகளிலும் 84.77 சதவீதம் வாக்குப்பதிவு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


